படத்தில் ஒரு சிறிய காட்சி என்றாலும், அதை இயற்கையாகவும், இயல்பாகவும் தான் எடுக்க வேண்டும் என்ற தனித்துவமான எண்ணம் கொண்டவர் இயக்குனர் பாலா. அவரின் இணை இயக்குனரான சுந்தர இளங்கோவன் தற்போது இயக்கி இருக்கும் திரைப்படம் தான் ‘அர்த்தநாரி‘. அநீதிக்கு எதிராக வெகுண்டு எழும் இரண்டு இணைந்த சக்திகளே ‘அர்த்தநாரி‘. “எனக்கு படம் ஓகே ஆன அடுத்த நொடியே நான் சந்தித்தது எனது குருநாதர் பாலா சாரை தான். இன்னமும் அவர் கூறிய, ‘முதல் படம்..நன்றாகவும், கவனமாகவும் பண்ணு..‘ என்ற வார்த்தைகள் என் காதில் ஒலித்து கொண்டே இருக்கிறது. நம் சமூகத்தில் கட்டுக்குள் அடங்காமல் நடக்கும் கொடுமைகளை, ஹீரோ தர்மத்தின் வழியிலும், ஹீரோயின் சட்டத்தின் வழியிலும் தடுக்கிறார்கள்! அது அவர்களின் காதல் வாழ்க்கையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியது என்பதே இந்த ‘அர்த்தநாரி’ திரைப்படத்தின் கதை” என்கிறார்‘அர்த்தநாரி‘ படத்தின் இயக்குனர் சுந்தர இளங்கோவன்.
ஆக்ஷன் கலந்த உணர்ச்சிகரமான பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ள அர்த்தநாரி படத்தில் ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட், காமெடி மட்டுமில்லாமல் சமூகத்திற்கு தேவையான முக்கிய செய்தியையும் உள்ளடக்கி இருக்கிறார் அர்த்தநாரி படத்தின் இயக்குனர் சுந்தர இளங்கோவன். அர்த்தநாரி படப்பிடிப்பில் பல சுவாரசியமான சம்பவங்கள் அரங்கேறி இருக்க, அவற்றுள் சில சம்பவங்களை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார் இயக்குனர் சுந்தர இளங்கோவன். “படத்தின் கதை படி ஹீரோவை, ஹீரோயின் நன்றாகவும் ஆவேசமாகவும் அறைய வேண்டும்! ஆனால் பல டேக்குகள் எடுத்தும் அந்த வேகம் வரவில்லை!படப்பிடிப்பு நடப்பதோ பொது இடம். நேரம் அதிகமாக அதிகமாக, மக்கள் அனைவரும் பொறுமையை இழந்து மேலாளரிடம் புகார் செய்ய தொடங்கிவிட்டனர். நான் கதாநாயகியிடம் ஹீரோவை நல்லா ஓங்கி அறைங்க என்று சொல்ல அவர் தயங்கி தயங்கி நின்றார். அப்போது பளார்ன்னு அவங்க கன்னத்துல ஆவேசமா நான் அறைய அவருக்கு கோபம் வந்த விட்டது! அந்த கோபத்தில் ஹீரோவை நான் நினைத்ததை விட இன்னும் ஆவேசமாக அறைந்தார்…! டேக் ஓகே (சூப்பர்)… அதன் பிறகு அவரை சமாதான படுத்தலாம் என்று சென்றேன்! ஆனால் அவர் அப்படி ஒரு சம்பவம் நடந்ததாகவே காட்டிக் கொள்ளாமல் சிரித்து பேசினார்! அவரின் தொழில் பக்தியை நினைத்து வியந்தேன்!” என்று கூறுகிறார் ‘அர்த்தநாரி‘ படத்தின் இயக்குனர் சுந்தர இளங்கோவன்.
“இந்த ‘அர்த்தநாரி‘ படத்தை பற்றி கூறும் நேரத்தில் மிக முக்கியாக குறிப்பிட வேண்டியவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளர் திரு. முத்தமிழ் செல்வன் அவர்கள்! திரைப்படத்தின் கதையை எழுதியதுடன் ஒரு தயாரிப்பாளாராக சகலவித ஏற்பாடுகளையும் செய்து கொடுத்தார்! நடிகர் நாசர், நான் கடவுள் ராஜேந்திரன்,கதாநாயகன் ராம் குமார், கதாநாயகி அருந்ததி,முத்துராமன் போன்றவர்கள் மிகுந்த அர்ப்பணிப்போடு பணியாற்றியது மறக்க முடியாதது! அற்புதமான பாடல் வரிகளை எழுதி கொடுத்த கபிலன், அந்த பாடல் வரிகளுக்கு இனிய இசை அமைத்துக் கொடுத்த செல்வ கணேஷ், ஒளிப்பதிவு செய்த ஸ்ரீ ரஞ்சன் ராவ்,படத்தொகுப்பாளார் சுரேஷ் அர்ஸ் ஆகியோரின் பங்கு மகத்தானது. நிச்சயம் ஜூலை எட்டாம் தேதி வெளியாகும் எங்களின் அர்த்தநாரி திரைப்படம், ரசிகர்களின் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் என பெரிதும் நம்புகிறேன்” என்று கூறி விடை பெறுகிறார் ‘அர்த்தநாரி‘ படத்தின் இயக்குனர் சுந்தர இளங்கோவன்.