இசையை மட்டுமே வாழ்க்கையாக கொண்டுள்ள ஜஸ்டின் பிரபாகரன்

இசைத்தமிழின் பிறப்பிடமான மதுரை மண்ணில் இருந்து உருவெடுத்துள்ள இளம் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன். தனது சிறுவயதிலிருந்தே தேவாலயங்களில் கீபோர்ட் மற்றும் கிட்டார் வாசித்து வந்த ஜஸ்டின், மதுரை அமெரிக்கன் கல்லூரி மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது. நடுத்தர குடும்பத்தில் பிறந்திருந்தாலும், தனது பெற்றோர் மற்றும் நண்பர்களின் துணையால் சென்னை – தரமணியில் சவுண்ட் இன்ஜினியரிங் முடித்து, பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜிடம் உதவியாளராக மூன்றரை வருடம் பணி ஆற்றினார். அதன் பின்பு, தமிழ் சினிமாவின் நம்பிக்கை நட்சத்திரமாக திகழும் விஜய் சேதுபதியின் ‘பண்ணையாரும் பத்மினியும்’ திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமாகி, தனது முதல் படத்திலேயே கதைக்கு ஏற்ப இசை அமைக்கும் இசையமைப்பாளர் என்று மக்கள் மத்தியில் பெயர் எடுத்தவர். அதனை தொடர்ந்து ஆரஞ்சு மிட்டாய், மலையாளத்தில் குஞ்சிராமாயணம், அட்டக்கத்தி தினேஷின் ஒரு நாள் கூத்து போன்ற படங்களுக்கு இசை அமைத்திற்கும் இவர், தற்போது ராஜா மந்திரி திரைப்படத்தின் இசையமைப்பாளர். படத்தின் பாடல்களை பற்றி அவர் கூறுகையில், “பம்பரம், சிநேகிதியே, லெகுவா லெகுவா, Cauliflowerey மற்றும் கூட்டத்தை கூட்டி என ஐந்து பாடல்கள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இதில் எனக்கு அனைத்து பாடல்களுமே மிகவும் பிடித்தது தான், ஆனால் பம்பரம் பாடல் மட்டும் கொஞ்சம் ஸ்பெஷல். அதற்கு காரணம், இந்த பாடலின் ரெக்கார்டிங் போது, இசைஞானி இளையராஜாவும் அதே ஸ்டுடியோவிற்கு வருகை தந்திருந்தார். அவர் வருகையை சற்றும் எதிர்பாராத நானும், இந்த பாடலை பாடிய சின்னபொண்ணும் இன்ப அதிர்ச்சிக்கு தள்ளப்பட்டோம், பின்னர் அதில் இருந்து மீண்ட நான் இசைஞானியின் காலில் விழுந்து ஆசிர் பெற்றேன். அந்த மகிழ்ச்சிக்கு ஈடு இணை எதுவும் இல்லை,” என்று நெஞ்சம் நெகிழ்கிறார் ஜஸ்டின் பிரபாகரன்.

வெற்றி பாதையை நோக்கி பயணம் செய்யும் இந்த மதுரை வீரனின் இசை எட்டுத்திக்கும் ஒலிப்பது உறுதி!

Previous articleபுரட்சி தளபதி விஷால் நற்பணி இயக்கத்தின் சார்பில் தண்ணீர் பந்தல்
Next articleஅவ்னி மூவிஸ் இயக்குனர் ​சுத்தர்.C ​தயாரிப்பில் “முத்துன கத்திரிக்காய்”