இங்கிலாந்தின் ‘அகிலன் அறக்கட்டளை’ நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் கோவை, திருப்பூர், பொள்ளாச்சி பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழ் குடும்பங்களுக்கு உதவி

இங்கிலாந்தில் இருந்து இயங்கி வரும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனம் அகிலன் அறக்கட்டளை. இந்நிறுவனம் புலம் பெயர்ந்து திருப்பூர் மாவட்டம் உடுமலை, பொள்ளாச்சி, கோவை பகுதிகளில் அமைந்துள்ள ஈழத்தமிழர் முகாம்களில் வசிப்பவர்களுக்கு உதவிட, திராவிடர் விடுதலைக் கழகத்தை அணுகினர்.

அதன் தலைவர் தோழர் கொளத்தூர் வழிகாட்டுதலினபடி, மே மாதம் 07-ம் தேதி திருப்பூர் மாவட்டம் உடுமலை பகுதியில், திருமூர்த்தி மலையில் உள்ள, ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில் உள்ள, 110 குடும்பங்களுக்கு உணவு பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மே 09ம் தேதி, பொள்ளாச்சி அருகில் உள்ள கோட்டூர் ஈழத்தமிழ் ஏதிலியர் முகாமில், பதிவு அட்டை உள்ளவர்களுக்கும், பதிவு அட்டை இல்லாதவர்களுக்குமாக மொத்தம் 300 குடும்பங்களுக்கும் தேவையான அத்தியாவசிய, உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. பதிவு அட்டை இல்லாதவர்களுக்கு மேலதிகமாக அரிசியும் வழங்கப்பட்டது.

அடுத்ததாக மே 12-ம் தேதி, ஆழியாறு ஈழத்தமிழர் ஏதிலியர் முகாமில் வாழ்ந்து வரும் 281 குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்தொகுப்புகள் வழங்கப்பட்டது.

அரசு வலியிறுத்தி வரும் அனைத்து கொரோனா தடுப்பு வழிமுறைகளையும் கடைபிடித்து, தனிமனித இடைவெளியைக் கைகொண்டு நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டது.

இந்நிகழ்ச்சிகளில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் மடத்துக்குளம் ஒன்றிய செயலாளரும், உடுமலை நகர பொறுப்பாளருமான தோழர் ஜீவானந்தம், அவருடைய துணைவியார் சாந்தி, கோட்டூர் முகாம் தலைவர் செல்வன், மடத்துக்குளம் மோகன், கோவை மாவட்ட செயலாளர் வெள்ளிங்கிரி, ஆனந்த், அரிதாசு, சாந்தி, ஜே.ஆர்.எஸ் ஆசிரியர் மங்களேஸ்வரி, கோவை மாவட்ட செயலாளர் வே.வெள்ளிங்கிரி, , கோ.சபரிகிரி, விவேக் சமரன் மற்றும் முகாம் பொறுப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.

தமது கோரிக்கையை ஏற்று, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களை வழங்கியமைக்காக அகிலன் அறக்கட்டளை நிறுவனர் திரு. கோபாலகிருஷ்ணன் குடும்பத்தாருக்கு முகாமில் வசிக்கும் மக்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.