இந்த ஆண்டு வெளியான ‘கான்ஜுரிங் 2’ திரைப்படத்தை பார்த்த பலர், தங்கள் தூக்கத்தை பயத்தினால் தியாகம் செய்திருப்பதை நாம் எல்லோரும் நன்கு அறிவோம். தற்போது அந்த வரிசையில், தமிழக ரசிகர்களின் பயத்திற்கு காரணமான திரைப்படமாக வலம் வந்து கொண்டிருக்கிறது சமீபத்தில் வெளியான ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம். விஷாகா சிங்கின் பேய் அவதாரம் தான் அந்த பயத்திற்கு காரணம் என்பதை உறுதியாகவே சொல்லலாம். ‘ஆக்டோஸ்பைடர் புரொடக்ஷன்’ சார்பில் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம் தயாரித்து, அறிமுக இயக்குனர் மணிஷர்மா இயக்கி இருக்கும் ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படமானது, தமிழக ரசிகர்கள் மட்டுமின்றி, சினிமா விமர்சகர்கள் மத்தியிலும் அமோக பாராட்டுகளை பெற்று வருகிறது. இந்த ‘பயம் ஒரு பயணம்’ திரைப்படம் மூலம், ஒரு சிறந்த அறிமுக இயக்குனராக மணிஷர்மா தன்னை தமிழ் சினிமாவில் நிலை நிறுத்தி கொண்டுள்ளார் என்பதை வெகுவாக சொல்லலாம். பயம் ஒரு பயணம் வெளியாகி நான்கு நாட்கள் ஆகி இருந்தாலும், ஒரு உண்மையான திகில் அனுபவத்திற்காக ரசிகர்கள் பலர், இந்த படத்தை பார்ப்பதற்கு படையெடுத்து சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
‘பயம் ஒரு பயணம்’ படத்தின் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்த டாக்டர் பரத் மற்றும் மீனாக்ஷி தீட்சித் ஆகியோர் தங்களின் எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் கை தட்டல்களை பெற்று இருக்கின்றனர். “தொடர்ந்து நல்ல விமர்சனங்களை எங்களது ‘பயம் ஒரு பயணம்’ பெற்று வருவதை பார்க்கும் பொழுது எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முழுக்க முழுக்க காரணம், எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவினரின் ஒத்துழைப்பும், கூட்டு முயற்சியும் தான். எங்களின் இந்த வெற்றிக்கு முதுகெலும்பாக செயல்பட்ட ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் தயாரிப்பாளர்கள் எஸ் துரை மற்றும் எஸ் சண்முகம், இயக்குனர் மணிஷர்மா, விஷாகா சிங், மீனாக்ஷி தீட்சித், ஒளிப்பதிவாளர் ஆண்ட்ரு மற்றும் இசையமைப்பாளர் ஒய். ஆர் பிரசாத் ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்…இந்த வெற்றியின் மூலம் , ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ய வேண்டும் என்ற எனது எண்ணம் மேலும் அதிகரித்துள்ளது…” என்கிறார் ‘பயம் ஒரு பயணம்’ படத்தின் கதாநாயகன் டாக்டர் பரத்.