திருமண வீட்டாரின் சிரமத்தை குறைக்கும் ‘‘மை கிராண்ட் வெட்டிங் ஆப்ஸ்’
கிராமப்புறங்களில் திருமணம் நடத்துபவர்கள் இன்றும் கூட திருமணத்துக்கு தேவையானவற்றை தாங்களே பார்த்து பார்த்து வாங்குகிறார்கள்.. திருமண ஏற்பாட்டிற்கான ஒவ்வொரு விஷயத்தையும் தாங்களே தேர்வு செய்து தங்கள் விருப்பப்படி திருமண வைபவத்தை நடத்துகிறார்கள்.
ஆனால் சென்னை போன்ற பெருநகரங்களில் வசிப்பவர்களுக்கு திருமண ஏற்பாடு என்பது மலைப்பை தரும் விஷயமாகத்தான் இருக்கிறது.. மண்டபத்தில் ஆரம்பித்து, சாப்பாடு, மணவறை அமைப்பு, மேக்கப் என தனித்தனியாக ஆட்களை தேடுவதும் தேடிக்கண்டுபிடிப்பதும் அவர்களை ஒருங்கிணைப்பதும் சிரமமான ஒன்று.. இதனை கருத்திற்கொண்டுதான் ஆங்காங்கே ‘வெட்டிங் பிளானர்கள்’ எனப்படும் திருமண ஏற்பாட்டாளர்கள் உருவாக ஆரம்பித்தார்கள்..
முழு திருமணத்தையும் அவர்களே பொறுப்பெடுத்து நடத்திக்கொடுத்து, திருமண வீட்டாரின் சுமைகளை குறைத்தார்கள் என்றாலும், ஒரு திருமண நிகழ்விற்கு தேவையான அத்தனை ஏற்பாடுகளையும் அவர்களாகவே கவனித்துக்கொள்வதில் சில சங்கடங்களும் ஏற்பட்டன. அவர்கள் சொன்ன நபர்களைத்தான் ஒப்பந்தம் செய்தார்கள்.. அவர்கள் சொன்னதுதான் செலவு என்கிற நிர்ப்பந்தமும் இருக்கிறது..
இதுபோன்ற மனக்குறைகள் எதுவும் வராமல், அதேசமயம் திருமண வீட்டார் தங்களுக்கு தேவையான ஒவ்வொன்றுக்கும் நேரில் அலையாமல் இருந்த இடத்தில் இருந்தே பெறுவதற்கான வசதி இருந்தால், அதுவும் ஒரு மொபைல் போனுக்குள்ளேயே அடங்கிவிட்டால் எப்படி இருக்கும்..?
கவலை வேண்டாம்.. திருமண வீட்டார்களின் மனதை குளிர்விக்கும் விதமாக அப்படி ஒரு சிறப்பு வசதியை ஏற்படுத்தி மை கிராண்ட் வெட்டிங் நிறுவனத்தை நடத்திவரும் ஆர்.சரத் என்பவர்.. திருமண ஏற்பாடுகளை முழுமையாக கவனித்து நல்லபடியாக திருமணத்தை நடத்திக்கொடுக்கும் இவர் இந்த துறையில் சுமார் 19 வருடங்களுக்கும் மேலான அனுபவம் கொண்டவர்.. கடந்த 7 ஆண்டுகளாக இவரது மனைவி ஜென் கேத்தரினுடன் இணைந்து இந்த நிறுவனத்தை துவக்கி அதன்மூலம் திருமணம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை திறம்பட நடத்திக்கொடுத்து வருகிறார்.
இதுநாள் வரையிலான திருமண விழாக்களையும் மற்றும் பல விஷேச வைபவங்களையும் தனது மேற்பார்வையில் நடத்திக்கொடுத்த சரத், திருமண வீட்டாரின் விருப்பப்படி அனைத்தையும் அவர்களே தேர்ந்தெடுக்கும் வகையில் ‘மை கிராண்ட் வெட்டிங்’ என்கிற செயலியை (App) உருவாக்கியுள்ளார்.. ‘கங்காரு’, ‘வந்தா மல’ போன்ற படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நாயகி ஸ்ரீஜா, இந்த செயலியை பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று அறிமுகப்படுத்தினார்.
