இயக்குனர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் இதுவரை 6 சர்வதேச விருதுகளை வென்றுள்ளது. ‘கனவு வாரியம்’ திரைப்படம், ஜீன் 11 முதல் 19 வரை சீனாவில் நடைபெறும் 19 வது ஷாங்காய் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகி உள்ளது. இதற்கு முன் டைரக்டர் அருண் சிதம்பரத்தின் ‘கனவு வாரியம்’ திரைப்படம் உலகப் புகழ் பெற்ற இரண்டு ‘ரெமி’ விருதுகளை வென்றது. தமிழக கிராமங்களில் நிலவிய மின்வெட்டு பிரச்சனையை மையமாக கொண்ட ‘கனவு வாரியம்’ திரைப்படம், சிறந்த திரைப்படத்திற்கான உலகப் புகழ் பெற்ற ‘பிளாட்டினம் ரெமி’விருதையும், இத்திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘கல்லா மண்ணா’ என்ற பாடல் குழந்தைகளுக்கான சிறந்த பாடல் பிரிவில், ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருதையும், அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் நடைபெற்ற 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் சர்வதேச திரைப்பட விழாவில் வென்றுள்ளது. மேலும் 49வது வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவில் மக்களுக்கு மிகவும் பிடித்த படமாகவும் (AUDIENCE FAVORITE MOVIE) ‘கனவு வாரியம்’ திரைப்படம் தேர்வானது. அமெரிக்காவின் ஹூஸ்டன் நகரில் ஏப்ரல் 8 முதல் 17 ஆம் தேதி வரை நடைபெற்ற 49 ஆவது சர்வதேச திரைப்பட விழாவில் (‘வேர்ல்ட் ஃபெஸ்ட் ஹூஸ்டன்’) டைரக்டர் அருண் சிதம்பரத்திற்கு இந்த விருதுகள் வழங்கப்பட்டன. அவருடன் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் திரு.கார்த்திக் சிதம்பரம் அவர்களும் உடனிருந்தார். வேர்ல்ட் ஃபெஸ்ட் திரைப்பட விழாவின் தேர்வுக் குழுவின் மதிப்பெண்களின் படி நூற்றுக்கு, 85-ல் இருந்து 89 மதிப்பெண்கள் வரை வாங்கும் திரைப்படங்கள் ‘சில்வர் (வெள்ளி) ரெமி’ விருதையும், 90-ல் இருந்து 94 வரை வாங்கும் திரைப்படங்கள் ‘கோல்ட் (தங்கம்) ரெமி’ விருதையும், 95-ல் இருந்து 99 வரை வாங்கும் திரைப்படங்கள் ‘பிளாட்டிணம் ரெமி’ விருதையும் வெல்லும். இரண்டு ரெமி விருதுகளை வெல்லும் முதல் தமிழ் இயக்குனர் அருண் சிதம்பரம் ஆவார். ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு அருண் சிதம்பரம் கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி, இயக்கி கதாநாயகனாகவும் நடித்துள்ளார். கூடுதல் சர்வதேச அங்கீகாரம் அமெரிக்காவின் ஒக்லஹோமா மாகாணத்தில் ஏப்ரல் 19 முதல் 24 வரை நடைபெற்ற ‘17 வது பேர் போன்ஸ் சர்வதேச திரைப்பட விழா’விலும், ஏப்ரல் 23-ம் தேதி லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்ற ‘லாஸ் ஏஞ்சல்ஸ் பிலிம் & ஸ்கிரிப்ட் திரைப்பட விழா’விலும், பிப்ரவரி 9 முதல் 13 வரை நடைபெற்ற மத்திய அரசால் நடத்தப்படும் ‘தேசிய அறிவியல் திரைப்பட விழா’விலும் (National Science Film Festival) ‘கனவு வாரியம்’ திரைப்படம் விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
‘வேர்ல்ட் ஃபெஸ்ட்’ தலைவரின் கூற்று இதற்கு முன் ‘ரெமி’ விருதை, உலகின் புகழ்பெற்ற இயக்குனர்களான ‘ஜுராஸிக் பார்க்’ எடுத்த ஸ்டீவன் ஸ்பீல்பெர்க், ‘கிளேடியேட்டர்’ எடுத்த ரிட்லி ஸ்காட், ‘காட்பாதர்’ எடுத்த போர்ட் கப்பல்லோ, ‘ஸ்டார் வார்ஸ்’ எடுத்த ஜார்ஜ் லுகாஸ், ‘லைப் ஆப் பை’ எடுத்த ஆங் லீ உள்ளிட்டோர் வென்றுள்ளனர். 74 நாடுகளிலிருந்து 4500-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் கலந்து கொண்ட போட்டியில், ‘கனவு வாரியம்’ திரைப்படம் 2 ரெமி விருதுகளை வென்றுள்ளது.
