சில சந்தர்ப்ப சூழ் நிலைகளால் காதலர்களுக்குள் விரிசல் ஏற்பட்டாலும், உண்மையான காதலானது அவர்களை எப்படிப்பட்ட தருணத்திலும் ஒன்று சேர்க்கும் என்பதை மிக இயல்பாக ரசிகர்களுக்கு எடுத்து சொன்ன திரைப்படம், இயக்குனர் மீரா கதிரவன் இயக்கிய ‘அவள் பெயர் தமிழரசி’. தன்னுடைய எதார்த்தமான கதை களத்தால் ரசிகர்களின் பாராட்டுகளையும், சினிமா விமர்சகர்களின் பாராட்டுகளையும் வெகுவாக பெற்ற இயக்குனர் மீரா கதிரவன் தற்போது ‘விழித்திரு’ என்ற படத்தை இயக்கி இருக்கிறார். மிக பெரிய நட்சத்திர பட்டாளத்தின் கூட்டணியில் உருவாகி இருக்கும் இந்த ‘விழித்திரு’ திரைப்படத்தில் கிருஷ்ணா,விதார்த்,வெங்கட்பிரபு ,தம்பி ராமய்யா, எஸ்பி.சரண், தன்ஷிகா,அபிநயா,ராகுல் பாஸ்கரன், எரிக்கா ஃபெர்ணாண்டஸ்,பேபி சாரா, சுதா சந்திரன் மற்றும் தெலுங்கில் நூற்றுக்கும் அதிகமான படங்களில் நடித்தவரும் சிரஞ்சீவியின் தம்பியுமான நாகபாபுவும் நடித்திருக்கிறார்கள். ‘மெயின்ஸ்ட்ரீம் சினிமா புரடக்ஷன்ஸ்’ சார்பில் இந்த ‘விழித்திரு’ படத்தை தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து தயாரித்து – இயக்கி இருக்கிறார் இயக்குனர் மீரா கதிரவன்.
‘விழித்திரு’ திரைப்படத்தில் டி.ராஜேந்தர், சுப்ரமண்ய நந்தி மற்றும் தமயந்தி எழுதிய பாடல்களுக்கு இசையமைத்திருக்கிறார் அறிமுக இசையமைப்பாளர் சத்யன் மகாலிங்கம். அது மட்டுமின்றி தமிழ் சினிமாவில் முதல் முறையாக டி.ராஜேந்தர், விஜய் ஆண்டனி,ஜி.வி. பிரகாஷ்குமார், சந்தோஷ் நாராயணன், எஸ்.எஸ்.தமன்,சி.சத்யா,அல்ஃபோன் ஸ் என ஏழு இசையமைப்பாளர்கள் இந்த ‘விழித்திரு’ படத்தில் ஆறு பாடல்களைப் பாடியிருப்பது குறிப்பிடத்தக்கது. விஜய் மில்டன், ஆர்.வி,சரண் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த ‘விழித்திரு’ படத்திற்கு படத்தொகுப்பாளராக கே.எல். பிரவீன், கலை இயக்குனராக எஸ்.எஸ். மூர்த்தி, ஆகியோர் பணியாற்றி இருப்பது மேலும் சிறப்பு.
“நான்கு வேறுபட்ட சம்பவங்களில் தொடர்புடைய மனிதர்கள் ஒரு புள்ளியில் இணைந்து தொடர்ந்து பயணிக்கும் கதை தான் ‘விழித்திரு’. கதை முழுவதும், ஒரு இரவில் சென்னையின் பல பகுதிகளிலுள்ள சாலைகளில் நடப்பதால்,அதிகப்படியான படப்பிடிப்பு காலத்தையும் உழைப்பையும் கோரியது. பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் மிகுந்த பொருட்செலவில் உருவாகி இருக்கும் ‘விழித்திரு’ திரைப்படம், ரசிகர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை கொடுக்கும் என்பதை நிச்சயமாக சொல்கிறேன்…’அவள் பெயர் தமிழரசியின் மூலமாக மக்களிடம் என்னைப் பரவலாகக் கொண்டு சேர்த்ததிலும், ஒரு தனித்துவமான அடையாளத்தையும், நம்பிக்கையையும் எனக்கு உருவாக்கித் தந்ததிலும் பத்திரிகை,தொலைக்காட்சி மற்றும் இணையதள ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கிறது. தொடர்ந்து உங்களுடைய ஒத்துழைப்பையும் அன்பையும் வேண்டுகிறேன்…” என்கிறார் ‘விழித்திரு’ படத்தின் இயக்குனரும், தயாரிப்பாளருமான மீரா கதிரவன்.