இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்தது ஒரு மூன்று வீரர்களையாவது டூட்டி பேட்ரியாட்ஸ் அணி பெற்று தரும் – தினேஷ் கார்த்திக்

“வெயிலோடு விளையாடி, வெயிலோடு உறவாடி, வெயிலோடு மல்லுக்கட்டி ஆட்டம் போட்டோமே…” என்ற பாடல் வரிகள்  தென் மாவட்டங்களில் உள்ள கிரிக்கெட் ரசிகர்களுக்கு மிகவும் பொருத்தமானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. அதை உறுதி படுத்தும் வண்ணமாக தலை தூக்கி இருக்கிறது தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் சார்பில் களம் இறங்க போகும்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி. ஒருபுறம் 2016 ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகளுக்கான வேலைகள் மும்மரமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் தமிழ்நாட்டில் நடைபெற இருக்கும் ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ ஆட்டமும் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சூடு பிடிக்க தொடங்கிவிட்டது. வலுவான இளம் கிரிக்கெட் வீரர்களை கொண்டு உருவாகியுள்ள  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன் நேற்று சென்னையில் தங்கள் அணியின் முக்கிய ஆட்டக்காரர்களை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தினார். இந்த நிகழ்ச்சியில்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக், முன்னணி பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி, இந்திய ‘A’ அணியின்  அபினவ் முகுந்த்,  சென்னையை சேர்ந்த வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’ சுந்தர்,  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ பயிற்சியாளரரும்,  முன்னாள் ‘ரஞ்சி கோப்பை’ விளையாட்டு  வீரருமான ஜே. ஆர். மதனகோபால், ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் பந்து வீச்சு பயிற்சியாளர் கோகுல கிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.
 “இவ்வளவு பெரிய  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக  விளையாடுவதை நான் பெருமையாக கருதுகிறேன், இப்படி ஒரு அருமையான வாய்ப்பை எனக்கு அளித்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன். இந்திய அணியின் சிறந்த வீரர்களான தினேஷ் கார்த்திக் மற்றும் லக்ஷ்மிபதி பாலாஜி ஆகியோருடன் இணைந்து  இந்த ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்காக விளையாடுவது எனக்கு சிறந்த அனுபவங்களை பெற்று தரும் என எதிர்பார்க்கிறேன்…”என்று கூறினார் சென்னையை சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரர் ‘வாஷிங்டன்’ சுந்தர்.
“வெறும் ஒரு கிரிக்கெட் போட்டியாக மட்டுமில்லாமல் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு ஒரு அடித்தளமாகவும் இந்த ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’ அமையும் என்பதை நான் உறுதியாக நம்புகிறேன். தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்ட மக்களுக்காக  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியில் இணைந்து நான் விளையாடுவது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கிறது…’ என்கிறார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் முன்னணி வீரர் அபினவ் முகுந்த்.
“தமிழ் நாட்டின் தென் மாவட்டங்களில், குறிப்பாக தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி பகுதிகளில் பல திறமை படைத்த இளம் கிரிக்கெட் வீரர்கள் வெளியே தெரியாமல் இருந்து வருகின்றனர். இந்த தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016′ போட்டியின் மூலம் பல புது புது ஹீரோக்கள், புது புது நாயகன்கள்  உருவாக போகின்றனர். அதற்கு விதையாக  எங்கள்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி செயல்படும்…’ என்கிறார்  ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’  அணியின் முன்னணி பந்து வீச்சாளர் லக்ஷ்மிபதி பாலாஜி.
“எப்படி சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையே ஒரு ஆரோக்கியமான போட்டி இருந்ததோ, அதே போல் எங்கள் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணிக்கும் சென்னையின் “சேப்பாக் சூப்பர் கில்லிஸ்’ அணிக்கும்  இடையே ஒரு நட்பு  ரீதியான போட்டி இருக்கும் என எதிர்பார்க்கிறேன்… நிச்சயம் நம் இந்திய கிரிக்கெட் அணிக்காக குறைந்தது ஒரு மூன்று வீரர்களையாவது ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி பெற்று தரும் என்பதில் எனக்கு எந்த சந்தேகமும் இல்லை…’ என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்.
“தூத்துக்குடி – திருநெல்வேலி மாவட்டங்கள் மட்டும் இல்லை…தமிழ்நாட்டின் எல்லா மாவட்டத்திலும் உள்ள இளம் கிரிக்கெட் வீரர்களுக்கு மைல் கல்லாக அமைய இருக்கும் போட்டி ‘தமிழ்நாடு பிரீமியர் லீக் – 2016’. இந்த போட்டியின் முக்கியத்துவத்தையும், சிறப்பையும் மூலை முடுக்கெல்லாம் கொண்டு போய் சேர்க்கும் வலிமை ஊடகங்களுக்கு மட்டும் தான் இருக்கிறது…இருட்டில் ஒளிந்து கிடக்கும் பல இளைஞர்களின் திறமையை எங்களின் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணி வெளிச்சத்திற்கு கொண்டு வரும்..’ என்று நம்பிக்கையுடன் கூறினார் ‘டூட்டி பேட்ரியாட்ஸ்’ அணியின் உரிமையாளர் ‘ஆல்பர்ட்’ முரளிதரன்.
Previous articleஎங்களின் பிரிவிற்கு என்ன காரணம் என்பது எனக்கு மட்டும் தான் தெரியும் – விஜய்
Next articleதிரைக்கு வர தயாராகிவிட்டது ‘ரெமோ’…