“இக்கட்டான தருணங்களை பொறுமையாகவும், அழகாகவும் கையாளுகின்ற திறமை படைத்தவர் இயக்குனர் விஜய்” – பிரபுதேவா

மின்னலுக்கு ஈடு கொடுத்து நடனம் ஆடுபவர் யார் என்று ஒரு சிறு பிள்ளையை கேட்டால் கூட, அது கண்ணை மூடிக்கொண்டு பிரபு தேவா என்று தான் சொல்லும். அந்த அளவிற்கு இந்திய ரசிகர்கள் மட்டுமின்றி உலக ரசிகர்கள் மனதிலும் நீங்கா இடத்தை பிடித்தவர். மிக முக்கியமாக, தன்னுடைய நகைச்சுவை உணர்வாலும், செண்டிமெண்ட் காட்சிகளாலும், பெண் ரசிகர்கள் மத்தியில் தனக்கென ஒரு அந்தஸ்தை விதைத்த ஒரு நடிகர் இவர் தான் என்று சொன்னால் அது மிகையாகாது. நடனம் மட்டுமின்றி நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என பல்வேறு துறைகளில் கால் பதித்து வெற்றி கண்ட பிரபு தேவா, தற்போது விஜய் இயக்கத்தில் உருவாகி கொண்டிருக்கும் DEVI(L) திரைப்படம் மூலம் மீண்டும் வெற்றி கனியை சுவைக்க உள்ளார். பல வருட கால இடைவேளைக்கு பிறகு பிரபு தேவா கதாநாயகனாக நடிக்கும் இந்த படத்தில் தமன்னா, சோனு சூட் மற்றும் பாலிவுட்டின்  முன்னணி நடன இயக்குனர் பாரா கான் தமிழ் சினிமாவில் முதல் முறையாக சிறப்பு தோற்றத்தில் நடிப்பது அனைவரின் எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. அதுமட்டுமின்றி, ஹாலிவுட்டின் புகழ்  பெற்ற கதாசிரியர் பவுல் ஆரோன், விஜயுடன் இணைந்து கதை எழுதுவது, இந்த படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பு. இது போன்ற பல சுவாரசியங்களோடு  உருவாகி வருகிறது DEVI(L) திரைப்படம்.
 
“இயக்குனர் விஜயின் சிறப்பே இக்கட்டான சூழ்நிலைகளை பொறுமையாகவும், அழகாகவும் கையாளும் திறமை தான். ‘எப்படி விஜய் உங்களால் மட்டும் எல்லா காரியங்களையும் கூலாக செய்ய முடிகிறது?’ என்று அவரிடம் நான் பல தடவை வெளிப்படையாகவே கேட்டிருக்கிறேன். ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று  மொழிகளில் ஒரு படத்தை உருவாக்குவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதை யாவும் ஒரு பாஸிடிவ் எண்ணத்தோடு அனுகி, இரவும் பகலுமாக உழைத்து வருவதே விஜயின் சிறப்பம்சம். பல சுவாரசியங்களும், திருப்பங்களும் நிறைந்த இந்த DEVI(L)  திரைப்படம் எங்கள் படத்தில் பணிபுரியும் ஒவ்வொருவர்  வாழ்க்கையிலும்  சிறந்த அடையாளமாக அமையும் என நம்புகிறோம்”.
 
தமிழ் மட்டுமின்றி பிற மொழி படங்களிலும் தனது வெற்றி சுவுடுகளை பதித்து வருகிற பிரபு தேவா கூறுகையில், “பல்வேறு மொழிகளை தாண்டி, கலைஞர்களை ஒன்று சேர்க்கும் வலிமை சினிமாவிற்கு மட்டும் தான் உண்டு. அந்த வகையில், தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அனைத்து மொழிகளும் எனக்கு தாய் மொழி தான். மக்கள் விருப்பம் என்பதை தாண்டி, எனக்கென்று ஒரு டிரீம் பிராஜக்ட் இருக்கிறது. நமது பண்டையக்கால ‘மகாபாரதத்தை’, புகழ் பெற்ற  ஹாலிவுட் சினிமாவான  ‘லார்ட் ஆப் தி ரிங்க்ஸ்’ படத்திற்கு இணையாக எடுப்பது தான்” என்று கூறி தனக்கென உரிய அந்த ஸ்மார்டான புன்னகையுடன் விடை பெறுகிறார் பிரபு தேவா.