பெண் கதாப்பாத்திரமேயில்லாமல் உருவாகியிருக்கும் ‘C ++’

ப்ளூ எலிபாண்ட் சினிமாஸ் என்ற பட நிறுவனம் சார்பில் சுரேஷ் லியான் ரே (Suresh Leon Rey) என்பவர் தயாரித்து, இயக்கி நடித்திருக்கும் திரைப்படம் ‘C ++ ’.

பெண் கதாப்பாத்திரங்கள் எதுவும் இல்லாமல், கம்ப்யூட்டர் குற்றங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட க்ரைம் திரில்லர் திரைப்படம் இது. தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் தயாராகியிருக்கும் இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு இன்று சென்னையில் நடைபெற்றது.

இதில் தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் லியான் ரே, ஒளிப்பதிவாளர் சந்தீப்(Sandeep Hanchin), படத் தொகுப்பாளர் நாகேந்திர அர்ஸ்(Nagendra Urs), இணை தயாரிப்பாளரும், நடிகருமான ஆதர்ஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதில் படத்தைப் பற்றி தயாரிப்பாளரும், இயக்குநருமான சுரேஷ் லியான் ரே பேசுகையில்,‘ என்னுடைய சொந்த ஊர் மைசூரூ. சாப்ட்வேர் இன்ஜினியராக வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு சினிமா மீது ஆர்வம் என்பதை விட ஈடுபாடு அதிகம். அதிலும் டார்க் க்ரைம் திரில்லர் ஜேனர் படங்களை விரும்பி பார்ப்பேன். அந்த வகையில் படங்களை இயக்கியிருக்கும் இயக்குநர் மிஷ்கின் தான் என்னுடைய மானசீக குரு. அவருடைய படங்களை பார்த்திருக்கிறேன். நான் யாரிடமும் உதவியாளராக பணியாற்றியதில்லை. இணையத்தளத்தில் பார்த்துவிட்டு தான் இந்த படத்தை இயக்கியிருக்கிறேன்.

C ++ என்பது சஸ்பென்ஸ் பிளஸ் க்ரைம் திரில்லர். C ++ என்பது கணினியில் பயன்படுத்தும் ஒரு கணினி மொழி. அதற்கும் இந்த படத்தின் கதைக்கும் எந்த தொடர்பும் இல்லை. படத்தின் தலைப்பிற்காக மட்டுமே பயன்படுத்தியிருக்கிறேன். மக்களுக்கு தெரியாத பல குற்றங்கள் இருக்கிறது. கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி இது போன்றதொரு குற்றம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்த குற்றம் என்ன என்பதையும், அதிலிருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது என்பதையும் ஆவணப்படமாக விளக்காமல், ஒரு க்ரைம் திரில்லராக உருவாக்கி கொடுத்திருக்கிறேன்.

ஒரு அப்பாவியான கம்ப்யூட்டர் இன்ஜினியர், அது சார்ந்த ஒரு குற்றத்திற்குள் மாட்டிக் கொள்கிறார். அவரின் தவிப்பு எப்படியிருக்கும்? அதிலிருந்து எப்படி வெளியேறுவான்? அந்த பயங்கரமான குற்றம் என்ன? இதை தான் இந்த C ++ படத்தின் திரைக்கதை.

இந்த படத்தில் பாடல்கள் கிடையாது. சண்டைக்காட்சிகள் கிடையாது. காமெடி கிடையாது. சீரியஸான படம். ஆனால் அடுத்து என்ன? என்ன? என்ற எதிர்பார்ப்பை அதிகப்படுத்திக் கொண்டேச் செல்லும் பரபரப்பான திரைக்கதை இருக்கிறது.

இந்த படத்தின் ஹைலைட் என்னவெனில், இந்த படத்தில் பெண் கதாப்பாத்திரங்கள் எதுவும் இல்லை. திரைக்கதையில் அதற்கான அவசியம் இல்லை. அதனால் இடம்பெறவில்லை.

இந்த படத்தை ஒரே சமயத்தில் தமிழ் மற்றும் கன்னட மொழிகளில் படமாக்கியிருக்கிறோம். அத்துடன் தெலுங்கு, மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட திட்டமிட்டிருக்கிறோம்.

இந்த படத்திற்கு பின்னணி இசை மிகவும் முக்கியம் என்பதால் சுவீடன் நாட்டைச் சேர்ந்த JOHN BOBERG என்பவர் இசையமைத்திருக்கிறார். அவரின் பின்னணியிசை ரசிகர்களுக்கு பிடிக்கும். இந்த படத்திற்கான ஒலி வடிவமைப்பை ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த MIGUEL ANGEL CABALLERO என்பவர் அதிக சிரத்தை எடுத்து செய்திருக்கிறார்.

நாகேந்திர அரஸ் என்பவர் படத்தை தொகுத்திருக்கிறார். இவர் பிரபல படத்தொகுப்பாளரான சுரேஷ் அர்ஸ் அவர்களின் உறவினர் என்பதும், கன்னடத்தில் ஏழு படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்திற்கு சந்தீப்… ஒளிப்பதிவு செய்திருக்கிறார். இவரும் கன்னட படங்களில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியிருக்கிறார். டார்க் க்ரைம் திரில்லர் ஜேனர் என்பதால் அதற்கேற்ற வகையிலான லைட்டிங் பேர்ட்டனுடன் ரசிக்கும் வகையில் காட்சிகளை படமாக்கியிருக்கிறார்.

இந்த படத்தில் இரண்டாவது வில்லனாக நடித்திருப்பதுடன், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார் ஆதர்ஷ். படத்தில் பதினைந்து நிமிடங்கள் கிராபிக்ஸ் காட்சிகள் இடம்பெற்றிருக்கிறது. பெங்களூரூ மற்றும் புறநகரில் இந்த படத்தை இருபது நாட்களில் படமாக்கினோம். இந்த படத்தை டிசம்பர் மாதத்தில் வெளியிட திட்டமிட்டு வருகிறோம்.’ என்றார்.