‘மன்னர் வகையறா’வுக்காக விமல் – ரோபோ சங்கரின் புதுக்கூட்டணி

433

புதிதாக திரைப்பட தயாரிப்பில் இறங்குபவர்களுக்கு ரொம்பவே பாதுகாப்பான ஏரியா என்றால் அது காமெடி படங்கள் தான். அன்றிலிருந்து இன்றுவரை இந்த நிலை மாறவே இல்லை.. அதை உணர்ந்ததால் தானோ என்னவோ அரசு பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தங்களது முதல் படமாக சிவா, பவர்ஸ்டார் சீனிவாசன் என்கிற சூப்பர்ஹிட் கூட்டணியை வைத்து ‘அட்ரா மச்சான் விசிலு’ என்கிற காமெடி படத்தை தயாரிப்பதன் மூலம் தமிழ்சினிமாவில் களம் இறங்கியுள்ளார்கள்.

இந்தப்படத்திற்கான வரவேற்பு தாறுமாறாக எகிறியுள்ள நிலையில் படத்தின் ரிலீசுக்கான இறுதிக்கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தநிலையில் சூட்டோடு சூடாக தங்களது அடுத்த படத்தை தயாரிப்பதற்கான வேலைகளில் ஏற்கனவே இறங்கிவிட்டது அரசு பிலிம்ஸ். ‘மன்னர் வகையறா’ என படத்திற்கு வைக்கப்பட்டுள்ள பெயரே இது நிச்சயமாக காமெடி படம் என யோசிக்காமல் டிக் அடிக்கவைக்கிறது.

அதை உறுதிப்படுத்துகிற மாதிரி காமெடியுடன் கூடிய கமர்ஷியல் படங்களை தருவதில் கைதேர்ந்தவரான இயக்குனர் பூபதி பாண்டியன் தான் இந்தப்படத்தை இயக்குகிறார். விமல், கயல் ஆனந்தி, பிரபு, சரண்யா, ரோபோ சங்கர், நாசர், யோகிபாபு, ஜெயபிரகாஷ், கார்த்திக் (யாரடி நீ மோகினி) என ஒரு மாபெரும் நட்சத்திர பட்டாளமே இந்தப்படத்தில் நடிக்கின்றனர்.

இதுநாள் வரை தான் நடித்த படங்களைவிட, இந்த ‘மன்னர் வகையறா’ தன்னை வித்தியாசப்படுத்திக்காட்டும் என்றும், காமெடியில் தன்னை இன்னும் ஒரு படி மேலே கொண்டுசெல்லும் படமாக இது இருக்கும் என்றும் இரட்டிப்பு மகிழ்ச்சியுடன் படப்பிடிப்புக்கு தயாராகி வருகிறார் விமல். தவிர இதுநாள் வரை சூரியுடன் காமெடிக்கூட்டணி அமைத்துவந்த விமல், இப்போது ரோபோ சங்கருடன் புதிதாக கூட்டணி அமைத்திருப்பதும் ஸ்பெஷல் தான்.

கதாநாயகி ‘கயல்’ ஆனந்தியை பற்றி சொல்லவே தேவையில்லை.. இன்று மீடியம் பட்ஜெட் தயாரிப்பாளர்களின் மினிமம் கியாரண்டி நாயகி.. அவ்வளவு ஏன்.. ஜி.வி.பிரகாஷுடன் மூன்றாவதாகவும் ஜோடி சேர்ந்திருக்கிறார் என்றால் அவரது ராசியை பற்றி சொல்லவும் வேண்டுமோ..? அந்த ராசி, இந்த  ‘மன்னர் வகையறா’வின் வெற்றிக்கும் பக்கபலமாக இருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை.

படத்தின் இன்னொரு வலுவான தூண் என்று இதில் நடிக்கும் ரோபோ சங்கரை தாராளமாக குறிப்பிடலாம். இன்று தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’ படத்தின் வெற்றிக்கும் அந்தப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் குலுங்க குலுங்க சிரித்துகொண்டே தியேட்டரை விட்டு சந்தோஷத்துடன் வருவதற்கும் மையமாக அமைந்திருப்பதே ரோபோ சங்கரின் காமெடி தான். ‘மன்னர் வகையறா’ படத்தில் கிட்டத்தட்ட சோலோ காமெடியனாகவே மாறியிருக்கும் ரோபோ சங்கரின் காமெடி மிகப்பெரிய ஹைலைட்டாக இருக்கும் என நம்பலாம்.

Previous articleMudinja Ivana Pudi Stills
Next articleராம்பாபு புரோடெக்ஷன்ஸ் சார்பில் எம்.பி.ராம்பாபு தயாரிக்கும் திரைப்படம் முடிஞ்சா இவன புடி