மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்திருக்கும் ‘பைசா’ படத்தின் இசையமைப்பாளர் ஜே வி, ஒரு சிறந்த பியானோ கலைஞர்

பிறந்த பின் தாலாட்டு, இறந்த பின் ஒப்பாரி என இசையானது மனித வாழ்க்கையில் இன்றியமையாததாகிவிட்டது. அப்படிப்பட்ட இசையை தனது சிறு வயதிலிருந்தே ஆர்வத்தோடு கற்று, அதை அழகிய பாடல்களாக ‘பைசா’ திரைப்படம் மூலம் மக்களுக்கு தந்திருக்கிறார் இளம் இசையமைப்பாளர் ஜே வி என்கிற ஜேம்ஸ் விக்டர். லண்டனின் புகழ் பெற்ற ட்ரினிட்டி இசை கல்லூரியில் பயின்ற ஜே வி, பியானோ இசையில் நன்கு தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இயல், இசை, நாடகத்திற்கு பிறப்பிடமாக விளங்கும் மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்துள்ள ஜே வி இசையமைத்திருக்கும் ‘பைசா’ படமானது வருகின்ற ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகிறது. பசங்க புகழ் ஸ்ரீராம் மற்றும் புது முகம் ஆரா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த ‘பைசா’ படத்தை அப்துல் மஜீத் இயக்க, கான்பிடண்ட் பிலிம் கபே, KJR ஸ்டுடியோஸ் மற்றும் RK ட்ரீம் வேர்ல்ட் ‘பைசா’ படத்தை தயாரித்துள்ளது. K.P. வேல்முருகன்  ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ள ‘பைசா’ திரைப்படத்தை இணை தயாரிப்பு செய்துள்ளார் கராத்தே கே ஆனந்த்.
‘சிக்கு முக்கு’, ‘பைசா பைசா’, ‘கண்ணே கண்ணே’, ‘நெஞ்சுக்குள்ள’, ‘பெண்ணே பெண்ணே’ என ஐந்து பாடல்களை ‘பைசா’ திரைப்படத்திற்க்காக இசையமைத்திருக்கிறார் ஜே வி. “என் நண்பர்களின் மூலம் அறிமுகமான இயக்குனர் அப்துல் மஜீத் தான் எனக்கு பைசா படத்தில் இசையமைக்கும் வாய்ப்பை பெற்று தந்தார். அவருக்கு எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன். பைசா இசை ஆல்பத்தில் ஐந்து பாடல்கள் இருந்தாலும், கதைக்கேற்ப படத்தில் மூன்று பாடல்கள் தான் சேர்க்கப்பட்டுள்ளன. அவற்றுள் ‘பெண்ணே பெண்ணே’ என்னும் நா முத்துக்குமாரின் வரிகளில் உருவாகிய பாடல் தான் எனக்கு மிகவும் பிடித்தமானது. ஒரு குப்பை அள்ளும் இளைஞனின் காதலை மிக எளிமையான முறையில் வெளிப்படுத்தும் உணர்வு தான் இந்த பாடலின் சிறப்பு.  காஞ்சனா 2 படத்தின் ‘சில்லாட்ட, பில்லாட்ட’ பாடலை பாடிய ஜெகதீஷ் மற்றும் ஹேமா அம்பிகா இந்த பாடலை பாடியுள்ளனர். பைசா படத்தின் பாடல்கள் யாவும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருவது போல், பைசா திரைப்படமும் ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நம்புகிறேன்” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் ‘பைசா’ படத்தின் இசையமைப்பாளர் ஜே வி.
ஜூலை ஒன்றாம் தேதி வெளியாகும் இந்த பைசா படத்தில் நடிகர்கள் நாசர், மதுசூதனன், மயில்சாமி, ராஜசிம்மன் மற்றும் சென்ட்ராயன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.