ஜெய் – அஞ்சலி நடிக்கும் ‘பலூன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் யுவன்ஷங்கர் ராஜா

ஜெய் – அஞ்சலி நடித்து கொண்டிருக்கும் ‘பலூன்’ திரைப்படம், அதன் ஆரம்ப நாட்களில் இருந்தே ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. ஏகப்பட்ட சிறப்பம்சங்களை உள்ளடக்கிய ‘பலூன்’,  தற்போது மேலும் ஒரு சுவாரசிய தகவலை ரசிகர்களுக்கு வழங்கியுள்ளது. யுவன்ஷங்கர் ராஜா இந்த ‘பலூன்’ திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் என்பது தான் அந்த சுவாரசிய தகவல். ’70 எம் எம்’ நிறுவனத்தின் உரிமையாளர்கள்  டி.என். அருண் பாலாஜி – கந்தசுவாமி நந்தகுமார் மற்றும் ‘பார்மர்ஸ் மாஸ்டர் பிளான்’ தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் திலீப் சுப்பராயன் ஆகியோர்  தயாரித்து வரும் பலூன் திரைப்படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் சினிஷ். காதல் கலந்த திகில் திரைப்படமாக உருவாகி வரும் இந்த பலூன் திரைப்படத்திற்கு  ஒளிப்பதிவாளராக R சரவணன், கலை இயக்குனராக சக்தி  வெங்கட்டராஜ், படத்தொகுப்பாளராக ரூபன், ஸ்டன்ட் மாஸ்டராக திலிப் சுப்பராயன், ஆடை வடிவமைப்பாளராக NJ சத்யா மற்றும் நடன இயக்குனராக ஷெரிப் ஆகியோர் பணியாற்றி வருவது மேலும் சிறப்பு.
“முழுக்க முழுக்க இள வட்டாரங்களுக்கு பிடித்தமான படமாக தான் நாங்கள் பலூன் திரைப்படத்தை உருவாக்கி வருகிறோம். இளைஞர்களை கவரக்கூடிய கதை என்பதால், எங்கள் பலூன் படத்தில் மெலோடி பாடல்கள் இருந்தால் நன்றாக இருக்கும் என்று நங்கள் கருதினோம்.  ‘மெலோடி’ என்றாலே அது  யுவன்ஷங்கர்  ராஜா தான்…எங்கள் படத்திற்கு அவர் இசையமைப்பது பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நிச்சயம் அவருடைய இசையும், பாடல்களும் எங்கள் பலூன் திரைப்படத்திற்கு முதுகெலும்பாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை…”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் பலூன் திரைப்படத்தின் இயக்குனர் சினிஷ். தன்னுடைய துள்ளலான இசையால் இள வட்டாரங்களை  தன்  பிடியில் வைத்திருக்கும் யுவன்ஷங்கர் ராஜா, விரைவில் தன்னுடைய  ‘பலூன்’ இசை மழையை ரசிகர்களுக்கு வழங்க இருக்கிறார்..