‘ஜோஷ்வா – இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல்

கெளதம் வாசுதேவ் மேனனின் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தின் இரண்டாவது பாடல் மனதை மயக்கும் மெல்லிசையால் அனைவரின் காதுகளையும் குளிர்வித்து பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான “ஹை ஜோஷ்வா…” பாடல் கருத்தாழம் மிக்க வரிகளுக்காகவும் புதுமையான தாள லயத்துக்காகவும் இசை ரசிகர்களால் பெரிதும் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று 15-07-2020 இரண்டாவது பாடலுக்கான ட்யூனை இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனே முணுமுணுத்தவாறு அறிமுகப்படுத்திய காணொளிக் காட்சி சமூக வலைதளங்களில் தெடர்ந்து வைரலாகி வருகிறது. நாயகியின் குரலாக ஒலித்த “ஹே லவ் ஜோஷ்வா…” பாடலுக்கு பதிலளிப்பதுபோல் நாயகன், “நான் உன் ஜோஷ்வா…” என்று பாடுவதுபோல் உருவாக்கப்பட்டிருக்கும் இந்தப் பாடல், வரிகளுக்காகவும் இசை வடிவத்துக்காகவும் மிகப் பெரிய அளவில் வரவேற்பு பெற்று வருகிறது.

‘ஜோஷ்வா’ படத்தில் பிரதான பாத்திரத்தில் நடித்து வரும் நடிகர் வருண் இரண்டாவது பாடல் குறித்து கூறியதாவது…
“இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனனின் படப்பாடல் வெளியாகும்போதெல்லாம், முடிவற்ற பரபரப்பு தொற்றிக் கொள்வதை நாம் தொடர்ந்து சில ஆண்டுகளாக கவனித்திருக்கிறோம். முதல் பாடலைப் போலவே இரண்டாவது பாடலும் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்று வருவது குறித்து நான் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். “தள்ளிப்போகாதே…” , “கற்க கற்க…” போன்ற வரிகளுடன் சில ஆக்ஷன் காட்சிகள் மற்றும் காண்பதற்கினிய விஷுவல்ஸுடன் இந்தப் பாடல் உருவாக்கப்பட்டிருக்கிறது என்றார்.

விக்னேஷ் சிவன் எழுதிய இந்த இரண்டாவது பாடலை கார்திக் இசையமைத்துப் பாடியிருக்கிறார். வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சார்பில் டாக்டர் ஐசரி கே.கணேஷ் தயாரிக்கும் ‘ஜோஷ்வா இமைபோல் காக்க’ படத்தில் வருண் மற்றும் ராஹேய் பிரதான வேடங்களில் நடித்திருக்கின்றனர். கார்த்திக் இசையமைக்கும் இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்ய, ஆன்டனி படத்தொகுப்பை கவனிக்கிறார். கலை இயக்குநர் பொறுப்பை குமார் ஞானப்பனும், உடையலங்காரப் பொறுப்பை உத்ரா மேனனும் ஏற்றிருக்கின்றனர். சண்டைப் பயிற்சியாளராக யொன்னிக் பிரவுன், கலரிஸ்டாக ஜி.பாலாஜி பணியாற்ற சவுண்ட் மிக்ஸிங் பொறுப்பை சுரேன் ஜி, மற்றும் டப்பிங் பொறுப்பை ஹஃபீஸும் ஏற்றிருக்கின்றனர். கூத்தன் மற்றும் சுரேன் ஜி. இருவரும் இணைந்து சவுண்ட் டிசைனிங் பொறுப்பை கவனிக்கின்றனர்.

90 சதவீத படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இன்னும் பத்து அல்லது பனிரெண்டு நாட்கள் படப்பிடிப்பில் மொத்த படமும் நிறைவடையும். காதல் காட்சிகளை அமெரிக்காவில் நடத்த படப்பிடிப்புக்குழு திட்டமிட்டிருந்த நிலையில், கோவிட் 19 பெருந்தொற்று பிரச்னை இன்னும் முடிவுக்கு வராமல் தொடர்வதால், சுமூகமான நிலை திரும்பியதும் வட இந்தியாவில் காதல் காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.