8 பாயிண்ட் எண்டர்டெயின்மெண்ட் P.அருமைச் சந்திரன் தயாரித்துள்ள திரைப்படம் ‘பறந்து செல்ல வா’. இத்திரைப்படத்தின் இசை மற்றும் காட்சி முன்னோட்டம் (ட்ரெய்லர்) ஆகியவற்றின் வெளியீடு ஜூன் 18 2016 அன்று சிங்கப்பூரில் பிரமாண்டமான அரங்கில் வெளியிடப்படுகிறது. சிங்கப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் விக்ரம் நாயர், நியமன உறுப்பினர் கணேஷ் ராஜாராம், முன்னாள் உறுப்பினர் இரா. தினகரன் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
கபாலி படத்தின் இயக்குனர் பா.ரஞ்சித் மற்றும் நீயா நானா கோபிநாத் இருவரும் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கிறார்கள். படத்தில் நடித்துள்ள லுத்ஃபுதீன், ஐஸ்வர்யா ராஜேஷ், சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி, மனோபாலா, பேராசிரியர் ஞானசம்பந்தன் போன்ற முன்னணி நட்சத்திரங்கள், இசை அமைப்பாளர் ஜோஷ்வா ஶ்ரீதர், பாடலாசிரியர் நா.முத்துக்குமார், எடிட்டர் M.V. ராஜேஷ்குமார், ஒளிப்பதிவாளர் சந்தோஷ் ஆகியோரும் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள்.
இத்திரைப்படத்தில் அறிமுகமாகும் சீன நட்சத்திரம் நரேல் கெங், சண்டைப் பயிற்சி இயக்குனர் சன்னி பாங் மற்றும் சிங்கப்பூர் நட்சத்திரங்களான ‘நெருப்பு’ குணா, மதி, சுகன்யா மற்றும் திரைப்படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்களும் பங்கேற்கிறார்கள்.
தனபால் பத்மநாபன் இயக்கத்தில் முழுநீள நகைச்சுவைக் காதல் திரைப்படமாக உருவாகியுள்ளது ‘பறந்து செல்ல வா’. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் சிங்கப்பூரில் நடைபெற்றது.
சதீஷ், கருணாகரன், ஆர்.ஜே.பாலாஜி – நகைச்சுவைக் கலைஞர்களான இவர்கள் மூவரும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர். இந்திய – சிங்கப்பூர் கலைஞர்களின் பங்களிப்பில் முழுமையான கமர்ஷியல் படமாக உருவாகிறது, ‘பறந்து செல்ல வா’.