கேமியோ பிலிம்ஸ் நிறுவனத்தோடு கைகோர்த்துள்ளனர் அதர்வா மற்றும் ‘டிமான்டி காலனி’ இயக்குனர் அஜய் ஞானமுத்து

எப்படி ஒரு கப்பலின் கட்டுப்பாடானது அதன் கேப்டனின் கைகளில் இருக்கிறதோ, அதே போல் தான் ஒரு திரைப்படத்தின் வெற்றியானது அதன் தயாரிப்பாளரின் கைகளில் இருக்கிறது. அந்த மாதிரியான ஒரு வெற்றி கேப்டனாக தமிழ் சினிமாவில் திகழ்ந்து வருபவர் தான் கேமியோ பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் ஜெயக்குமார். ஏற்கனவே கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார் மற்றும் ஜி வி பிரகாஷ் கூட்டணியில் உருவான திரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படம் பல இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது மட்டுமின்றி, வர்த்தக ரீதியாகவும், வணீக ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு விட்டது. மேலும் ஜி வி பிரகாஷை தயாரிப்பாளர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், ஓர் நிலையான ஹீரோவாகவும் உருவாக்கியது கேமியோ பிலிம்ஸின் திரிஷா இல்லனா நயன்தாரா படம் தான் என்று சொன்னால் அது மிகையாகாது.

இப்படி வெற்றி மேல் வெற்றிகளை குவித்து வரும் கேமியோ பிலிம்ஸ் ஜெயக்குமார், தற்போது அதர்வா மற்றும் டிமான்டி காலனி இயக்குனர் அஜய் ஞானமுத்துவுடன் இணைந்திருப்பது, சினிமா வட்டாரங்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது. மிகுந்த உற்சாகத்துடனும், ஆர்வத்துடனும் அமைந்திருக்கின்ற இந்த வெற்றி கூட்டணியை பற்றி தான் தமிழ் சினிமா உலகம் பரபரப்பாக பேசி வருகிறது. வர்த்தக ரீதியாக மட்டுமில்லாமல், ரசிகர்களின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்து, இந்த மூவர் கூட்டணியானது வெற்றி வாகையை சூடும் என்பதை நம்பிக்கையுடன் சொல்லலாம்.

“ஒரு தரப்பு மக்களை மட்டும் குறி வைத்து படத்தை தயாரிப்பது எங்களின் நோக்கம் கிடையாது. மாறாக எங்களின் படமானது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் போய் சேர வேண்டும். அதுவே எங்களின் முதன்மை குறிக்கோள். அந்த வகையில், அதர்வா மற்றும் அஜய் ஞானமுத்துவின் கூட்டணி, எங்களின் எதிர்பார்ப்புகளை விட ஒரு படி மேலாகவே இருக்கின்றது. என்னை பொறுத்தவரை அதர்வா, தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்று தான் சொல்லுவேன். எந்த கதாப்பாத்திரம் கொடுத்தாலும் அதை தத்ரூபமாக திரையில் வெளிப்படுத்தும் திறமையும், ஆற்றலும் அவரிடம் உள்ளது. நிச்சயமாக இந்த திரைப்படம் அவரை வெற்றி சிம்மாசனத்தில் அமர்த்தும்.

அதே போல் தமிழ் சினிமாவில் தன்னுடைய தனித்துவமான கதைக்களத்தால் தனக்கென்று ஒரு இடத்தை மக்கள் மத்தியில் பெற்று, வெற்றி படிகளை ஏறி வரும் இயக்குனர் அஜய் ஞானமுத்துவை இந்த திரைப்படம் உலக தரத்திற்கு உயர்த்தும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. வர்த்தக ரீதியாக வெற்றி பெற தேவையான அனைத்து குணங்களும் இந்த திரைப்படத்தில் அமைந்திருக்கிறது. தற்போது இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர் – நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களை தேர்ந்தேடுக்கும் தேர்வில் நாங்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறோம். அதுமட்டுமின்றி. இந்திய அளவில் பிரபலம் அடைந்த ஒரு நட்சத்திர நடிகரை, எங்கள் படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க பேச்சுவார்த்தை மேற்கொண்டு வருகிறோம். விரைவில் அது யாரென்று ரசிகர்களுக்கு கண்டிப்பாக தெரியப்படுத்துவோம். வருகின்ற செப்டம்பர் மாதம் எங்களின் படப்பிடிப்பு வேலைகள் துவங்க உள்ளது” என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் கேமியோ பிலிம்ஸின் உரிமையாளர் ஜெயக்குமார்

Previous articleEn Appa – Actor Jayamravi Speaks About His Father
Next articleGhazali Mazhaiye Saaindhaadu Movie Song