ஆகஸ்ட் 14ல்… சிங்கிள் ட்ராக்

துபாய் மற்றும் மும்பையில் செயல்பட்டு வரும் ட்ரிப்பி டர்டில் புரொடக்ஷன்ஸ் (Trippy Turtle Productions) படத்தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் மன்னு முதன்முறையாக தமிழில் உருவாக்கி வரும் “செய்” திரைப்படத்தின் ஒரு பாடல் வரும் ஆகஸ்ட் மாதம் 14ம் தேதி வெளியிடப்பட உள்ளது.
 
மலையாளத்தில் ஏராளமான இசை ஆல்பங்களுக்கும், குறும்படங்களுக்கும் இசையமைத்த நிக்ஸ் லோபஸ் தமிழில் இசையமைப்பாளராக அறிமுகமாக உள்ள இப்படத்தின் பாடல்கள் அனைத்துமே தமிழ் திரையுலக ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெறும் என படத்தயாரிப்பு நிறுவனம் பெருமையுடன் அறிவித்துள்ளது.
 
ஆகஸ்ட் 14ம் தேதி வெளியிடப்பட உள்ள பாடலுக்கு பிரபல பாடலாசிரியர் யுகபாரதி வரிகள் எழுத, மும்பையில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட அந்த பாடலை பிரபல பாடகர் ஷங்கர் மகாதேவன் பாடியுள்ளார்.
 
நடிகர் நகுல், பாலிவுட் நடிகை ஆஞ்சல் மற்றும் பிரகாஷ் ராஜ், நாசர் உள்ளிட்ட பலர் நடித்து வரும் இப்படத்தின் ஆடியோ உரிமையை, பாடல் வெளியீட்டுக்கு முன்பாகவே பிரபல ஆடியோ நிறுவனம் ஒன்று பெரும் விலைக்கு வாங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ள தயாரிப்பு நிறுவனம் 2016ம் ஆண்டின் சிறந்த பாடல்களாக “செய்” திரைப்படத்தின் பாடல்கள் அமையும் என்றும், வேகமாக வளர்ந்து வரும் “செய்” திரைப்படம் அக்டோபர் மாதம் திரைக்கு வர உள்ளதாகவும் கூறியுள்ளது.
 
ராஜ்பாபு இயக்கத்தில், ராஜேஷ் கே.ராமன் கதை, திரைக்கதை, வசனத்தில் உருவாகி வரும் இப்படத்திற்கு தூங்காநகரம், சிகரம்தொடு படங்களின் கேமிராமேன் விஜய் உலகநாதன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.