அப்பா – மகன் உறவை மையமாக கொண்டு உருவாகி இருக்கிறது அஸ்வின் – சுவாதி ரெட்டி நடிக்கும் ‘திரி’ திரைப்படம்

301
தமிழ் சினிமாவில் தந்தை – மகன் உறவை மையமாக வைத்து வந்த படங்கள் குறைவு என்றாலும், அவை யாவும் தமிழக ரசிகர்களின் உள்ளங்களில் ஆழமாக பதிந்த திரைப்படங்கள் ஆகும். தற்போது அந்த வரிசையில் இணைய தயாராகிவிட்டது அஸ்வின் கக்கமனு – சுவாதி ரெட்டி முன்னணி கதாப்பாத்திரங்களில் நடிக்கும் ‘திரி’. ‘சீஷோர் கோல்ட் புரொடக்ஷன்ஸ்’ சார்பில் ஏ.கே. பாலமுருகன் மற்றும் ஆர். பி. பாலகோபி தயாரித்து வரும் இந்த ‘திரி’ படத்தை அறிமுக இயக்குனர் அசோக் அமிர்தராஜ் இயக்கி இருக்கிறார். எம். வெற்றிக்குமரன், எஸ். ஆண்டோன் ரஞ்சித் மற்றும் எஸ். ஜான் பீட்டர் ஆகிய மூவரும் இந்த ‘திரி’ படத்திற்கு  இணை தயாரிப்பாளர்களாக மட்டுமில்லாமல் தங்களின் முழு ஆதரவையும், ஒத்துழைப்பையும் கொடுத்து  வருவது ‘திரி’ படத்திற்கு பக்கபலம்.
அஸ்வினின் அப்பாவாக ஜெயபிரகாஷ், அம்மாவாக அனுபமா குமார், மிரட்டலான வில்லனாக  ஏ.எல். அழகப்பன்  மற்றும் முக்கிய கதாப்பாத்திரங்களில்  கருணாகரன், சென்ட்ராயன், டேனியல் ஆகியோர் இந்த ‘திரி’ படத்தில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.  இசையமைப்பாளராக ‘சூப்பர் சிங்கர்’ புகழ் அஜீஸ் (அறிமுகம்)  , பாடலாசிரியாக கவிப்பேரரசு  வைரமுத்து,  ஒளிப்பதிவாளராக கே.ஜி. வெங்கடேஷ் (சதுரங்க வேட்டை), படத்தொகுப்பாளராக எஸ்.பி. ராஜா சேதுபதி (சதுரங்க வேட்டை), நடன இயக்குனராக தினேஷ், ஸ்டண்ட் மாஸ்டராக தளபதி தினேஷ் என பல வலுவான தொழில்நுட்ப கலைஞர்கள் இந்த ‘திரி’ படத்திற்கு பக்கபலமாய் அமைந்துள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த ‘திரி’ படத்தின் ஒரு பாடலுக்கு இசையமைப்பாளர் எஸ் எஸ் தமன் இசையமைத்திருப்பது மேலும் சிறப்பு.
“நாம் எவ்வளவு தான் வாழ்க்கையில் வெற்றிகளை குவித்தாலும், நம்முடைய தாய் – தந்தை அதை பார்க்க இல்லையென்றால் அந்த வெற்றிகள் யாவும் முழுமை பெறாது…இந்த கருத்தை ‘திரி’ படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகர்களும் உணருவர்.  நாம் ஒவ்வொருவரும் நம் நிஜ வாழ்க்கையில் சந்தித்த…சந்தித்து கொண்டிருக்கும்…சந்திக்க போகும் முக்கியமான பிரச்சனையை  எங்களது ‘திரி’ படமானது  ரசிகர்களுக்கு எடுத்து உரைக்கும். படத்தின் காட்சிகள் யாவும் மிக யதார்த்தமாக இருக்க வேண்டும் என எண்ணி, பெரும்பாலான காட்சிகளை இயற்கையான சூழ்நிலைகளில் தான் படமாக்கி இருக்கிறோம். மிக பிரமாண்டமான முறையில் எடுக்க பட்டிருக்கும் எங்களது ‘திரி’ படத்தின் கிளைமாக்ஸ் காட்சியானது நிச்சயம் எல்லா ரசிகர்களையும் வியப்படைய செய்யும்… ” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார்  ‘திரி’ படத்தின் இயக்குனர் அசோக் அமிர்தராஜ். குடும்ப உறவுகளை மிக நுணுக்கமாக சொல்ல இருக்கும் ‘திரி’ படமானது செப்டம்பர் மாதத்தில் வெளி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Previous articleThiri Movie Stills
Next articleDharma Durai Trailer Review