உலகில் முதல் முறையாக முன்னதாக ஏப்ரல் 9 -ஆம் தேதி உலகில் முதல் முறையாக ‘வேர்ல்ட் ஃபெஸ்ட்-ஹுஸ்டன்’ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்ட ‘கனவு வாரியம்’ திரைப்படம் மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இது குறித்து, ‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இணை தயாரிப்பாளர் கார்த்திக் சிதம்பரம் கூறுகையில், “ஹூஸ்டனில் வசிக்கும் தமிழர்களும், இந்தியர்களும், 74 நாடுகளில் இருந்து திரைப்பட விழாவிற்கு திரண்டு வந்த பல்வேறு இயக்குனர்களும், அமெரிக்கா, இங்கிலாந்து, சீனா, ஜப்பான், தென் ஆப்ரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், அயர்லாந்து, கனடா போன்ற நாடுகளிலிருந்து வந்த சினிமா ஆர்வலர்களும் ‘கனவு வாரியம்’ திரைப்படத்திற்கு பெரும் வரவேற்பை பரிசளித்தனர். திரைப்படத்தை பார்த்த அனைவரும் “இது கொண்டாடப்பட வேண்டிய படம். இது சிரிக்க வைக்கிறது. பார்ப்பவர் நெஞ்சஙளில் புது நம்பிக்கையை விதைக்கிறது. குழந்தைகள் அவசியம் பார்க்க வேண்டிய திரைப்படம்” என்று ஒரு மித்த கருத்தை கூறினர். படம் பார்த்த பல்வேறு நாட்டினரும், குழந்தைகளும் படம் குறித்த தங்களின் கருத்துக்களை வரிசையில் காத்திருந்து பதிவு செய்தனர். இந்தத் திரைப்படம் தமிழகத்தில் குழந்தைகள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தையும், நம்பிக்கையையும் தூண்டும் படமாக இருக்கும். இந்த வருடம் அனைவரும் அவசியம் பார்க்க வேண்டிய படமாக ‘கனவு வாரியம்’ இருக்கும். விரைவில் திரை அரங்குகளில் இந்தப் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
இயக்குனர் அருண் சிதம்பரம், “அறிமுக இயக்குனரான எனக்கு இந்த விருதகள் பெரிய ஊக்கம் தருகின்றன. எங்கள் ஒட்டுமொத்த குழுவிற்கும் இந்த விருதுகள் புது நம்பிக்கையை பாய்ச்சி இருக்கிறது. இதை பரிசளித்த கடவுளுக்கும், இத்திரைப்ப்டத்தில் பணிபுரிந்த அனைவருக்கும் நன்றி. பொறுமை காத்த என் மனைவிக்கும், என் மகன் எழிலுக்கும் நன்றி. இந்த விருதுகள் தயாரிப்பாளர்களும், என் அம்மா பூங்கோதை சிதம்பரமும் இல்லை என்றால் சாத்தியமாகி இருக்காது” என்று கூறினார்.
‘கனவு வாரியம்’ திரைப்படத்தின் இயக்குனர் அருண் சிதம்பரம் அமெரிக்காவில் தனது மேற்படிப்பை (MS) முடித்துவிட்டு புகழ்பெற்ற வங்கியான ‘ஜே பி மார்கன் சேஸில்’ (சிகாகோவில்) பணி புரிந்தார். சினிமாவின் மீதுள்ள இலட்சியத்தால் இலட்சங்களில் சம்பாதிக்கும் வேலையை விட்டு விட்டு சென்னை வந்து ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை எழுதி இயக்கி நடித்து உள்ளார். அருண் சிதம்பரம், மறைந்த மக்களின் ஜனாதிபதி மேதகு அப்துல் கலாம் அவர்களால் பெரிதும் பாரட்டப்பட்டவர். அருண் சிதம்பரம், ‘ஆணழகன்’ சிதம்பரத்தின் இளைய மகன். கடந்த நாற்பது ஆண்டுகளாக உடற்பயிற்சி கலையில் வல்லுனராக திகழும் ‘ஆணழகன்’ டாக்டர். அ. சிதம்பரம் மறைந்த முதல்வர் மாண்பமை திரு.எம்.ஜி.ஆர் அவர்கள் உட்பட தமிழகத்தின் பல பிரபலங்களுக்கு உடற்பயிற்சி ஆலோசகர். இவரும், கார்த்திக் சிதம்பரம் அவர்களும் இணைந்து ‘டிசிகாப் சினிமாஸ் (DCKAP CINEMAS) பேனரில் ‘கனவு வாரியம்’ திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.