‘யாக்கை’ திரைப்படம் மூலம் வில்லன் அவதாரம் எடுத்து இருக்கிறார் ‘ஜோக்கர்’ குரு சோமசுந்தரம்

ஒரு நிமிட கதாப்பாத்திரமாக இருந்தாலும் அந்த கதாப்பாத்திரத்தை தன்னுடைய யதார்த்தமான நடிப்பால்  ரசிகர்களின் ஆழ் மனதில் பதிய வைக்கும் திறமை படைத்த  நடிகர் குரு சோமசுந்தரம். சமீபத்தில் வெளியான இவருடைய ‘ஜோக்கர்’ திரைப்படம் தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பு ரசிகர்களிடமும் அமோக பாராட்டுகளை பெற்று வரும் இந்த நிலையில், தற்போது ‘யாக்கை’ திரைப்படத்தின் வில்லனாக குரு சோமசுந்தரம் அவதாரம் எடுத்திருப்பது, தமிழக ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. குழந்தை வேலப்பன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘யாக்கை’ படத்தை ‘பிரிம் பிச்சர்ஸ்’ சார்பில் தயாரித்து  வருகிறார் முத்துக்குமரன். கிருஷ்ணா மற்றும் சுவாதி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘யாக்கை’ திரைப்படத்திற்கு யுவன்ஷங்கர் ராஜா இசையமைத்து வருவது மேலும் சிறப்பு.
 
“ஜோக்கர் திரைப்படம் குரு சோமசுந்தரத்திற்கு ஒரு முனை என்றால், ‘யாக்கை’ திரைப்படம் இதுவரை யாரும் கண்டிராத அவருடைய மறு முனை. ‘யாக்கை’ படம் மூலம் முற்றிலும் ஒரு புதுமையான குரு சோமசுந்தரத்தை ரசிகர்கள் காண இருக்கிறார்கள். நடிப்பிற்காக எந்த அவதாரம் வேண்டுமானாலும் எடுக்கும் கலைஞரான குரு சோமசுந்தரம் எங்கள் ‘யாக்கை’ படத்தில் நடிப்பது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. அதிரடி, மிரட்டல் என ஒரு சராசரியான வில்லனாக இல்லாமல் முற்றிலும் வித்தியாசமான வில்லனாக குரு சோமசுந்தரம் எங்களின் ‘யாக்கை’ படத்தில் நடித்து வருகிறார்….. ஒரு தப்பான சூழ்நிலையை உருவாக்குபவன் தான் ‘யாக்கை’ படத்தின் வில்லன்…. அந்த கதாப்பாத்திரத்தை கனகச்சிதமாக உள்வாங்கி அற்புதமாக நடித்து வருகிறார் குரு சோமசுந்தரம்… நிச்சயமாக அவருடைய இந்த வில்லன் கதாப்பாத்திரம் அனைத்து தரப்பு ரசிகர்களின் பாராட்டுகளையும் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘யாக்கை’ படத்தின் இயக்குனர் குழந்தை வேலப்பன்.