கபாலி படத்தை பார்த்த பிறகு “மகிழ்ச்சி…” என்று கூறினார் மத்தேயு ஹேடன்

தற்போது தமிழ்நாட்டின் தலைப்பு செய்தியாக மக்கள் மத்தியில் பரவி கொண்டிருக்கும் ஒரு பெயர் மத்தேயு ஹேடன். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான  ‘தமிழ்நாடு பிரீமியர் லீக்’ போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும்  மத்தேயு ஹேடனுக்கும், நம் தமிழக மக்களுக்கும் எப்போதுமே ஒரு இனம் புரியாத அன்பு இருந்து வருகிறது. ‘சென்னை சூப்பர் கிங்ஸ்’ அணிக்காக தன்னுடைய ‘மங்கூஸ்’ எனப்படும் பிரத்தியேக மட்டையால், பந்தை அரங்கத்திற்கு வெளியே இவர் பல முறை அடித்ததே அதற்கு முக்கிய காரணம்.  திருநெல்வேலியின் பிரசித்தி பெற்ற இருட்டு கடை அல்வா, தமிழ்நாட்டின் பாரம்பரிய அடையாளமாக திகழும்  மதுரை மீனாட்சி அம்மன் கோவில் என தமிழ்நாட்டை வலம் வந்து கொண்டிருக்கும் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர ஆட்டக்காரர்  மத்தேயு ஹேடன், தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி’ படத்தை சென்னையில் உள்ள ‘ஆல்பர்ட்’ திரையரங்கில் பார்த்து ரசித்திருக்கிறார். ‘ஆல்பர்ட்’ திரையரங்கின் உரிமையாளர் முரளிதரன் தான்   தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்களின் சார்பில் விளையாடும் ‘டியூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் என்பது குறிப்பிடத்தக்கது. ‘கபாலி’ படத்தில் ரஜினிகாந்தின் நடிப்பை பார்த்து வியந்து போன மத்தேயு ஹேடன், திரையரங்கை விட்டு வெளியே வந்தவுடன்  ரசிகர்களை நோக்கி “மகிழ்ச்சி…” என்று கூற, ரசிகர்கள் யாவும் உற்சாக வெள்ளத்தில் ஆர்ப்பரித்தனர்.