‘கயல்’ சந்திரனின் இரட்டிப்பு மகிழ்ச்சி

பிரபு சாலமன் இயக்கிய ‘கயல்’ திரைப்படத்தில் தன்னுடைய எளிமையான பாவனைகளாலும், எதார்த்தமான நடிப்பாலும் சினிமா விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களின்  பாராட்டுகளை பெற்றவர் ‘கயல்’ சந்திரன். தன்னுடைய முதல் படத்திலேயே பெண் ரசிகர்களை மட்டுமில்லாது, இளைஞர்கள், குடும்பங்கள் என அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து விட்டார் ‘கயல்’ சந்திரன். வளர்ந்து வரும் கதாநாயகனான ‘கயல்’ சந்திரனுக்கு, இந்த ஜூலை  மாதத்தில் இரட்டிப்பு மகிழ்ச்சி காத்துக் கொண்டிருக்கிறது. ஜூலை 14 ஆம் தேதி ஹைதராபாத்தில் நடைபெறும் ‘கயல்’ படத்தின் தெலுங்கு இசை வெளியீட்டு விழாவும், ஜூலை 15 ஆம் தேதி காலை சென்னையில் நடைபெறும் ‘கயல்’ சந்திரன் நடிக்கும் திரைப்படப் பூஜையும் தான் அந்த இரட்டிப்பு மகிழ்ச்சிக்கு காரணம்.
 
‘டூ மூவி பஃஃப்ஸ்’ (2 எம் பி) சார்பில் பி எஸ் ரகுநாதன் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சுதர் இயக்கும் பெயர் சூட்டப்படாத திரைப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார் ‘கயல்’ சந்திரன்.இந்த படத்தை ‘டூ மூவி பஃஃப்ஸ்’ நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது ‘Across Movies’. அந்த படத்தின் பூஜை தான் வருகின்ற ஜூலை 15 ஆம் தேதி  சென்னையில் நடைபெறுகிறது.  “முதல் நாள் மாலை ஹைதராபாத்தில் இசை வெளியீட்டு விழா, மறு நாள்  காலை சென்னையில் நான் நடிக்கும் புது படத்தின் பூஜை. இதை விட மகிழ்ச்சி எனக்கு வேறேதும் இல்லை…  ‘கயல்’ திரைப்படத்திற்கு பிறகு எனக்கு பட வாய்ப்புகள் வந்து கொண்டிருந்தாலும், எனக்கு ஏற்றவாறு இருக்கும் கதையம்சம் கொண்ட படங்களை தான் நான் தேர்வு செய்து  வருகிறேன். ஒரே மாதிரியான கதை களங்களில் நடிக்க நான்  விரும்பவில்லை. மாறாக ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதுமையை  வழங்க தான் நான் ஆசை படுகிறேன், ரசிகர்களும் அதையே தான் விரும்புகிறார்கள். அந்த விதத்தில் நான் நடிக்க இருக்கும் திரைப்படங்கள் யாவும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை முழுமையாக பூர்த்தி செய்யும்…” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் இளம் கதாநாயகன் ‘கயல்’ சந்திரன். தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் கதாநாயகனாக உருவெடுத்து வரும் ‘கயல்’ சந்திரன் தற்போது ‘கிரகணம்’ மற்றும் ‘ரூபாய்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.