‘ரம்’ நாயகியின் கார் சாகசம்

சூது கவ்வும் திரைப்படத்தில் கற்பனை கதாப்பாத்திரமாக தோன்றி, தமிழக இளைஞர்களின் உள்ளங்களை கிறங்கடித்தவர் சஞ்சிதா ஷெட்டி. இவர் தற்போது அறிமுக இயக்குனர் ‘சாய்’ இயக்கும் ‘ரம்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியான  ‘பீட்சா – 2’ படத்திற்கு பிறகு, மூன்று வருடம் கழித்து இவர் நடிக்கும் தமிழ் படம் இதுதான். அனிரூத் இசையமைப்பில் All In Pictures விஜய் தயாரிப்பில் ‘ரம்’ ஒரு திரில்லர் மூவி. படப்பிடிப்பு முழுக்க முழுக்க இரவு நேரத்தில் தான் நடைபெற்று வருகிறது. “இப்படத்தில் காரில் துரத்திக்கொண்டு போகும் காட்சி ஒன்று இருப்பதை நான் நன்கு அறிவேன், ஆனால் அந்த காரை நான் தான் ஓட்ட வேண்டும் என்று இயக்குனர் சொன்னவுடன் மனதிற்குள் ஒரு பயம் கலந்த பதற்றம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் எனது சக நடிகர்களாகிய ரிஷிகேஷ், விவேக் மற்றும் அம்ஜத்  ஆகியோரும் காரில் ஏற, பயத்தின் உச்சத்துக்கே  சென்று விட்டேன்! காரைவிட்டு இறங்கியதும் இயக்குனர் என்னிடம் கேட்ட கேள்வி என் பதற்றத்தை எல்லாம் சிரிப்பாக மாற்றிவிட்டது” அப்படி என்ன கேள்வி அது? “ஏன்மா, கார் ஒட்ட தெரியாது என்று நாங்கள் உள்ளே ஏறும் முன்னே சொல்லியிருக்கலாமே !! இது தான் அந்த கேள்வி” என்று புன்னகைக்கிறார் சஞ்சிதா ஷெட்டி .இத்திரைப்படம் தற்போது மூன்றாவது கட்ட படப்பிடிப்பில் இருப்பது குறிப்பிடத்தக்கது.