ல ஊர்களிலும் சினிமா ஆர்வத்தில் குறும்படங்களை இயக்கி வருகிறார்கள் இளைஞர்கள் .. சிலகுறும்பட இயக்குனர்கள் இன்று தமிழ் சினிமாவில் நட்ச்சத்திர இயக்குநர்களாகவும் இருக்கிறார்கள் .
அந்த வகையில் இன்டிபெண்டன்ட் திரைப்படங்கள் இயக்குவது இந்தியாவில் குறைவு ,அதற்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங்கும் இல்லை. வெளிநாடுகளில் இத்தகைய படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது.
சென்னையில் எக்ஸ்பிரெஸ் அவென்யூ மாலின் கட்டுமான வேலைப்பிரிவின் உதவி மேலாளராகப் பணிபுரியும் மகேஷ்வர பாண்டியன் ‘இயக்குநன்’ என்கிற படத்தை எடுத்திருக்கிறார் …
‘இயக்குநன்’ படத்தை பற்றி மகேஷ்வர பாண்டியன் சொன்னது ……
”நான் எக்ஸ்பிரெஸ் அவென்யூ மாலின் கட்டுமான வேலைப்பிரிவின் உதவி மேலாளராகப் பணிபுரிகிறேன். சிறு வயதில் இருந்தே எனக்கு சினிமா மற்றும் அது சார்ந்த வேலைகளில் அதிக ஈடுபாடு உண்டு.
அதனால் வேலையில் சேர்ந்து ஓரளவுக்கு வருமானத்தை நிலைப்படுத்திய பின்னர், ஸ்ரீதர் என்பவருடன் இணைந்து ‘அகமுகம்’ என்ற குறும்படத்தை இயக்கினேன்.
அது தந்த அனுபவமும், தன்னம்பிக்கையும் தனியாக ஒரு படத்தை இயக்கும் தைரியத்தைக் கொடுத்தன.
முதல் படத்தின் மூலம் பெரிதும் பேசப்பட்ட ஓர் இயக்குநர் தற்போது இரண்டாவது படத்துக்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கிறார். அந்த நேரத்தில் அவர் உருவாக்கிய கதாபாத்திரங்கள் அவரின் பட உருவாக்கத்தில் தலையிடுகின்றன. ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் நல்லது கெட்டது என இரண்டு எண்ணங்கள் இருக்கும். அந்த எண்ணங்களில் இருந்தும், கனவுலகிலிருந்தும் அவர் எவ்வாறு மீண்டு வருகிறார், அவரால் இரண்டாவது படத்தை எடுக்க முடிந்ததா என்பதை பல்வேறு தளங்களின் வழியாக சொல்லி இருக்கிறோம்.
ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை அன்று படப்பிடிப்பில் ஈடுபடுவோம். தினமும் அலுவலக வேலைகளை முடித்துவிட்டு 6 மணிக்கு மேல் திரைப்பட வேலைகளில் உட்காருவேன். அந்த வாரம் எடுத்த காட்சிகள் சார்ந்த வேலைகள் இரவு 2, 3 மணி வரை நீளும். படத்தில் பணிபுரிந்தவர்கள் அனைவருமே வேலை பார்த்துக்கொண்டே படத்துக்காக உழைத்தவர்கள்தான். படத்தில் நடித்தவர்கள் எல்லோருமே முழுநேரக் கலைஞர்கள் என்பதால் அவர்களுக்கு மட்டும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடிப்பது சவாலாக இருந்தது.
படத்தில் இயக்குநராக ஈஸ்வர் என்ற புதுமுகம் நடித்திருக்கிறார். இயக்குநருடன் வாழும் பாத்திரங்களில் ஒருவராக, ‘சேதுபதி’, ‘சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது’ ஆகிய படங்களில் நடித்துள்ள லிங்கேஷ் நடித்திருக்கிறார். சுமார் 5 மாதங்களில் இந்த படத்தை எடுத்து முடித்துவிட்டோம். இது 65 நிமிடங்கள் ஓடக்கூடிய சைக்கலாஜிக்கல் ஃபேன்டஸி இன்டிபெண்டன்ட் திரைப்படம். படத்தை துபாயில் வாழும் சாய் என்ற நண்பர் தயாரித்திருக்கிறார். படத்தை வரும் ஞாயிற்றுக்கிழமை மாலை ஆர்கேவி திரையரங்கில் மூன்று காட்சிகளாக இலவசமாக திரையிட உள்ளோம்
இன்டிபெண்டன்ட் திரைப்படங்களுக்கு இந்தியாவில் பெரிய அளவில் மார்க்கெட்டிங் இல்லை. வெளிநாடுகளில் இத்தகைய படங்களைப் பற்றிய விழிப்புணர்வு இருக்கிறது. ஆனால் இப்படியொரு விஷயம் இருக்கிறது என்பதே நம்மவர்களுக்குத் தெரிவதில்லை. அதை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இதை ஆரம்பித்திருக்கிறோம்.
திரையரங்குகளை அணுகியபோது, அவர்கள் படம் சுமார் 2 மணி நேரமாவது ஓட வேண்டும் என்று கூறினர். அதனால் ஒரே திரையரங்கில் சிறப்புக் காட்சிகளாக படத்தை வெவ்வேறு நேரங்களில் இலவசமாக திரையிடத் திட்டமிட்டோம். மற்ற துறைகளில் இருந்துகொண்டேயும் திரைப்படம் எடுக்க முடியும் என்பதை உணர்ந்து இன்னும் பலர் திரையுலகில் நுழைய வேண்டும் என்பதே எங்களின் ஆசை” என்கிறார் மகேஷ்வர பாண்டியன்.