அனுஷ்கா-த்ரிஷாவுக்கு ஜோடியாக நடிப்பதுதான் என் லட்சியம் ; விசிலடிக்கும் பவர்ஸ்டார்.!

இந்த பவரு பாம்பை புடிச்சா ரசிகர்கள் ஏத்துக்க மாட்டாங்களா..? ; பகீர் கிளப்பும் பவர்ஸ்டார்..!

திரைவண்ணன் இயக்கத்தில் மிர்ச்சி சிவா நடிப்பில் சினிமா பின்னணியில் உருவாகி இருக்கும் ‘அட்ரா மச்சான் விசிலு’ படத்தில் ‘சூப்பர் ஸ்டார்’ கேரக்டரில் பட்டையை கிளப்பி இருக்கிறாராம் பவர்ஸ்டார். வருகிற ஜூலை-7ஆம் தேதி படம் ரிலீஸாக இருக்கும் இந்தப்படத்திற்கு தணிக்கை குழு ‘யு’ சான்றிதழ் வழங்கியுள்ளது. இந்த நிலையில் பவர்ஸ்டாரை நேரில் சந்தித்தோம்.. படம் குறித்தும், தனது எதிர்கால லட்சியம் குறித்தும், மத்திய அரசுக்கு வைத்துள்ள கோரிக்கை குறித்தும் விலாவாரியாக பகிர்ந்துகொண்டார் பவர்ஸ்டார்.

முதன்முதலா வில்லத்தனம் கலந்த கேரக்டர்ல நடிச்சிருக்கீங்க.. பைட் சீன்லாம் இருக்கா..?

அடிதடி பைட்னு எதுவும் கிடையாது.. ஆனா படம் முழுக்க டயலாக் பைட் இருக்கு..

ஆரம்பகாலத்துல ரஜினி சாருக்கு போட்டி நான் தான்னு சொன்னீங்க..

(இடைமறித்து) ஆமா அது உண்மைதான்.. இப்பவும் நான்தானே போட்டி..

சூப்பர்ஸ்டார் கேரக்டர்ல நடிக்கிறதுக்காக எக்ஸ்ட்ரா டயலாக் ஏதாவது பேசிருக்கீங்களா..?

இல்லைங்க.. கதைக்கு என்ன டயலாக் தேவைப்பட்டுச்சோ, டைரக்டர் என்ன டயலாக் கொடுத்தாரோ அதை மட்டும் தான் பேசிருக்கேன்.. மற்றபடி தனிப்பட்ட முறைல யாரையும் தாக்கி பேசலை..

சூப்பர்ஸ்டாரா நடிக்கிறதால உங்களுக்குனு இந்தப்படத்துல தனி ஸ்டைல் ஏதாவது..?

வித்தியாசமா பண்ணிருக்கேன்.. மத்தபடி காமெடிப்படம்ங்கிறதால ஸ்டைல்னு தனியா ஏதும் பண்ணல.. ஆனா எக்கச்சக்க ‘பஞ்ச்’ இருக்கு.. ரொம்ப நாளா இல்லாம இருந்த பஞ்ச் இதுல நிறைய வந்திருக்கு.. இந்தப்படம் வெளியாச்சுன்னா இனி குழந்தைகள் பேசுறது எல்லாம் நம்ம பஞ்ச்சாத்தான் இருக்கும்னா பாத்துக்குங்க..

பஞ்ச்’ எழுத டீம் தனியா வச்சிருக்கீங்களா..?

இன்னும் அந்த அளவுக்கு வளரளைங்க.. ஆனா நிச்சயம் வைப்பேன். அதுக்கான காலம் சீக்கிரம் வந்துரும்.. என்னோட லட்சியம்னு பார்த்தீங்கன்னா அனுஷ்கா கூடவும் த்ரிஷா கூடவும் ஹீரோவா நடிக்கனுங்கிறதுதான்.. இந்தப்படத்தோட தயாரிப்பாளர் கோபி கூட என்னோட அடுத்த படத்துக்காக அனுஷ்கா கிட்டேயும் த்ரிஷா கிட்டேயும் பேசிக்கிட்டு இருக்கிறார்.. அவங்க கிடைக்காட்டியும் கூட, அவங்க பேர்ல வேற ஏதாவது பிகர் இருந்த அவங்களையாவது கமிட் பண்ணுங்கன்னு சொல்லி வச்சிருக்கேன்..

முரட்டுக்காளை மாதிரி மாட்டுக்கொம்பை கையில வச்சிக்கிட்டு நிக்கிறீங்களே..?

