இளம் இசைக் கலைஞர்களின் கனவுகளை நினைவாக்க வருகிறது ‘டூப்பாடூ’

694

தமிழ்த்திரையுலகின் முன்னணி பாடலாசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக வலம் வந்து கொண்டிருப்பவர் மதன் கார்க்கி. இவரும், இவருடைய நண்பர் கௌந்தேயாவும் இணைந்து ‘டூப்பாடூ’(doopaadoo.com) என்னும் பாடல் தளத்தை வருகின்ற ஏப்ரல் 20 ஆம் தேதி தொடங்க உள்ளனர். சமீபத்தில், பிரபலங்கள் மற்றும் சமூகவலைத்தள வாசிகள் இடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்திய இந்த டூப்பாடூ, இளம் இசைக் கலைஞர்களுக்குக் கிடைத்த ஓரு வரபிரசாதம் என்றே சொல்லலாம். உலகெங்கும் இசைப் பிரியர்கள் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு நாளும் புதுப்புதுப் பாடல்கள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால் இசை துறையில் நுழைய விரும்புவர்கள் தீவிரமான சவால்களைச் சந்திக்க வேண்டியுள்ளது. அந்தத் தடைகளை உடைத்தெறிந்து இசை ஆர்வலர்களின் வாழ்க்கையில் பிரகாச வெளிச்சத்தை ஏற்படுத்தத் தோன்றியது தான் இந்த டூப்பாடூ. “சில முக்கிய காரணிகளை மனதில் வைத்து கொண்டு இந்தத் தளத்தை நாங்கள் உருவாக்கி உள்ளோம். முதலாவதாக, டூப்பாடூவில் நீங்கள் கேட்கப்போகும் பாடல்கள் அனைத்தும், டூப்பாடூவுக்காகவே உருவாக்கப்பட்டவை. அவற்றை நீங்கள் வேறு எங்கும் கேட்க இயலாது. இதன்மூலம், பாடல்கள் சட்டவிரோதமாகப் பரப்பப்படுவதை ஓரளவுக்குத் தடுக்கலாம். அடுத்து, இதில் பிரசுரமாகும் பாடல்களுக்கு நாங்கள் உரிமை பெறுவதில்லை, இசையை உருவாக்கியவர்களிடமே அதன் உரிமை இருக்கும், இதன்மூலம், ஒவ்வொருமுறை அந்தப் பாடல்கள் கேட்கப்படும்போதும் அவர்கள் அதற்கான உரிமைத்தொகையைப் பெறுவார்கள். நிறைவாக, இசைகேட்க இங்கே வருகிறவர்களுக்கும் டூப்பாடூவால் பல நன்மைகள் உண்டு: அவர்கள் தங்களுக்காக உருவாக்கப்பட்ட உண்மையான இசையைக் கேட்கலாம், ரசிக்கலாம் அதுமட்டுமல்லாமல் காசும் பெறலாம். ஆம், கரும்பு தின்ன கூலி என்பது போல, ஒவ்வொருமுறை நீங்கள் டூப்பாடூவில் பாடல்களைக் கேட்கும்போதும், உங்களுக்கு காசு கிடைக்கும்! இது பைரசிக்கு எதிராக நாம் ஒன்றாக எடுத்து வைக்கும் ஒரு அடி” என்கிறார் மதன் கார்க்கி.

மேலும் அவர், “பணவருவாய்க்கு அடித்தளமாக விளங்குவது விளம்பரங்கள். ஒவ்வொரு முறையும் பாடல்களை கேட்கும் போது, விளம்பரகள் தோன்றும். அவற்றின் மூலம் வருவாயில் 40% பாடலை உருவாக்கியவர்களுக்கும், 10% பாடலை கேட்பவருக்கும் தரப்படும். தற்போது முன்னணி இசையமைப்பாளர்களான ஏ.ஆர். ரஹ்மான், சந்தோஷ் நாராயணன், இம்மான், கார்த்திக், அனிருத் அண்ட்ரியா மற்றும் பலர் பாடல்களை டூப்பாடூவுக்காக உருவாக்கியுள்ளார்கள்” என்கிறார். வெளியிலிருந்து பார்க்கும்போது, இசைத்துறை பளபளப்பாகவும் கவர்ச்சிகரமாகவும் இருப்பதாகத் தோன்றலாம், ஆனால் உண்மையில் அதுவொரு நெருக்கடி நிலையில் உள்ளது; வரவுப்பிரச்னை, மரியாதைப்பிரச்னை, நம்பிக்கைப்பிரச்சனை! இவை அனைத்திலும் இருந்து ‘டூப்பாடூ’ இசை கலைஞர்களை தூக்கி நிறுத்தும் என எதிர் பார்க்கப்படுகிறது.

தமிழில் முதல்முறையாக தொடங்கும் டூப்பாடூ(doopaadoo.com) விரைவில் தென்னிந்திய மொழிகளிலும், இந்திய மொழிகளிலும் சில ஆண்டுகளில் உலக மொழிகளிலும் பாடல்களை உள்ளடக்கும் என்றும், இசைத்துறைக்கு மீண்டும் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் என்றும் நம்மிக்கை தெரிவிக்கின்றனர் டூப்பாடூ குழுவினர்.

Previous articleDirector Atlee Thanks Giving Meet
Next articleJoker Movie Audio from Tomorrow