ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்குகிறது இசையமைப்பாளர் ஜிப்ரானின் ‘சென்னை டு சிங்கப்பூர்’ இசைப் பயணம்

356

பைரவி, இந்தோளம், மோகனம், கீரவாணி என எல்லா இசை ராகங்களுக்கும் மனிதர்களின் நோய் தீர்க்கும் சக்தி இருக்கிறது. அப்படிப்பட்ட உன்னதமான இசைக்கு தன்னுடைய ‘சென்னை டு சிங்கப்பூர்’ பயணத்தின் மூலம் கூடுதல் பெருமை சேர்க்க தயாராக இருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். “காற்றின் திசை எங்கும் கானம் சென்று தங்கும்” என்பதற்கேற்ப, இவர் இசையமைத்திருக்கும் சென்னை டு சிங்கப்பூர் திரைப்படத்தின் ஆறு பாடல்களை, ஆறு நாடுகளில் அதுவும் சாலை வழியே சென்று வெளியிடுகிறார். வரும் ஆகஸ்ட் 12 ஆம் தேதி தொடங்க இருக்கும் இந்த மாபெரும் இசை பயணமானது சென்னையில் ஆரம்பித்து பூட்டான், மியன்மார், தாய்லாந்து, மலேஷியா ஆகிய நாடுகளில் பயணம் செய்து இறுதியாக சிங்கப்பூரில் முடிவடைகிறது. அறிமுக இயக்குனர் அப்பாஸ் அக்பர் இயக்கி இருக்கும் இந்த ‘சென்னை டு சிங்கப்பூர்’ திரைப்படத்தில் புதுமுகங்கள் கோகுல் ஆனந்த் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

“சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு வான் வழியாக தான் செல்ல வேண்டும் என்று பலரும் கருதி வருகின்றனர். ஆனால் இனி சாலை வழியாகவும் போகலாம் என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவார்கள். இருபது நாள் பயணம் என்பதால் கண்டிப்பாக இரண்டு ஓட்டுனர்கள் இருந்தே ஆக வேண்டும். இயக்குனர் அப்பாஸ் நன்றாகவே கார் ஓட்டுவார், ஆனால் நான் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கற்று கொண்டேன்….” என்று புன்னகையுடன் கூறுகிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான்.

“சென்னை டு சிங்கப்பூர் திரைப்படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். கதைக்களம் புதிது, இயக்குனர் புதுமுகம், முன்னணி கதாப்பாத்திரங்கள் புதுமுகம், என இருக்கும் சென்னை டு சிங்கப்பூர் படத்தின் இசை வெளியீடும் புதுமையாக தான் இருக்க வேண்டும் என கருதி, நாங்கள் இந்த முயற்சியில் இறங்கி இருக்கிறோம். நிச்சயம் எங்களின் இந்த இசை பயணம் ரசிகர்களின் பாராட்டுகளை பெரிதளவில் பெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது…’ என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘சென்னை டு சிங்கப்பூர்’ படத்தின் இசையமைப்பாளர் ஜிப்ரான். உலக வரலாற்றில் இடம் பெற தேவையான அனைத்து சிறப்பம்சங்களும் ஜிப்ரான் எடுத்திருக்கும் இந்த ‘சென்னை டு சிங்கப்பூர்’ பயணத்தில் இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.

Previous articleசுதந்திர போராட்ட வீரர்க்ளை நினைவு கூறும் விதமாக பெயரை தேர்ந்தெடுத்தோம் – ஆல்பர்ட் முரளிதரன்
Next articleIruMugan Movie Unseen Stills