இனிவரும் காலங்களில் கம்ப்யூட்டரும், அதையும் தாண்டி ஸ்மார்ட் போனும் தான் மக்களின் கைகளை ஆக்கிரமிக்கப்போகின்றன. அதனால் திருமணம் நடத்த விரும்பும் திருமண வீட்டார்கள் இந்த செயலியை (App)உபயோகிப்பதன் மூலம், இருந்த இடத்தில் இருந்தே தாங்கள் விரும்பும் பட்ஜெட்டில் (ஒரு லட்சம் முதல் ஒரு கோடி ரூபாய் வரை), ஹோட்டல், மண்டபம், மணவறை, கேட்டரிங் என ஒவ்வொரு பிரிவிற்கும் தாங்கள் விரும்பும் நபர்களை தேர்வுசெய்து, நிகழ்ச்சிகளை சீரியமுறையில் நடத்தலாம்.. இதன் மூலம் வழக்கமாக திருமணத்திற்கு ஆகும் செலவில் சுமார் 30% வரை மிச்சமாகிறது என்கிறார் ஆர்.சரத்.
இந்த ‘மை கிராண்ட் வெட்டிங்’ நிறுவனத்துடன் சென்னை, பெங்களூர், ஹைதராபத், மும்பை, டெல்லி ஆகிய ஐந்து நகரங்களில் திருமணம் தொடர்பான சகல பணிகளையும் செய்து தரும் சுமார் 2500க்கும் அதிகமான வெண்டர்கள் (வணிகர்கள்) இணைந்துள்ளனர். வரும் நாட்களில் இன்னும் சில நகரங்களில் இந்த திட்டம் விரிவுபடுத்தப்பட இருக்கிறது. இணையதளத்தின் மூலமாகவோ அல்லது ‘மை கிராண்ட் வெட்டிங்’ ஆப் மூலமாகவோ இந்த வெண்டர்களை திருமண வீட்டாரே தேர்ந்தெடுத்து அவர்களிடம் நேரடியாக தொடர்புகொண்டு பேசிக்கொள்ளலாம். தாங்கள் விரும்பும் பாரம்பரிய முறைப்படி தங்கள் வீட்டு திருமணங்களை சிறப்பாக நடத்தலாம்.
திருமண வீட்டாரையும் வெண்டர்களையும் (வணிகர்களையும்) ஒருங்கிணைக்கும் சீரிய பணியை செய்யும் ‘மை கிராண்ட் வெட்டிங்’ நிறுவனம் இதற்காக திருமண வீட்டார்களிடம் எந்தவிதமான கட்டணமும் வசூலிப்பது இல்லை என்பதுதான் இதில் ஹைலைட்..
மேலும் திருமண வீட்டாரின் கல்யாண செலவுகளை சமாளிக்கும் விதமாக அவர்களுக்கு வங்கிக்கடன் உதவியையும் இந்த ‘மை கிராண்ட் வெட்டிங்’ நிறுவனம் ஏற்பாடு செய்து தருகிறது.
“இப்போதைக்கு திருமணம் செய்யும் ஐடியா இல்லை” ; ‘கங்காரு’ நாயகி ஸ்ரீஜா..!
“உரிய வாய்ப்பு வரும்போது விஜய் சேதுபதி அழைப்பதாக சொன்னார்” ; ஸ்ரீஜா நம்பிக்கை..!
இந்த ‘மை கிராண்ட் வெட்டிங்’ செயலியை அறிமுகப்படுத்திய நடிகை ஸ்ரீஜாவிடம் அவரது திருமணம் எப்போது என கேட்டபோது, “இன்னும் திரையுலகில் நான் சாதிக்கவேண்டியது நிறைய இருக்கிறது.. அதனால் இப்போதைக்கு திருமணம் என்கிற பேச்சுக்கு இடமில்லை.. ஆனால் திருமணம் செய்துகொள்ளும் சமயத்தில் இந்த மை கிராண்ட் வெட்டிங் எனக்கு ரொம்பவே கைகொடுக்கும் என உறுதியாக நம்புகிறேன் என்றார்..
தமிழ் நடிகைகளுக்கு சரியான வாய்ப்பு அமைவதில்லை என விஜய்சேதுபதி அமர்ந்திருந்த ஒரு மேடையிலே சில மாதங்களுக்கு முன் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தினார் ஸ்ரீஜா. இப்போது வாய்ப்புகள் ஏதும் தேடி வந்துள்ளதா என கேட்டதற்கு, அந்த நிகழ்விற்கு பிறகு விஜய்சேதுபதி உள்ளிட்ட பலர் என்னை தொடர்பு கொண்டு பேசினார்கள்.., உரிய வாய்ப்புகள் வரும்போது அழைப்பதாகவும் ஊக்கப்படுத்தியுள்ளனர். நீங்கள் இவ்வளவு தூரம் ஞாபகம் வைத்து கேட்கிறீர்கள் அல்லவா.? அதனாலேயே நான் ஒரு நல்ல இடத்திற்கு நிச்சயம் வருவேன் என நம்புகிறேன்..” என்றார் ஸ்ரீஜா.