ரெமோவை வரவேற்க ஒட்டுமொத்த சிங்கப்பூரும் ஆர்வத்தோடு காத்துக் கொண்டிருக்கிறது

சிவகார்த்திகேயன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்திருக்கும் ரெமோ. 24 ஏ எம் சார்பில் ஆர் டி ராஜா தயாரிப்பில் , புதுமுக இயக்குனர் பாக்யராஜ் கண்ணன் இயக்கியுள்ள ‘ரெமோ’ திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டரும், அனிரூத் இசையமைத்த ‘ரெமோ நீ காதலன்’ பாடலும் கடந்த வியாழன் அன்று சென்னையில் மிக விமர்சையாக வெளியிடப்பட்டது. பிரம்மாண்டத்தின் மறு ரூபமான இயக்குனர் சிகரம் ஷங்கர் தலைமை தாங்கிய இந்த விழாவானது, ஒட்டுமொத்த திரையுலக கண்களையும் ‘ரெமோ’ மீது திரும்புமாறு செய்திருக்கிறது.

இப்படி ஒரு பாடலின் வெளியீட்டையே, மிக பிரம்மாண்டமாக வெகு விமரிசையாக கொண்டாடிய படக் குழுவினர் , வருகின்ற ஜூலை 1 ஆம் தேதி சிங்கப்பூரில் தங்களது ஆதிக்கத்தை செலுத்த உள்ளனர். சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் இடையே வெகு பிரபலமான சிவகார்த்திகேயனுக்கு அங்கு சிறப்பான வரவேற்புக்கு காத்துக் கொண்டு இருக்கிறது. ‘ரெமோ’ திரைப்படத்தின் மற்றொரு பாடலான செஞ்சிட்டாளே பாடல், சிங்கப்பூரில் நடைப்பெற்று வரும் SIIMA விழாவில் வெளியிடப்பட உள்ளது. பாடல் வெளி வருவதற்கு முன்னரே அந்தப் பாடலின் முதல் வரி சமூக வளைத்த தளங்களில் பிரபலமாகி பிரசித்தி பெற்றது ‘ செஞ்சிட்டாலே ‘ பாடல் தான்.

ஜூலை ஒன்றாம் தேதி சிங்கப்பூரில் நடைப்பெற இருக்கும் இந்த ரெமோ படத்தின் ‘செஞ்சிட்டாளே’ பாடல் வெளியீட்டு விழாவில், சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், தயாரிப்பாளர் ஆர் டி ராஜா, இயக்குனர் பாக்யராஜ் கண்ணன், இசையமைப்பாளர் அனிரூத், PC ஸ்ரீராம், ஆஸ்கார் விருது பெற்ற ரசூல் பூக்குட்டி, நடிகர் சதீஷ் என ஒட்டுமொத்த படக்குழுவினரும் பங்குபெறுவது, ரசிகர்களின் ஆர்வத்தையும், எதிர்பார்ப்பையும் வானளவு உயர்த்தி இருக்கிறது. ரெமோ மீது காதல் வயப்பட்டு, அவரை ஆர்வத்தோடு வரவேற்க பரபரப்பாக செயல்பட்டு கொண்டிருக்கிறது சிங்கப்பூர்.