ரீச் மீடியா சொல்யூஷன் மற்றும் சஹானா ஸ்டுடியோஸ் வழங்கும் “ஜூலியும் நாலு பேரும்”

ரீச் மீடியா சொல்யூஷன் என்னும் புதிய பட நிறுவனம், சஹானா ஸ்டுடியோஸுடன் இணைந்து, “ஜூலியும் நாலு பேரும்” என்ற படத்தை தயாரிக்கிறது. இளம் இயக்குநரான சதீஸ்.R.V-க்கு இது முதல் படம்.

தமிழ் சினிமா ரசிகர்களின் அமோக வரவேற்பை பெற்ற இப்படத்தின், “ஃபர்ஸ்ட் லுக்”-கை தொடர்ந்து, பேய் சீஸன் முடிந்து, நாய் சீஸனை துவங்கி வைத்த பெருமை இப்படத்தின் இயக்குநருக்கு உரியது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தைக்குறித்து இயக்குநர் சதீஷ்.R.V கூறுகையில், “இப்படம் சர்வதேச அளவில் நடக்கும் நாய் கடத்தலைப்பற்றிய படம். அது மட்டுமின்றி முழுக்க முழுக்க குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட காமெடி படம்” என்கிறார்.

மேலும் அவர் கூறுகையில் “விஜய் டி.வி. புகழ் அமுதவானன் மற்றும் ஜார்ஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜம்முவை சேர்ந்த ரீனா என்ற பெண் கதாநாயகியாக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகிறார்.

மற்றபடி, “இப்படத்தின் ஹீரோ அமெரிக்காவிலிருந்து கொண்டு வந்து “ஜூலி” என்ற கதாபாத்திரத்தில் நடிக்க வைக்கப்பட்ட, Beagle வகையை சேர்ந்த லக்கி என்ற நாய்” என்கிறார், இயக்குநர்.

இப்படத்தில் K.A.பாஸ்கர், ஒளிப்பதிவாளராகவும், ரகு ஸ்ரவன் குமார், இசையமைப்பாளராகவும் அறிமுகம் ஆகிறார்கள்.