‘ஜங்கிள் புக்’ திரைப்படத்திற்கு இணையாக உருவாகியுள்ளது ‘ஜம்புலிங்கம் 3 டி’

சினிமாவின் எதிர்காலம் 3 டி படங்களில் தான் உள்ளது என்பதை நிரூபிக்கும் வண்ணமாக அமைந்தது தான் சமீபத்தில் வெளியான ‘ஜங்கிள் புக்’ திரைப்படம். பேஸ் புக்கில் தங்களின் பிள்ளைகள் காலத்தை கழித்து கொண்டு இருக்கின்றார்கள் என்று புலம்பும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சி தரும் வண்ணமாக இருந்த ‘ஜங்கிள் புக்’ திரைப்படம், நாலு சுவருக்குள் அடைந்திருந்த எதிர்கால தலைமுறையை வெளி கொண்டு வர உதவி உள்ளது.

அந்த வரிசையில் தற்போது, ‘அம்புலி 3 டி’ மற்றும் ‘ஆஹ’ திரைப்படங்களை இயக்கிய ஹரி – ஹரிஷ் இயக்கி, ஜப்பான் நாட்டில் பல்வேறு தொழில்களில் வெற்றி கண்ட MSG மூவிஸ் மற்றும் ஷங்கர் பிரதர்ஸ் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘ஜம்புலிங்கம் 3 டி’. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும் இந்த படம் மே 13 ஆம் தேதி அனைத்து மக்களையும் மகிழ்விக்க வருகிறது.

“காட்சிகளால் மனதை மயக்கி, பார்வையாளர்களை மெய்சிலிர்க்க வைக்கும் திரைப்படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி உருவாகியுள்ளது. தற்போதைய கால கட்டத்தில், மக்கள் யாவரும் புது புது படைப்புகளை எதிர்பார்க்கின்றனர். அவர்களின் அந்த எண்ணங்களை நிவர்த்தி செய்யும் விதமாக, அனைத்து சுவாரசங்களையும் இந்த படத்தில் உள்ளடக்கியுள்ளோம்.

அதுமட்டுமில்லாது வணிக ரீதீயாக இந்த படம் வெற்றி பெறுவதற்கான எல்லா அம்சங்களும் இதில் நிறைந்துள்ளது. எனவே எங்களின் தயாரிப்பாளர்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் ஜம்புலிங்கம் 3 டி கண்டிப்பாக வெற்றி படமாக அமையும். கலகலப்பான கதாப்பாத்திரத்தில் நடிக்கும் அஞ்சனா, இந்த படத்தில் கோகுலுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். முற்றிலும் தனித்துவமான படமாக இந்த ஜம்புலிங்கம் 3 டி அமைய வேண்டும் என்பதற்காக 90 சதவீத படத்தை நாங்கள் ஜப்பான் நாட்டில் படமாக்கியது குறிப்பிடத்தக்கது. ” என கூறுகின்றனர் இரட்டை சகோதரர்கள் ஹரி – ஹரிஷ். குழந்தைகள் மட்டுமின்றி ஒட்டு மொத்த குடும்பங்களுக்கும் ‘ஜம்புலிங்கம் 3 டி’ ஒரு கோடை கால விருந்தாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.