ஒரு மனிதனின் துன்ப காலங்களில் அவனை மகிழ்விப்பது அவனுடைய இனிமையான நினைவுகள் தான். அத்தகைய பொக்கிஷமான நினைவுகளை காட்சியாய், புகைப்படமாய் மாற்ற உதவுவது ஒளிப்பதிவு. அதே போல் ஒரு திரைப்படத்தின் காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அதன் இதயமாக செயல்படுவதும் இந்த ஒளிப்பதிவு தான். அந்த வகையில் சக்தி சரவணின் ஒளிப்பதிவில் உருவான உன்னோடு கா திரைப்படம் இருக்கும் என பெரும் அளவில் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரிக்க, அறிமுக இயக்குனர் RK இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆரி மற்றும் மாயா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மங்காத்தா, சென்னை 28, சிவா மனசுல சக்தி மற்றும் பாஸ் என்கிற பாஸ்கரன் படங்களில் தன்னுடைய இயற்கையான காட்சிகளாலும், தனித்துவமான காட்சிகளாலும் மக்களின் மனதில் வேரூன்றி நின்ற சக்தி சரவணன் கூறுகையில், “நான் இதற்கு முன்னாள் காமெடி, அதிரடி, செண்டிமெண்ட் என பல வகை திரைப்படங்களில் பணியாற்றி இருந்தாலும், உன்னோடு கா திரைப்படம் எனக்கு தனி சிறப்பு. அதற்கு மிக முக்கிய காரணம் அபிராமி ராமநாதன் சார் தான். அவரின் கதையம்சத்தில் உருவான இந்த படத்திற்கு நான் ஒளிப்பதிவு செய்துள்ளேன் என்பதை நினைக்கும் போது எல்லையற்ற மகிழ்ச்சியாக உள்ளது. அவரின் சொந்த ஊரான சிவங்கை மாவட்டம் பூலாங்குறிச்சியில் படமாக்கப்பட்ட படத்தின் காட்சிகள் அனைத்தும் மிக அற்புதமாக உருவாகி இருக்கின்றன. தனித்துவமான படைப்பாற்றல் தான் என்னுடைய தாரகை மந்திரம்” என்கிறார் படத்தின் ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன்