‘சிந்துபாத்’ ஜூன் 21 வெளியீடு

‘பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி’ ஆகிய வெற்றிப் படங்களை தொடர்ந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், இயக்குனர் எஸ்.யூ.அருண் குமாரும், இணைந்து பணியாற்றும் மூன்றாவது அதிரடி திரைப்படம் ‘சிந்துபாத்’

முதன் முறையாக இப்படத்தில் விஜய் சேதுபதியின் மகன் சூர்யா தனது தந்தையுடன் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்க, அது ரசிகர்களிடையே ஒரு பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தந்தையும் மகனுமாக நடிக்கவில்லை என்றாலும், இருவரின் கதாபாத்திரமும் அவர்களிடையே நிலவும் ஒரு உன்னதமான தனித்துவ உறவுநிலையை பிரதிபலிக்கிறது.

விஜய் சேதுபதி இப்படத்தில் சற்றே காதுகேளாத சிறுசிறு திருட்டுகளில் ஈடுபடுபவராக, ஒரு முற்றிலும் வித்தியாசமான வேடத்தில் நடித்திருக்கிறார்.

ஒரு பெண்ணை மையப்படுத்தியே இப்படத்தின் கதை சுழலுதால், அஞ்சலியின் கதாபாத்திரம் முக்கியத்துவம் பெறுகிறது.
லிங்கா இப்படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார். கதாபாத்திரத்தின் தேவையறிந்து தனது எடையை 20 கிலோ அதிகரித்ததோடு மட்டுமல்லாமல், ‘தாய்’ மொழியையும் கற்றுக்கொண்டு, வசனம் பேசி அசத்தியிருக்கிறார்.

இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் தாய்லாந்து, மலேசியா, கம்போடியா, மற்றும் தென்காசியில் படமாக்கப்பட்டு, 52 நாட்களில் படப்பிடிப்பு நிறைவு செய்யப்பட்டிருக்கிறது. ‘தாய்’ மொழியில் டப்பிங் இருந்ததால், தாய்லாந்திலேயே அந்த பணிகள் நிறைவு செய்யப்பட்டுள்ளது.

முழுக்க முழுக்க சண்டை காட்சிகள் நிறைந்த படமென்பதால், ஹாலிவுட் சண்டைகாட்சியமைப்பு வல்லுனர் ‘பிரதித் சீலம்’ என்ற ‘நுங்’ இப்படத்தில் பணியாற்ற ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார்.

இப்படத்தின் க்ளைமாக்ஸ் காட்சிகள் சுமார் ஒன்பதரை நிமிடங்கள் ‘சிங்கிள் ஷாட் சீக்வன்ஸ்’ மூலம் படமாக்கப்பட்டுள்ளது. அந்த காட்சி அமைப்புக்கென பிரத்யேகமாக 100 க்கும் மேற்பட்ட தாய்லாந்து இளநிலை கலைஞர்களும், இந்திய கலைஞர்களும் ஒன்றிணைந்து, பல ஒத்திகைகளுக்கு பின்னர் காட்சிப் படுத்தியிருப்பது ரசிகர்களுக்கு மாபெரும் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் டீசர் வெளியானது முதல், எடிட்டிர் ரூபனின் புதிய அணுகுமுறை மக்களிடையே ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள நிலையில், யுவன் ஷங்கர் ராஜாவின் மனதிற்கினிய பாடல்கள் மக்களிடையே பெரும் வரவேற்ப்பை பெற்றிருக்கிறது. ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக் கண்ணன் வித்தியாசமான கோணங்களில் சண்டை காட்சிகளை காட்சிப்படுத்தியிருப்பது படத்தின் விறுவிறுப்பை அதிகரிக்கும் விதமாக அமைந்திருக்கிறது.

எதிர்வரும் ஜூன் 21ம் தேதி, ‘கே ப்ரொடக்ஷன்ஸ்’ மற்றும் ‘வான்சன் மூவீஸ்’ தயாரிப்பில், இயக்குனர் எஸ். யூ. அருண்குமார் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிக்கும் ஆக்ஷன் திரில்லர் ‘சிந்துபாத்’ உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.

Related posts