ஜெயம் ரவி – இயக்குனர் விஜய் கூட்டணியில் உருவாகும் திரைப்படத்திற்கு இசை அமைக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்

தமிழ் சினிமா உலகில் எண்ணற்ற படங்கள் வெளி வந்து  கொண்டிருந்தாலும், ஒரு சில  திரைப்படங்கள்  மட்டும் தான்  திரைக்கு வருவதற்கு முன்பாவாகவே மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும். அந்த வகையில் நடிகர் ஜெயம் ரவி மற்றும் இயக்குனர் விஜய் கூட்டணியில் தற்போது உருவாக இருக்கும் திரைப்படம் ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது. தனித்துவமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதில் திறம் பெற்றவர் ஜெயம் ரவி. அவர் நடித்த படங்கள் யாவும் மாபெரும் வெற்றி பெற்றது மட்டுமில்லாமல்,  தமிழ் சினிமாவை  உலக சினிமா தரத்திற்கு உயர்த்தி இருக்கிறது.  அதே போல் படத்திற்கு படம் வித்தியாசங்களை கையாண்டு, மக்களின் நெஞ்சங்களில் தனக்கென ஒரு பெயரை சம்பாதித்து இருப்பவர் இயக்குனர் விஜய். இப்படி திறமைக்கு சான்றாக விளங்கும் இந்த இருவரும் கூட்டணி அமைத்திருப்பது, தமிழ் திரை உலகில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தும் வண்ணமாக, இந்த இருவர் கூட்டணியோடு இணைந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ்.
“ஹாரிஸ் ஜெயராஜுடன் இணைந்து பணி புரிவதில் எங்கள் எல்லோருக்கும் பெரும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த கதையில் பல சுவாரசியங்களையும், மக்களின் ரசனைகளுக்கு ஏற்ற பல விஷயங்களையும் உள்ளடக்கி இருக்கிறோம். இப்படி மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் எல்லா  குண அதிசயங்களும் இந்த படத்தில் இருக்க, தற்போது இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் எங்களுடன் கைக்கோர்த்து இருப்பது  மேலும் பலம். அது  மட்டுமின்றி, இந்த படத்தை மக்களிடையே பெரும் அளவில் கொண்டு சேர்க்கும் வலிமையான தூணாகவும் ஹாரிஸ் திகழ்கிறார். விரைவில் இந்த படத்துக்கான பாடல்களை தனக்குரிய மெட்லி ஸ்டைலில் இசையமைக்க இருக்கிறார் ஹாரிஸ். அவருடைய இசையில் உருவாகும் பாடல்கள் யாவும் மக்களுக்கு இசை விருந்தாக அமையும்…”என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் நடிகர் ஜெயம் ரவி.