ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்து வருகிறது ‘உள்குத்து’ படத்தின் டீசர்

“தம்பி.. சண்டன்னா ரொம்ப பிடிக்குமோ” என்று மிரட்டலான வில்லன் சரத் கேட்க,  “வீண் சண்டைக்கெல்லாம் போ மாட்டேன் ஐயா! ஆனா…” என்று கதாநாயகன் அட்டக்கத்தி தினேஷின் தைரியமான வசனங்களோடு விறுவிறுப்பாக ஆரம்பமாகும் உள்குத்து படத்தின் டீசரானது, ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மக்களின்  ரசனைகளை நன்கு அறிந்து, அவர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யுமாறு இருக்கும் படங்களை மட்டுமே தயாரிக்கும் கெனன்யா பிலிம்ஸ் இந்த உள்குத்து படத்தை தயாரிக்க, உள்குத்து படத்தை இயக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. திருடன் போலீஸ் திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு,  உள்குத்து படத்திற்காக  இயக்குனர் கார்த்திக் ராஜு, தயாரிப்பாளர் ஜெ செல்வக்குமார் மற்றும் அட்டக்கத்தி தினேஷ் ஆகியோர்  மீண்டும் இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
“குமரி மாவட்டத்தின் பிரபலமான முட்டம் குப்பத்திலும்  அதை சுற்றியுள்ள கிராமங்களிலும் எங்கள் உள்குத்து படத்தை படமாக்கி இருக்கிறோம். வஞ்சர மீனையும், இறால் மீனையும் மீனவர்களிடம் பேரம் பேசி வாங்க தெரிந்த  நமக்கு, அவர்களின் கடினமான வாழ்க்கையை பற்றி தெரியாது. மீனவ சமூகத்தினரின் வாழ்க்கையையும், அவர்களின் துன்பங்களையும், அவர்கள் எதிர்நோக்கும் சவால்களையும் மையமாக  கொண்டு உருவாக்கப்பட்டுள்ள திரைப்படம் தான் உள்குத்து. அதற்காக உள்குத்து படத்தை யாரும் ஒரு சோக காவியம் என்று எண்ணிவிட வேண்டாம். சென்டிமென்ட், காதல், அதிரடி, காமெடி என அனைத்து சிறப்பம்சங்களும் உள்குத்து படத்தில் நிறைந்திருக்கிறது. அதற்கு சான்றாக அமைந்திருப்பது தான் உள்குத்து படத்தின் டீசர். இன்று வெளியிடப்பட்ட உள்குத்து படத்தின் டீசரானது, வெகுவாக  ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார் உள்குத்து படத்தின் இயக்குனர் கார்த்திக் ராஜு.
கதாநாயகியாக நந்திதா நடிக்க, பால சரவணன், ஜான் விஜய், சாயா சிங், ஸ்ரீமான், பாண்டிய நாடு படப்புகழ் ஷரத், திலீப் சுப்பராயன் மற்றும் பிரபல சமையல் வல்லுநர்  செப் தாமோதரன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். உள்குத்து திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரனின் இசையும், குக்கூ படப்புகழ்  பி கே வர்மாவின்  ஒளிப்பதிவும், KL பிரவீனின் படத்தொகுப்பும் பக்கபலமாக அமையும் என்பதை உறுதியாவே சொல்லலாம். அபி & அபி பிச்சர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அபினேஷ் இளங்கோவன் விநியோகம் செய்யும் இந்த உள்குத்து  படமானது, வருகின்ற ஆகஸ்ட் மாதத்தில் வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
“வீண் சண்டைக்கெல்லாம் போ மாட்டேன் ஐயா! ஆனா சண்டன்னா பிடிக்கும்..” என்று முடிவடையும் உள்குத்து படத்தின் டீசரானது, பார்வையாளர்களின்  ஆர்வத்தை தூண்டி, படத்தை இப்போதே பார்க்க  வேண்டும் என்ற எண்ணத்தை அவர்கள் நெஞ்சத்தில் விதைத்து வருகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.