ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்கும் மருத்துவராக விளங்குகின்றது எப் 5 வென்ச்சர்ஸ் நடத்தும் ‘கார்பொரேட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்’

உலகமே கணினி மயமாக உருவாகியுள்ள இந்த காலக்கட்டத்தில், அந்த கணினி முன் அமர்ந்து வேலை பார்க்கும் ஊழியர்களின் மன அழுத்தமோ நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகிறது. அந்த மன அழுத்தத்தில் இருந்து தீர்வு காணவும், உடலை கட்டுக் கோப்பாக வைத்து கொள்ளவும், ஊழியர்களுக்கு பெரும் அளவில் உதவி வருகிறது எப் 5 வென்ச்சர்ஸ் நடத்தும் ‘கார்பொரேட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்’. கடந்த ஒன்பது ஆண்டுகளாக எப் 5 வென்ச்சர்ஸ் நடத்தி வரும் இந்த ஐ டி கம்பெனி ஊழியர்களுக்கான மாபெரும் விளையாட்டு போட்டியானது, நேற்று அதன் பத்தாம் ஆண்டில் அடியெடுத்து வைத்திருக்கிறது. சோழிங்கநல்லூரில் உள்ள ‘கோகினூர் ஏஷியானா ஹோட்டலில்  நேற்று விமர்சையாக நடைபெற்ற இந்த விழாவில், ‘நெடுஞ்சாலை’ மற்றும் ‘மாயா’ திரைப்படப் புகழ் நடிகர் ஆரி, ‘இந்தியாவின் பசுமை மனிதர்’ என்று அழைக்கப்படும் சமூக ஆர்வலர் அப்துல் கனி  மற்றும் ‘இந்தியாவின் அதிவேக சூப்பர் பைக் ரேசர்’ திலீப் ரோஃஜ்ர் ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்குபெற்றது குறிப்பிடத்தக்கது.
“ஐ டி நிறுவனங்களில் வேலை பார்க்கும் ஊழியர்கள் அனைவரும் பல விதத்தில் உடல் சோர்வையும், மன அழுத்தத்தையும் எதிர் கொள்கின்றனர். விளையாட்டு போட்டிகள் மூலம் அவர்களை அதில் இருந்து விடுதலை செய்வதே எங்கள் எப் 5 வென்ச்சர்ஸின் முக்கிய கடமை. நாங்கள்  நடத்தும் ‘கார்பொரேட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்’ போட்டியானது தற்போது பத்தாவது ஆண்டிற்குள் நுழைந்திருப்பதை பார்க்கும் போது, மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். கிரிக்கெட், புட்பால், கோல்ப், டென்னிஸ், சைக்கிளிங், டேபிள் டென்னிஸ் மற்றும் கேரம்போர்ட்  என  இருபதுக்கும் மேற்பட்ட விளையாட்டுகள் இந்த பத்தாவது கார்பொரேட் ஸ்போர்ட்ஸ் ஒலிம்பியாட்  போட்டியில் இடம்பெற்று இருக்கின்றன. ஜூலை 16 ஆம் தேதியில் இருந்து செப்டம்பர் 4 ஆம் தேதி வரிநடக்க இருக்கும் இந்த போட்டியானது வாரந்தோறும் நடைபெறும்…” என்று கூறினார் எப் 5 வென்ச்சர்ஸின் ஒருங்கிணைப்பாளர் லலித். ஏறக்குறைய ஐம்பதுக்கும் மேற்பட்ட ஐ டி நிறுவனங்கள் பங்குபெறும் இந்த மாபெரும் விளையாட்டு போட்டியில், சுமார் ஐயாயிரத்திற்கும் அதிகமான ஐ டி ஊழியர்கள் பங்குபெறுவது குறிப்பிடத்தக்கது.
 
இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற நடிகர் ஆரி, உடல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவத்தை பற்றி கூறினார். “ஊழியர்களின் மன அழுத்தத்தை போக்கும் மருத்துவராக செயல்பட்டு வரும்  எப் 5 வென்ச்சர்ஸ் நிறுவனத்திற்கு எனது  வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன். இதே மாதிரியான விளையாட்டு போட்டிகள் ஐ டி துறையில் மட்டுமில்லாமல் எல்லா துறைகளிலும் உருவாக்கப்பட்டால் அனைவரும் பயன் பெறுவர். டாக்டர் ஏ பி ஜே அப்துல் கலாமின் வழிகளை பின்பற்றி, நாற்பது லட்சத்திற்கும் அதிகமான மரக் கன்றுகளை இந்தியா முழுவதும் நட்டு வைத்தவர் அப்துல் கனி. அதேபோல் ஜெர்மனி நாட்டின் புகழ் பெற்ற ‘எண்டுரன்ஸ் சாம்பியன்ஷிப் பைக் ரேஸில் கலந்து கொண்ட முதல் ஆசியர், திலீப் ரோஃஜ்ர். இந்தியாவின்  பெருமைக்குரிய மனிதர்களாக கருதப்படும் இவர்கள் இருவருடன்  இந்த விழாவில் பங்கேற்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. ஓடியாடி விளையாடினாலே போதும். நமக்கு ஆரோக்கியத்திற்கு எந்த விதத்திலும் குறைகள் இருக்காது…” என்று கூறினார் நடிகர் ஆரி.