சிக்கல் இல்லாமல் சென்சார் சான்றிதழ் வேண்டுமா..? ; ஆன்டி இண்டியன் தயாரிப்பாளர் சொன்ன பலே ஐடியா

மூன் பிக்சர்ஸ் சார்பில் ஆதம்பாவா தயாரிப்பில் இயக்குநர் புளூ சட்டை மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆன்டி இண்டியன். இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா பிரசாத் லேபில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் இயக்குநர் புளூ சட்டை மாறன், தயாரிப்பாளர் ஆதம் பாவா, இணை தயாரிப்பாளர் மகேஷ், ஒளிப்பதிவாளர் கதிரவன், இயக்குநர் வேலு பிரபாகரன், நடிகர்கள் ஆடுகளம் நரேன், பசி சத்யா, விஜயா மாமி, சண்டைப் பயிற்சியாளர் ஹரி தினேஷ், இணை இசையமைப்பாளர் வில்லியம்ஸ் உள்ளிட்ட படக்குழுவினர் பலர் கலந்துகொண்டனர்.

இப்படத்தில் இளம் நாயகனாக நடித்துள்ள ஷான் பேசும்போது, “ஆன்டி இண்டியன் படத்தில் நடிக்கிறேன் எனக் கூறியதும் என் நண்பர்கள் அதிர்ச்சியானார்கள். ஆனால் எப்படியும் இவர் படத்தைப் பார்த்து கழுவி ஊற்றவாவது நிறைய பேர் வருவார்கள். அப்படியாவது என் முகமும் பிரபலமாகும் என்று நினைத்துதான் இதில் நடிக்க ஒப்புக்கொண்டேன்” என்றார்.

ஆடுகளம் நரேன் பேசும்போது, “மறைந்த வெங்கட் மூலமாகத்தான் இந்தப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு எனக்கு வந்தது. மாறன் படம் இயக்குகிறாரா, அதிலும் என்னை நடிக்க அழைக்கிறாரா, இது வில்லங்கமா போயிடுமோ என நினைத்தேன்.. காரணம் மாறனை ஒரு யூ டியூப் விமர்சகர் என்கிற அளவில் தான் நான் புரிந்து வைத்திருந்தேன். ஆனால் பேசும்போதுதான் அவர் எப்படிப்பட்ட விஷய ஞானம், திட்டமிடுதல் கொண்டவர் என்பது தெரிந்தது, படப்பிடிப்பில் அவரைப் பொறுத்தவரை குழந்தை வடிவில் ஒரு கொலைகாரன் என்று கூட சொல்லலாம்.

தயாரிப்பாளர் ஆதம் பாவா பேசும்போது, “குறைந்த நாட்களில் படத்தை எடுத்துள்ளோம் என சொன்னதுமே சின்ன பட்ஜெட் என நினைத்து விடாதீர்கள்.. அத்தனை நாட்களிலும் நூற்றுக்கும் மேற்பட்டவர்களை வைத்து படப்பிடிப்பை நடத்தியுள்ளோம்., படத்தின் முன் தயாரிப்புக்கும் நிறைய செலவு செய்துள்ளோம். பின்னர் சென்சார் சான்றிதழ் பெறுவதற்கான போராட்டத்திலும் நிறைய செலவு செய்துள்ளோம். விநியோகஸ்தர்களும் திரையரங்கு உரிமையாளர்களும் அதனை மனதில் வைத்துக்கொண்டு வியாபாரம் பேச வாருங்கள். இந்தப் படத்திற்கான சென்சார் சான்றிதழ் பெருகின்ற போராட்டத்தில், பல விஷயங்களை புரிந்து கொண்டோம். சென்சார் சான்றிதழுக்கு விண்ணப்பிப்பவர்கள் தங்களது படத்திற்கு யு அல்லது யு/ஏ அல்லது ஏ என எந்த சான்றிதழ் பொருந்தும் என நீங்களே தீர்மானித்து அதற்கேற்ற சான்றிதழுக்கு விண்ணப்பியுங்கள்.. எந்த சிக்கலும் இன்றி எளிதாக கிடைத்து விடும்.. நாங்கள் எங்கள் படத்திற்கு யு சான்றிதழ் கேட்டதால் தான் இத்தனை சிக்கல்கள் எழுந்தது என்பதை பின்னர் தான் தெரிந்துகொண்டோம்.

இயக்குநர் புளூ சட்டை மாறன் பேசும்போது, “இந்தக் கதையை தயார் செய்ததும் அதை பதிவெல்லாம் செய்யவில்லை. அதில் எனக்கு நம்பிக்கையும் இல்லை.
இதனால் படப்பிடிப்பு எண்ணத்தை தள்ளிவைத்துவிட்டு எனது கதையை பலரிடம் கூறி அபிப்ராயம் கேட்க ஆரம்பித்தேன். கதையையும் மெருகேற்ற ஆரம்பித்தேன்.
அப்படித்தான் இந்தப்படம் துவங்கியது. படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இயக்குநர் வேலு பிரபாகரனை அழைத்தபோது மறுக்காமல் ஒப்புக்கொண்டார். அந்த சமயத்தில் வேலு பிரபாகரன் என்னிடம் ஒரு கதை சொன்னார். அவரிடம் நைஸாகப் பேசி அந்த கதையை உடனே விலைகொடுத்து வாங்கிவிட்டேன். எல்லா படத்தையும் உடம்பை இரும்பாக்கிக்கொண்டுதான் பார்க்கவேண்டும். ஆனால் நிச்சயம் ஆன்டி இண்டியன் உங்கள் அனைவரையும் கவரும் விதமாக இருக்கும் என்றார்.