“உலகில் எந்த மூலைக்கு சென்றாலும் நம் தாய் மண் இந்தியா போல் எங்கும் கிடையாது…” அத்தகைய வளங்களை நம் பாரத தாய் நமக்காக வழங்கியுள்ளார். 70 ஆம் ஆண்டு சுதந்திர தினத்தில் அடியெடுத்து வைத்திருக்கும் நம் நாட்டிற்காக “தேசமே…” என்னும் பாடலை வெளியிட்டுள்ளார் பாடலாசிரியரும், ‘டூப்பாடூ’ வின் துணை நிறுவனருமான மதன் கார்க்கி. குரங்கன் இசை குழுவினரின் கேபர் மற்றும் டென்மா இசையமைத்திருக்கும் இந்த “தேசமே…” பாடலை சக்திஸ்ரீ கோபாலன் (நெஞ்சுக்குள்ள, நான் நீ புகழ்) மற்றும் சிட் ஸ்ரீராம் (அடியே, தள்ளி போகாதே புகழ்) பாடியுள்ளனர்.
நம் நாட்டில் உள்ள நூறு கோடிக்கும் மேலான மக்கள் அனைவருக்கும், நம் பாரத தாய் நமக்கு செய்த நன்மைகளுக்காக இந்த “தேசமே…” பாடல் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகளை விட மிக குறுகிய காலத்தில் இத்தகைய உயரத்தை நம் இந்தியா எட்டியுள்ளது என்பதை நினைவுக்கூறும் விதத்தில் இந்த பாடல் அமைந்திருக்கிறது. நம் வாழ்க்கையில் பல்வேறு கட்டங்களை நாம் கடந்து வந்திருப்போம். அந்த கட்டத்தில் நாம் அனுபவித்த பல மகிழ்ச்சியான தருணங்களை எடுத்துரைப்பதே இந்த “தேசமே…” பாடல். நாட்டுப்பற்று தாளத்துடன் மெல்லிசையாக தவழ்ந்து ஓடும் ‘தேசமே…” பாடல் நம் உணர்வுகளை தூண்டி நம்மை மெய்சிலிர்க்க வைக்கும் என்பதை உறுதியாகவே சொல்லலாம்.
“சில வருடங்களுக்கு முன்பு நம் பாரத தாய் நமக்கு செய்த நன்மைகளை நினைத்து அவர்களுக்கு எழுதிய பாடல் தான் தேசமே. சரியான நேரத்திற்காக நான் காத்திருக்கும் போது தான் குரங்கன் இசை குழிவினரின் அற்புதமான பாடல்களை கேட்டேன். அடுத்த கணமே கேபர் மற்றும் டென்மாவிடம் இந்த பாடலுக்கு இசையமைத்து தருமாறு நான் கேட்க, அவர்கள் இந்த தேசமே பாடலை மிக அழகாக உருவாக்கி தந்திருக்கின்றனர். சக்திஸ்ரீ மற்றும் சிட் ஸ்ரீராம் ஆகிய இருவரும் தங்களின் தேசப்பற்று குரலால் பாடலுக்கு உயிர் கொடுத்துள்ளனர். தேசமே… நாட்டிற்காக நாங்கள் அர்ப்பணிக்கும் ஓர் எளிய காணிக்கை…’ என்கிறார் மதன் கார்க்கி.