“அழகு குட்டிச் செல்லம்” இயக்குனர் சார்லஸ் இயக்கும் “சாலை”

முகிலன் சினிமாஸும் தங்கத்துளசி புரொடக்‌ஷன்ஸும் இணைந்து தயாரிக்கும் படத்திற்கு “சாலை” என்று பெயரிட்டுள்ளனர். “சாலை” படத்தை “நஞ்சுபுரம்”, “அழகு குட்டிச் செல்லம்” ஆகிய படங்களின் இயக்குனர் சார்லஸ் கதை, திரைக்கதை, வசனம் மற்றும் பாடல்கள் எழுதி இயக்கியுள்ளார்.

‘எப்படி மனதிற்குள் வந்தாய்’ படத்தின் நாயகன் விஸ்வா ஹீரோவாக நடிக்கிறார். கிரிஷா(KRISHA) ஹீரோயினாக அறிமுகமாகிறார். இதற்கு முன்பு ‘அழகு குட்டிச் செல்லம்’ படத்தில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.’ஆடுகளம்’ நரேன், ஸ்ருதி, அஜித் மணியன், ப்ரீத்தி வர்மா, ஆலன் ஜான் ஆகியோர் முக்கிய கதாபாத்திரமேற்றுள்ளனர்.

‘சாலை’ படம் முழுக்க முழுக்க காஷ்மீரில் எடுக்கப்பட்டுள்ளது. அதுவும் பெரும் பனிப்பொழிவு கொட்டும் காலத்தில் கடுமையான ஆபத்துக்களை எதிர்கொண்டு முழுப்படத்தையும் படமாக்கியுள்ளனர்.

இதுவரைக்கும் காஷ்மீரில் இந்திய சினிமாக்கள் பெரும்பாலும் சாதாரண தட்பவெப்பம் இருக்கும் கால நிலைகளில் படமாக்கிவிட்டு திரும்பி விடுவர். அதுவும் ஒரு சில பகுதிகளையோ, காட்சியையோ படமாக்கிவிட்டு வந்துவிடுவார்கள்.

‘சாலை’ படம் தமிழ் சினிமாவில் மட்டுமல்ல, இந்திய சினிமாவில் கூட படமாக்கி இராத ஆபத்தான கொட்டும் பனிப்பொழிவிற்கிடையே நாற்பத்தைந்து நாட்கள் படமாகி உள்ளது, “ராணுவ பாதுகாப்பு பிரச்சனைகளுக்கு நடுவே மிகவும் சிரமப்பட்டுதான் படமாக்க முடிந்தது. எங்கள் படக்குழுவே உயிரோடு திரும்புவோமா என்ற பெரும் பீதியுடனே அங்கிருந்த ஒவ்வொரு நாளும் கழிந்தது.

​ ​வழக்கமாக அனைத்து படங்களும் பனியை அழகு காட்சிக்காகவே பயன்படுத்தி இருப்பர்.
ஆனால் ‘சாலை’ படத்தைப் பொருத்தவரை ‘பனி’ என்பதுதான் கதையின் த்ரில்லிங் பாயிண்ட். படம் பார்க்கும் போது ஒட்டுமொத்த காஷ்மீரின் அழகை அனுபவிக்க முடிந்தாலும் ‘பனி’ என்ற பெரும் அரக்கன் உங்களை பயப்படுத்திக் கொண்டே இருப்பான். அழகிலும், பயத்திலும் மிரள மிரள ஒரு விஷுவல் ட்ரீட்டே ஆக்கிரமித்திருக்கும். நாங்கள் படப்பிடிப்பு முடிந்து திரும்பியதே எங்கள் ஒவ்வொருவரின் மறுபிறவி என்றே சொல்லலாம், என இன்னமும் அகலாத பயத்துடனே விவரிக்கிறார் இயக்குனர் சார்லஸ். பனிப்பொழிவில் ஒரு விஷுவல் ட்ரீட்டே நடத்தியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் G.பாலமுருகன்.

​ ​அழகு குட்டிச்செல்லம்’ படத்திற்கு இசையமைத்த வேத் சங்கர் இப்படத்திற்கும் இசையமைத்துள்ளார். கலையை எஸ்.எஸ்.மூர்த்தியும், எடிட்டிங்கை பிரவீன் பாஸ்கரும் கையாண்டுள்ளனர். தயாரிப்பு நிர்வாகத்தை ராதாகிருஷ்ணன் கவனித்துக் கொள்ள காஷ்மீரின் பெரும் பகுதியை தங்கள் கேமராவில் ஏற்றிக் கொண்டு திரும்பி உள்ளது “சாலை” படக்குழு.

இறுதிக்கட்ட பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது…