ரசிகர்கள் இடையே அமோக வரவேற்பை பெற்று வருகிறது வெங்கட் பிரபுவின் ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர்

நட்பு, காதல், சந்தோஷம்,  சென்னை இளைஞர்கள் கிரிக்கெட் விளையாட்டு மீது வைத்திருக்கும் இணைப்பிரியா அன்பு என பல சுவாரசியங்களை ரசிகர்களுக்கு வழங்கிய திரைப்படம், வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் உருவான சென்னை – 28. தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘சென்னை 28 – II’ திரைப்படத்தின் டீசரானது, சமூக வலைத்தளங்களில் வெளியாகி, ரசிகர்களிடம் அமோக வரவேற்பை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
“இயக்குனர் வெங்கட் பிரபு என்றாலே, பிற மொழி திரைப்படத்தின் கதைகளை உல்ட்டா பண்ணுபவர் தான்…இந்த படமும் ஹாலிவுட் படமான ‘ஹாங் ஓவர்’ போல தான் இருக்கும்” என்று ‘மிர்ச்சி’ சிவா சீரியஸாக பேச, “சிவா சார்! உங்க பேங்க்ல வெங்கட் பிரபு பணம் போட்டுட்டாராம்!” என்று ஒருத்தர் சொல்ல, அடுத்த கணமே பேச்சை மாற்றுகிறார் ‘மிர்ச்சி’ சிவா: “வெங்கட் பிரபு படங்கள் அனைத்துமே தனித்துவமான கதை களங்களை கொண்டது தான். இந்த படமே அதற்கே ஒரு சிறந்த உதாரணம்…” என்று கூறும் தருணங்கள் யாவும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்திருக்கிறது . 65 வினாடிகள் ஓடக்கூடிய இந்த  ‘சென்னை 28 – II’ படத்தின் டீசர் மூலம் மிகச் சரியான சிக்ஸரை அடித்துள்ளார் வெங்கட் பிரபு என்பதை உறுதியாகவே சொல்லலாம்.