சார்.. அந்தப்படத்துல ரஜினிசார் மாட்டுக்கொம்ப பிடிச்சாரு.. இந்தப்படத்துல நான் கடிச்சிருக்கேன்….. ஆனா வித்தியாசம் இருக்கு சார்.

சரி.. ட்ரெய்லர்ல பாம்பு சீன், சிகரெட்னு ரஜினியை கலாய்ச்சிருக்கீங்களே..?

நிச்சயமா அப்படில்லாம் இல்லைங்க.. கதைக்கு இந்த சீன் இருந்தா நல்லா இருக்கும்னு வச்சிருக்கோம்.. ரஜினி பாம்பை பிடிக்கிறது இருக்கட்டும்.. ஏன் சார் இந்த பவரு பாம்ப பிடிச்சா ரசிகர்கள் ஒத்துக்க மாட்டாங்களா என்ன..?

சிவாவுக்கும் உங்களுக்குமான காம்பினேஷன் பத்தி சொல்லுங்க..!

‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்துல சந்தானத்தோட நடிச்சப்ப எப்படி ஜாலியா இருந்துச்சோ அதே மாதிரி இந்தப்படத்துல சிவாவோட காம்பினேஷன் சூப்பரா வந்திருக்கு. அவரு அசராம கலாய்ப்பாரு.. நானும் அசராம கவுண்டர் கொடுப்பேன்.. ஷூட்டிங்ஸ்பாட்டே சும்மா அதிருமுல்ல.. சிவா தான் ஹீரோன்னாலும் கூட எனக்காக ஸ்பெஷலா ஒரு பாட்டே எடுத்திருக்காங்க..

உங்க ரெண்டு பேரு கலாட்டாவுல டேக் அதிகம் வாங்கிருக்குமே..?

யூனிட்டே சிரிச்சாங்க.. ஆனா நம்புங்க சார்.. நான்லாம் சிங்கிள் டேக் ஆர்டிஸ்ட்.. சிங்கிள் டேக்ல ஒகே பண்ணுனேன்.

இந்தப்படத்துல உங்களுக்கு ஏதாவது மனக்குறை..?

சூப்பர்ஸ்டார் கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.. ஆனால் ஒரு ஹீரோயின் கூட கொடுக்கல சார்.. இந்தப்படத்துலன்னு இல்ல.. எல்லா படத்துலயும் ஹீரோயின் மட்டும் தரவே மாட்டேங்கிறாங்க.. ஐட்டம் சாங்கா தர்றாங்க.. ஆனா தனியா ஆடவிட்டுடுறாங்க.. என்ன சார் வெறும் ட்ராக்காவே முடிச்சிடுறீங்களேன்னு கேட்டா, சார் உங்களுக்காகவே தனியா பாட்டு வச்சிருக்கோம், அத பாருங்க சார்னு நம்மள சமாளிச்சு அனுப்பிடுறாங்க..

படத்தோட டைரக்டர் திரைவண்ணன் பத்தி சொல்லுங்களேன்..?

அற்புதமான டைரக்டர்.. இந்த படத்துல என்னோட கேரக்டரை என்னை மைண்ட்ல வச்சு எனக்காகவே உருவாக்கிட்டு எங்கிட்ட வந்தார்.. ஸ்பாட்ல எங்ககிட்ட இருக்குற நடிப்பை நாங்க எப்படி வெளிப்படுத்துறோமோ அதுல பெஸ்ட்டா இருக்கிறத அழகா எடுத்துக்குவார்.. இந்தப்படம் வெளியாச்சுன்னா என்னோட ரசிகர்களுக்கு நிச்சயம் அது திருவிழாவாத்தான் இருக்கும்.

ரசிகர்களுக்கு வேற ஏதாவது சொல்ல விரும்புறீங்களா..?

பவர்ஸ்டார் பிறந்தநாளை தேசிய நாளாக அறிவிக்கணும்னு மத்திய அரசுக்கு வேண்டுகோள் வைக்கிறேன்னு இந்தப்படத்துல சிவா ஒரு சீன்ல சொல்லிருக்கார்.. தம்பிக்கு நன்றி.. அது என்ன தேசிய நாள் என்பதை படத்தை பார்த்து தெரிஞ்சிக்கோங்க.. அதுவரைக்கும் சஸ்பென்ஸ்.. இதையும் மறக்காம ரசிகர்கள் கிட்ட சொல்லிருங்க..

கொஞ்சம் கூட சிரிக்காமல் சாதரணமாக சொன்னபடி பேட்டியை முடிக்கிறார் பவர்ஸ்டார்.