இயக்குனர் சுசீந்திரனின் “ஏஞ்சலினா”

இயக்குனர் சுசீந்திரன் அவரின் இரண்டு ஈடு இணையற்ற குணநலன்களுக்காக பாராட்டப்படுகிறார். ஒன்று புதுமையான, சிக்கலான கதையோட்டங்களை வணிக அம்சங்களுடன் கலந்து கொடுக்கும் அவரது திறனுக்காகவும், மற்றொன்று உண்மையிலேயே ஆச்சரியப்பட வேண்டிய ஒன்று, அதாவது குறுகிய காலத்திலேயே அவரது திரைப்படங்களை முடித்து கொடுப்பது. இயக்குனர் சுசீந்திரனின் அடுத்து வரவிருக்கும் “ஏஞ்சலினா” திரைப்படம் நல்ல எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளது. ஏனெனில் அவரது முந்தைய திரைப்படங்களில் ஒன்றான “ஆதலால் காதல் செய்வீர்” இதே மாதிரி வண்ணமயமான, இளமைத்தன்மையை கொண்ட அதே நேரத்தில், ஒரு அழுத்தமான கருத்தை அதன் முடிவில் கொண்டிருந்தது.

சமீபத்தில் சுட்டுப்பிடிக்க உத்தரவு படத்தில் நடித்ததற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த மகிழ்ச்சியில் இருக்கும் இயக்குனர் சுசீந்திரன் இந்த படத்தை பற்றி கூறும்போது, “ஏஞ்சலினா அடிப்படையில் ஒரு சஸ்பென்ஸ் திரில்லர். படமே ஒரு விசாரணையில் தான் துவங்குகிறது. அதே சமயத்தில் இளைஞர்களின் கதாபாத்திரங்களை உள்ளடக்கிய கதையையும் இதில் நான் கலந்து சொல்லியிருக்கிறேன். இருப்பினும், படத்தின் மையக்கரு ஒரு பெண் எவ்வாறு வாழ வேண்டும் மற்றும் அவர் எதிர்கொள்ளும் சிக்கல்களை எவ்வாறு கையாள வேண்டும் என்ற சமூக விழிப்புணர்வை அடிப்படையாகக் கொண்டது. “சரண் சஞ்சய் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரத்தில் அறிமுகமாகிறார். கிரிஷா குரூப் (கோலி சோடா 2 புகழ்) நாயகியாக நடிக்கிறார். சூரி மற்றும் தேவதர்ஷினிஇந்த படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். நான் டி.இமான் உடன் நான் இணைவது இது ஆறாவது முறையாகும். அவருடைய இசைக்கு கிடைத்துள்ள வரவேற்பு மகிழ்ச்சி அளிக்கிறது. முன்னதாக என்னுடன் “ஆதலால் காதல் செய்வீர்” போன்ற திரைப்படங்களில் பணியாற்றிய ஏ.ஆர்.சூர்யா ஒளிப்பதிவை கையாளுகிறார்” என்றார்.

இந்த படம் விசாரணை மூலம் நகரும் ஒரு சஸ்பென்ஸ், திரில்லர் என்பதால் படத்தின் நீளம் என்ன என்பதை அறிய அனைவருக்கும் ஆவல் இருக்கும். ஆம், இது 1 மணி நேரம் 50 நிமிடங்கள் ஓடும் படம். மிகவும் வேகமாக, ரசிகர்களுக்கு பிடிக்கும் வகையில் இருக்கும்.

ஆறாம் திணை ஃபிலிம்ஸ் சார்பில் கேவி சாந்தி தயாரித்திருக்கும் இந்த ஏஞ்சலினா படத்தை, பிக்சர் பாக்ஸ் கம்பெனி அலெக்ஸாண்டர் வெளியிடுகிறார். ஜி.சி.ஆனந்தன் (கலை), தியாகு (படத்தொகுப்பு), விவேகா & கபிலன் (பாடல்கள்), அன்பறிவ் (சண்டைப்பயிற்சி), ஷோபி (நடனம்), ஆர்.நிருபமா ரகுபதி (உடைகள்) மற்றும் தரணி (ஒலி வடிவமைப்பு) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணியாற்றி இருக்கிறார்கள்.