தென்னிந்திய நடிகர் சங்க புதிய நிர்வாகிகள் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றாக நிறைவேற்றி வருகிறார்கள். புதிய நிர்வாகம் பொறுப்பேற்றவுடன் நடிகர் சங்க நிலத்தை தனியார் நிறுவனத்திடமிருந்து மீண்டெடுத்தது. தற்போது தமிழகமெங்குமுள்ள உறுப்பினர்களை கணக்கெடுத்து அவர்களுக்கு தேவையான மருத்துவம், கல்வி மற்றும் நல உதவிகளை வழங்கிட மாவட்டம் தோறும் ஆண், பெண் உறுப்பினர்களை தனியாக பிரித்தெடுத்து ‘குருத்தட்சணைத் திட்டம்’ என்ற பேரில் விபரங்களை சேகரித்து பதிவு செய்யப்பட்டது.
அதனுடைய முதல் கட்டமாக மருத்துவ உதவிக்காக ஏ.சி.எஸ் மருத்துவ பல்கலை கழகம், எஸ்.ஆர்.எம் மருத்துவ பல்கலை கழகம் ஆகிய இரண்டு நிறுவனங்களின் நிர்வாகத்துடன் தென்னிந்திய நடிகர் சங்கம் பேச்சு வார்த்தை நடத்தியது. அதில் முதல் கட்டமாக ஏ.சி.எஸ். மருத்துவ பல்கலைக்கழகம் தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ உதவிக்ள் வழங்கிட ஒப்பு கொண்டிருக்கிறது. அதனுடைய இலவச அட்டை உறுப்பினர்களுக்கு வழங்கும் விழா வருகிற மார்ச் 14ஆம் தேதி திங்கட்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள ‘நாரத கான சபா’வில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் நடிகர் நடிகைகளும் திரைதுறையை சேர்ந்த மூத்த கலைஞர்களும் கலந்து கொள்கிறார்கள்.
‘குருதட்சணை திட்டத்தின்’ கீழ் தங்கள் விவரங்களை பதிவு செய்த அனைத்து உறுப்பினர்களுக்கும் இந்த இலவச மருத்துவ உதவி அடையாள அட்டை வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் அனைவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மருத்துவ அடையாள அட்டை பெற்று கொள்ளுமாறு நடிகர் சங்க நிர்வாகம் அழைப்பு விடுத்துள்ளார்கள்.