ஹவுஸ் ஓனர் திரைப்படம் பற்றி லவ்லின் சந்திரசேகர்

தாயார் விஜி சந்திரசேகரிடமிருந்து ‘உணர்வுகளை வெளிப்படுத்தும் கவர்ச்சிகரமான கண்களை’ மரபு ரீதியில் பெற்றிருக்கும் லவ்லின் சந்திரசேகர், தற்போது “ஹவுஸ் ஓனர்” திரைப்படத்தில் தனது நுணுக்கமான நடிப்பால் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளார். நாளை (ஜூன் 28) இந்த திரைப்படம் வெளியாக இருக்கும் வேளையில், படத்தின் சிறப்பு காட்சிகளில் பார்த்தவர்களிடம் இருந்து கிடைத்த இடைவிடாத பாராட்டு மழையில் நனைந்து வருகிறார் லவ்லின்.

“நான் கனவுக்கும் யதார்த்தத்திற்கும் இடையிலான மனநிலையுடன் இருக்கிறேன். உண்மையிலேயே, நான் தற்போது விவரிக்க முடியாத மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் கொண்டிருக்கிறேன். குறிப்பாக, திரைப்படத் துறையைச் சேர்ந்த பிரபலங்களும் மற்றும் மூத்த நபர்களும் எங்கள் திரைப்படத்தை பாராட்டுவது என்னை மிகவும் மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தியுள்ளது. படப்பிடிப்பின் போதே சில விஷயங்களை என்னால் கணிக்க முடிந்தது. ஒட்டுமொத்த அணியின் கடின உழைப்புக்கு உரிய அங்கீகாரத்தை பெறும் என நினைத்தேன். ஆனால் பிரபலங்கள் மற்றும் ஊடகங்களிடம் இருந்து இதுபோன்ற ஒரு வரவேற்பை பார்ப்பது எனது கணிப்புக்கு அப்பாற்பட்டது. பாலக்காடு பேச்சு வழக்கில் தமிழ் பேசுவது போன்ற நுணுக்கமான விஷயங்களுக்காக நான் கவனிக்கப்படுவேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. எனக்கு ஒரு வழிகாட்டியாகவும், ஆதரவாகவும் இருந்த லக்‌ஷ்மி மேடத்திற்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். நான் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தவும் காரணமாக இருந்ததால் அவருக்கு மிகவும் கடமைப்பட்டிருக்கிறேன்” என்றார் லவ்லின் சந்திரசேகர்.

மேலும், அவர் கூறும்போது, “லக்‌ஷ்மி மேடம் வலுவான கதாபாத்திரங்கள் மற்றும் அழுத்தமான கதையை வடிவமைக்கவில்லை என்றால், இத்தகைய வரவேற்பு சாத்தியமில்லை. கிஷோர் சார், ஸ்ரீரஞ்சனி மற்றும் கிஷோர் ஆகியோர் படத்தின் முக்கிய தூண்களாக இருந்தனர். மேலும் தங்கள் நடிப்பு மூலம் ஒரு வகையில் எனது கதாபாத்திரத்தையும் மேம்படுத்தினர். இந்த கதாபாத்திரங்கள் பிரிக்க முடியாதவை, இது தான் லக்‌ஷ்மியின் எழுத்து திறமையின் அழகு” என்றார்.

மங்கி கிரியேட்டிவ் லேப்ஸ் சார்பில் டாக்டர் ராமகிருஷ்ணன் தயாரித்த இந்த படத்தை ஏஜிஎஸ் சினிமாஸ் தமிழகம் முழுக்க அதிக எண்ணிக்கையிலான திரையரங்குகளில் வெளியிடுகிறது. பிரபலங்கள் மற்றும் ஊடகங்களுக்கான முன்னோட்ட திரையிடல் படத்திற்கு நல்ல வரவேற்பை கொடுத்து, படத்தின் மீதான ஆர்வத்தை கணிசமாக அதிகரித்துள்ளது. ஜிப்ரானின் பின்னணி இசை மற்றும் பாடல்களும், ஒளிப்பதிவாளர் கிருஷ்ணாசேகரின் ஒளிப்பதிவும், சி.எஸ். பிரேம்குமாரின் படத்தொகுப்பும், லக்‌ஷ்மி ராமகிருஷ்ணனின் கலை அமைப்பும் படத்துக்கு கூடுதல் சிறப்பு சேர்த்துள்ளது. தபஸ் நாயக்கின் ‘ஒலிக்கலவை’ கதைக்கு நம்பமுடியாத இயல்பை சேர்த்திருக்கிறது. ரிலீஸுக்கு பிறகு பார்வையாளர்களிடமிருந்து உரிய அங்கீகாரத்தை பெறுவது உறுதி