கவுதம் ராமச்சந்திரன் இயக்கத்தில், நடிகர் நிவின் பாலி நடித்து வரும் பெயர் சூட்டப்படாத திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மத்தியில் உற்சாக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்த படத்தில் நடித்து வரும் நடிகர் – நடிகைகளும் அந்த எதிர்பார்ப்புக்கு ஒரு முக்கிய காரணம் என்பதை அழுத்தமாக சொல்லலாம். நிவின் பாலியில் ஆரம்பித்து, நட்ராஜ் சுப்ரமணியம் (நட்டி), கன்னட திரைப்படமான ‘யு – டர்ன்’ புகழ் ஷ்ரதா ஸ்ரீனிவாஸ், ‘சுட்டக்கதை’ புகழ் லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி என பல வலுவான நடிகர் – நடிகைகளை உள்ளடக்கிய இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில், தற்போது பிரகாஷ் ராஜ் ஒரு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருவது, அனைத்து தரப்பு ரசிகர்களின் ஆர்வத்தையும் அதிகரித்துள்ளது. பிரகாஷ் ராஜின் ஐம்பது சதவீத காட்சிகளை மணப்பாடு மற்றும் குற்றாலம் பகுதிகளில் படமாக்கி இருக்கிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன். தற்போது இந்த பெயர் சூட்டப்படாத திரைப்படமானது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
“சிறந்த தந்தை, உண்மையான தோழன், மிரட்டலான வில்லன் என பிரகாஷ் ராஜ் சாரை பற்றி சொல்லி கொண்டே போகலாம். ‘உணர்ச்சி’ என்ற சொல்லுக்கு அகராதியாக செயல்படுபவர் அவர் தான்….அப்படிப்பட்ட உன்னதமான கலைஞர் எங்கள் படத்தில் நடிப்பது, எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது. ஏ கே சகாயம் என்னும் பெயர் கொண்ட பாதிரியார் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார் பிரகாஷ் ராஜ் சார். அவரின் மகனாக நிவின் பாலி நடித்து வருகிறார்….கதைப்படி இவர்கள் இருவருக்கும் என்றுமே ஒற்று போகாது…என்னதான் தந்தை – மகனாக இருந்தாலும் அவர்கள் ஆலய வழிபாட்டின் போது தான் அதிகமாக சந்தித்து கொள்வார்கள்….
பிரகாஷ் ராஜ் சாரை பற்றி நமக்கு எல்லோருக்கும் நன்றாக தெரியும்…ஒரு படத்தின் கதையானது அவரது எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்தால் மட்டும் தான் அந்த படத்தில் அவர் நடிக்க ஒப்புக் கொள்வார். அந்த வகையில், எங்களின் கதையை கேட்ட அடுத்த கணமே அவர் இந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டது, எங்கள் அனைவருக்கும் உண்மையாகவே பெருமையாக இருக்கிறது…” என்று மகிழ்ச்சியாக கூறுகிறார் இயக்குனர் கவுதம் ராமச்சந்திரன்.