திருமணம் செய்ய அழகான பெண்ணை தேடும் இளைஞனின் கதை ”கன்னா பின்னா”!

மெஹெக் புரொடக்சன்ஸ் சார்பில் ரூபேஷ். P  மற்றும்  எஸ்.எஸ் பிக் சினிமாஸ் சார்பில்  E. சிவசுப்பிரமணியன் & K.R. சீனிவாஸ்  தயாரிப்பில் முழுக்க  முழுக்க  நகைச்சுவைக்கு முக்கியத்துவம்  கொடுத்து எடுக்கப்பட்டுள்ள படம்  “கன்னா பின்னா”.
திருமணம் செய்தால் அது அழகான  பெண்ணைத்தான், அழகான பெண்கள் சென்னையில் தான் இருப்பார்கள் எனதிருச்சியில்  இருந்து சென்னை வந்து அழகான பெண்களை தேடி அல்லோலப்படும் நாயகனின்  கதைதான்  “கன்னா பின்னா “. இந்தப்படத்தின் இயக்குநர் தியா கதையை எழுதி, இயக்குவதோடு  கதையின் நாயகனாகவும்  நடித்திருக்கிறார்.. நாயகியாக வன்மம் படத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக நடித்த ‘அஞ்சலி ராவ்’ நடித்திருக்கிறார்.

படம் பற்றி  இயக்குனர் தியா  சொல்லும்போது …

படம்  ஆரம்பம் முதல் முடிவு வரை நகைச்சுவையை மட்டும்  நம்பி இந்தப்படத்தை  எடுத்திருக்கிறோம். என் வாழ்க்கையில் என் நண்பர்கள் வாழ்க்கையில் நடந்த நிஜ சம்பவங்களை கற்பனை கலந்து கொடுத்து உள்ளோம். இதில் நிஜ பவுன்சர்கள் பலர் நடித்துள்ளனர். பார்ப்பதற்கு பிரமாண்டமான  உருவத்தில் இருக்கும் இவர்கள்  படத்தில் நகைச்சுவை பாத்திரத்தில்  நடித்திருப்பது  நகைச்சுவைக்கு  பெரும் பலமாக இருந்தது. இந்தப்படத்தின்  கதையை நான்  தயாரிப்பாளருக்கு  கடைசி வரை சொல்லவே இல்லை. தயாரிப்பாளர்கள்  எனக்கு நண்பர்களானதால்  எதுவும் கேட்கவில்லை. படப்பிடிப்பு முடிந்தபிறகு  தியேட்டரில்தான்  படத்தை பார்த்தார்கள் மிக அருமையாக  படம் வந்ததில்  அனைவருக்கும் மகிழ்ச்சி. உங்கள் சிரிப்புக்கு  நாங்கள்  உத்திரவாதம்  என்கிறார்  இயக்குனர் தியா .

நாளைய இயக்குனர் குறும்பட நிகழ்ச்சியில் சிறந்த இயக்குனராக விருது பெற்றவர் தியா என்பது குறிப்பிடத்தக்கது.
படத்திற்கு  இசையமைத்திருப்பவர் ரோஷன் சேதுராமன்,  ஒளிப்பதிவு  ஜெரால்டு ராஜமாணிக்கம், பாடல்கள் ஸ்ரீதர் ராமசாமி, படத்தொகுப்பு வெஸ்லி, நடனம்  நந்தா, சண்டைப்பயிற்ச்சி  ஜேசு, தயாரிப்பு நிர்வாகம்  நாகராஜன்.
கதை, திரைக்கதை,  வசனம் &  இயக்கம்  தியா(Thiya).

உங்கள் கவலைகள்  அனைத்தும் மறந்து  சிரித்து மகிழும்  இந்த படம் விரைவில்  திரைக்கு வர இருக்கிறது.