‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது, வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி நடைபெறுகிறது

மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நடித்த ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படம் எம்.ஜி.ஆர் ரசிகர்களுக்கு பல விதங்களில் ஸ்பெஷலானது. ஆர். எம் வீரப்பன் தனது சத்யா மூவிஸ் பட நிறுவனம் சார்பில் எம்.ஜி.ஆர் அவர்களை வைத்து எடுத்த ஐந்தாவது படம் இது. சிறப்பான கதையம்சமும், இனிமையான பாடல்களும், எம்.ஜி.ஆர் அவர்களின் ஸ்டைலான நடிப்பும், ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளும் ரசிகர்களை மட்டுமின்றி அனைத்து தரப்பு மக்களையும் கவர்ந்து, 1971 ஆம் ஆண்டில் வெளியான படங்களிலேயே ‘ரிக்‌ஷாக்காரன்’ திரைப்படம் பிரம்மாண்டமான வெற்றிப்படமாக அமைந்தது, மேலும் இந்த படத்தில் மூலம் தான் மஞ்சுளா கதாநாயகியாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. அசோகன், மேஜர் சுந்தரராஜன், மனோகர், தேங்காய் சீனிவாசன், சோ, பத்மினி என்று படத்தில் நட்சத்திர பட்டாளம் இருப்பது மட்டுமல்ல, அவர்களது கதாப்பத்திரங்களும் சிறப்பாக அமைந்து நவரசங்களை வெளிப்படுத்தின.
“அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…”, “அழகிய தமிழ் மகள் இவள்…”, “கடலோரம் வாங்கிய காற்று…”, “பம்பை உடுக்கை கொட்டி…” என இந்த படத்தின் பாடல்கள் ஒவ்வொன்றும் தேனாறு என்று சொன்னால் அதி மிகையாகாது. அதுமட்டுமின்றி, இந்த படத்தில் நடித்ததற்காக 1971 ஆம் ஆண்டின் இந்தியாவிலேயே சிறந்த நடிகருக்கான மத்திய அரசின் பாரத் விருது எம்.ஜி.ஆருக்கு கிடைத்ததோடு, பாரத் விருது பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற புகழையும் அவருக்கு பெற்று தந்தது. இப்படி பல சிறப்பம்சங்களை உள்ளடக்கி, ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பெருமை தேடி தந்த ‘ரிக்‌ஷாக்காரன்’ படமானது தற்போது நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மெருகேறி, மீண்டும் ஒருமுறை தமிழக ரசிகர்களுக்கு விருந்தாக அமைய இருக்கிறது. இதன் முதற்படியாக  நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகி இருக்கும்  ‘ரிக்‌ஷாக்காரன்’ படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழாவானது, வருகின்ற ஆகஸ்ட் 21 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.01 மணியளவில், சென்னையில் உள்ள ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் நடைபெற இருக்கிறது. திரு ஆர்.எம்.வீரப்பன் தலைமை தாங்கும் இந்த விழாவில் தமிழ் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளர்கள், விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்கள், இயக்குனர்கள், நடிகர் – நடிகையர்கள் தொழில் நுட்ப கலைஞர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் என பலர் பங்கு பெறுவது குறிப்பிடத்தக்கது.
சத்யா மூவிஸ் தயாரித்து வெளியிட்ட இந்த ‘ரிக்‌ஷாக்காரன்’  படத்தின் டிஜிட்டல் பதிப்பை வெளியிடுகின்றனர் ‘குவாலிட்டி சினிமா’ நிறுவனத்தின் உரிமையாளர்கள்
பி. மணி, டி.கே. கிருஷ்ணகுமார் மற்றும் ‘பிலிம் விஷன்’ நிறுவனத்தின் உரிமையாளர் கே. ராமு. ” இந்த விழாவை நாங்கள் எந்த அரங்கில் வைத்திருந்தாலும், இப்படி ஒரு சிறப்பு எங்களுக்கு அமைந்திருக்காது. ஏனென்றால், இதே ‘தேவி பாரடைஸ்’ திரையரங்கில் தான் கடந்த 1971 ஆம் ஆண்டு ‘ரிக்‌ஷாக்காரன்’ படம் வெளியிடப்பட்டது. தற்போது அதே இடத்தில் அந்த படத்தின் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் உருவாகியுள்ள டிரைலரையும், பாடல்களையும்  வெளியிடுவது எங்களுக்கு எல்லையற்ற மகிழ்ச்சி மட்டுமின்றி பெருமையாகவும் இருக்கிறது .மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் ரசிகர்கள் ஒவ்வொருவரும் இதில் வந்து கலந்து கொண்டு, விழாவை சிறப்பிக்குமாறு அன்போடு கேட்டு கொள்கிறேன்…” என்று கூறுகிறார்  ‘குவாலிட்டி சினிமாவின்’  டி.கே. கிருஷ்ணகுமார்.
Previous articleYaanum Theeyavan Audio & Trailer Launch Stills
Next articleNamadhu Movie Review