ஒரு திரைப்படத்தின் வெற்றியை இரண்டாக்கும் தன்மை இசைக்கு உண்டு என்பதை உணர்த்தும் வண்ணமாக அமைந்துள்ளது ‘உன்னோடு கா’ திரைப்படத்தின் பாடல்கள். தனது ‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் பாடல்கள் மூலம் மக்களின் மனதில் ஆழமாக வேரூன்றி நின்ற இசை அமைப்பாளர் C சத்யா தற்போது மீண்டும் ‘உன்னோடு கா’ திரைப்படம் மூலம் தனது தனித்துவமான திறமையை வெளிப்படுத்தி உள்ளார். தமிழ் சினிமாவின் மூத்த தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் கதை எழுதி தயாரிக்க, அறிமுக இயக்குனர் RK இந்த படத்தை இயக்கி உள்ளார். ஆரி மற்றும் மாயா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரபு, ஊர்வசி, பால சரவணன் மற்றும் மிஷா கோஷல் முக்கிய வேடங்களில் நடித்திருப்பது குறிபிடத்தக்கது.
‘உன்னோடு கா’ திரைப்படத்திற்கு இசை அமைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார் சத்யா: “என்னுடைய மற்றொரு படத்தின் இசை வெளியீட்டு விழா அபிராமி மெகா மாலில் நடைப்பெற, அந்த விழாவில் பங்கேற்ற ராமநாதன் சார், நான் அந்தப் படத்தில் நான் இசையமைத்த பாடலை கேட்டு என்னை வெகுவாக பாராட்டினார். அதன் பலனாக எனக்கு கிடைத்த அறிய வாய்ப்பு தான் ‘உன்னோடு கா’. முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட இந்த திரைப்படத்திற்கு இசை அமைத்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியை தருகிறது. வரிகள் + டியூன் + வாத்தியங்கள் + குரல். இது தான் எங்களின் தாரகை மந்திரமாக செயல்பட்டது. பொதுவாக பிள்ளைகள் காதலுக்காக வீட்டை விட்டு ஓடி விட்டால் வருத்தப்படும் பெற்றோறரை தான் இதுவரை அனைவரும் கண்டிருப்போம். ஆனால் இந்த படத்தில் அதை அவர்கள் கொண்டாடும் வகையில் ‘ஓடிட்டாங்க’ என்னும் பாடல் இடம் பெற்றுள்ளது. ‘திருப்பதி ஏழுமலை வெங்கடேசா’ பாடலுக்கு பிறகு, மனோ மற்றும் கிருஷ்ணா ராஜ் ஆகிய இருவரும் 15 வருடங்கள் கழித்து இந்த பாடலில் இணைந்துள்ளனர்.”
“இந்த படத்தில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் என் மகள் வைமித்ரா பாடியுள்ள ‘ஊதே ஊதே’ பாடல். மேலும் அபிராமி ராமநாதன் அவர்களின் பேத்தி மீனாட்சி பெரியக்கருப்பன் இந்த பாடலில் நடித்துள்ளது, படத்திற்கு அமைந்த ஒரு சிறப்பம்சம். முழுக்க முழுக்க குழந்தைகளால் உருவாக்கப்பட்ட இந்த பாடலுக்கு மதன் கார்கியின் தனித்துவமான வரிகள் மேலும் மேலும் அழகு சேர்த்துள்ளது. ரா என்னும் தமிழ் வார்த்தையை தா போல் உச்சரிக்க செய்திருக்கிறார் மதன். இந்த பாடலுக்கு வாத்தியங்கள் வாசிப்பதில் இருந்து கோரஸ் பாடும் வரை அனைத்தும் குழந்தைகளால் கையாளப்பட்டவை. உலகளவில் பியானோ இசை வாத்தியத்தில் திறன் பெற்ற லிடியன், இந்திய அளவில் புல்லாங்குழலில் புகழ் பெற்ற வர்ஷினி, சிம்போனி இசையில் வயோலின் வாசிக்கும் அன்பு ஆகிய குழந்தைகள் இந்த பாடலுக்கு அஸ்திவாரமாக அமைந்துள்ளனர். பாடலின் குரலுக்கு சொந்தகாரர்களான சிந்தியா, சஜினி, சாஷ்வின், சினேகா மற்றும் உசீஜா ஆகியோர் நிச்சயம் பாடலின் மெல்லிசைக்கு தூணாக அமைந்து இருக்கின்றனர். இந்த பாடலுக்காக கிளாஸ்சிக்கல் கிட்டார் வாசித்த டெல்சி என்னும் சிறுவன், ஜாஸ் இசையில் கைதேர்ந்தவர் மட்டுமில்லாமல் முன்னணி இசை அமைபாளர்களுக்கு வாசிப்பது குறிப்பிடத்தக்கது.
வயதிற்கும் திறமைக்கும் சம்மந்தம் இல்லை என்பதை இந்த குழந்தைகள் மூலம் நான் தெரிந்து கொண்டேன். இந்த தருணத்தில் எனக்கு பக்கபலமாக இருந்த என்னுடைய பெற்றோர், எனது குருக்கள், காலம் சென்ற ஆவடி நாஞ்சில் ராஜா, காலம் சென்ற சாம்ப சிவ ஐயர், சீதா நாராயணன் மற்றும் மாஸ்டர் தக்கேசி ஆகியோருக்கு என் நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன்” என்கிறார் இசை அமைப்பாளர் சத்யா. மக்களின் ஆர்வத்தை தூண்டிய ‘உன்னோடு கா’ திரைப்படம் வருகின்ற மே 13 ஆம் தேதி, விடுமுறை விருந்தாக வெளியாக உள்ளது.