‘மெட்ரோ’ படத்தின் மூலமாக அறிமுகமாகி இருக்கிறார் சிரிஷ். இதுவரை இப்படத்தைப் பார்த்த அனைவருமே படத்தின் கதையம்சம், நடிப்பு, ஒளிப்பதிவு, உருவாக்கல் உள்ளிட்ட விஷயங்கள் தத்ரூபமாக இருப்பதாக பாராட்டியிருக்கிறார்கள்.
இப்படத்தில் நடித்த அனுபவம் குறித்து சிரிஷ் “எனக்கு 10ம் வகுப்பு படிக்கும் போதில் இருந்தே நடிகனாக வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. லயோலா கல்லூரியில் விஸ்காம் படிக்கும் போது கலைராணி மேடத்திடம் நடிப்பு, பாண்டியன் மாஸ்டரிடம் சிலம்பம், ஜெயந்தி மேடத்திடம் நடனம் ஆகியவற்றை கற்றுக் கொண்டேன்.
‘ஆள்’ படம் முடிவடையும் தருவாயில் இருந்தே எனக்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சாரைத் தெரியும். அதற்குப் பிறகு இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. அவர் ‘மெட்ரோ’ கதையை தயார் செய்தவுடன் அதற்கான ஆடிசனில் கலந்து கொண்டு இக்கதையில் நடிக்க தேர்வானேன். இப்படத்தின் கதையை முழுமையாக தெரிந்து கொண்டு மீண்டும் கலைராணி மேடத்திடம் நடிப்புக்கு பயிற்சி எடுத்தேன்.
முதல் நாள் படப்பிடிப்பின் போது எனக்கு கேமிரா முன்னால் நடிப்பதற்கு கொஞ்சம் தயக்கம் இருந்தது. ஆனால், படக்குழுவினர் தான் முழுக்க எனக்கு உறுதுணையாக இருந்தார்கள். அதற்கு இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் சாருக்கும் மற்றும் ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
எனக்கு நிறைய நடிகர்களைப் பிடிக்கும். ஆனால் அவர்கள் யாரையும் பின்பற்றாமல் எனக்கு என்ன வருகிறதோ அதற்கு ஏற்றார் போல் கதையைத் தேர்வு செய்து நடிக்க தான் ஆசை. இப்போது ஒரு ஹாரர் படத்தில் நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் அனைத்து முடிவான உடன் முறையாக படக்குழு அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறது” என்று சந்தோஷத்துடன் பகிர்ந்து கொண்டார் சிரிஷ்.