சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்பறிவ் நீக்கம் சட்டத்திற்கு புறம்பானது

இன்றைய சினிமா துறையில், கபாலி. 24, காஷ்மோரா, மெட்ராஸ், சண்டக்கோழி-2 என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, விஷால், கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல முன்னணி கதாநாயகர்களின் திரைப்படங்களுக்கு மட்டுமன்றி மேலும் பல திரைப்படங்களுக்கு சண்டை பயிற்சியாளர்களாக (ஸ்டண்ட் மாஸ்டர்களாக) சிறப்பாக பணியாற்றிக் கொண்டு இருப்பவர்கள் அன்புமணி-அறிவுமணி என்னும் இரட்டை பிறவியர்களான, சினிமா துறையினரால் அன்பறிவ் என அழைக்கப்படும் சுறுசுறுப்பான ஸ்டண்ட் மாஸ்டர்கள்.

பொதுவாக தங்களிடம் பணியாற்றும் சண்டை பயிற்சியாளர்களுக்கு தனி கவனம் செலுத்தி அவர்களுக்கு சிறந்த பயிற்சி கொடுப்பது இவர்களின் தனிச்சிறப்பு. அந்தவகையில் தற்போது அவர்களுக்கு மதுரவாயலில் தனியாக பயிற்சி இடம் அமைத்து சண்டை பயிற்சிக்கான அனைத்து வசதிகளும் செய்துகொடுத்து சிறப்பாக பயிற்சி அளித்து வருகிறார்கள்.

ஆனால் இப்படி பயிற்சி அளிப்பதை காரணம் காட்டி தென்னிந்திய சினிமா மற்றும் சின்னத்திரை சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் மற்றும் கலைஞர்கள் சங்கத்திலிருந்து இவர்கள் இருவரும் சட்டத்திற்கு புறம்பான வகையில் நீக்கம் செய்யப்பட்டனர். மேலும் சங்கத்தலைவர் சோமசுந்தரம் மற்றும் செயலாளர் வி.மணிகண்டன் ஆகியோர் சண்டைப்பயிற்சி இயக்குனர்கள் அன்புமணிக்கும் அறிவுமணிக்கும் அவர்களது படங்களில் தொடர்ந்து பணியாற்ற முடியாதபடி, சங்கத்தில் உள்ள சண்டைக்கலைஞர்களின் ஒத்துழைப்பு கிடைக்காதவாறு தடுத்து நிறுத்தும் செயலிலும் ஈடுபட்டனர்.

எங்கள் பணியாளர்களுக்கு எங்கள் சொந்த செலவில் நாங்கள் பயிற்சி கொடுப்பதில் என்ன தவறு இருக்கிறது? இதற்காக எங்கள் இருவரையும் சங்கத்திலிருந்து விலக்குவது சரியில்லை. எனவே இதனை மீண்டும் மறுபரிசீலனை செய்து எங்களை சங்கத்தில் இணைத்து கொள்ளுங்கள் என்று பலமுறை சண்டை பயிற்சியாளர்கள் சங்கத்தின் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் வி.மணிகண்டன், ஆகியோரை சந்தித்து பல முறை விளக்கம் அளித்த போதும், அதற்கு அவர்கள் சரியான விளக்கம் அளிக்கத் தவறியதால், அதற்கான விளக்கம் கேட்டு அன்புமணி-அறிவுமணி மாஸ்டர்கள் கடந்த 16.09.2018 அன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்று (27.09.18) விசாரணைக்கு வந்தது இவ்வழக்கை அன்பறிவ் மாஸ்டர்களின் வழக்கறிஞர் கார்த்திகை பாலனுக்காக அவரது சீனியர் வழக்கறிஞர் திரு. ARL. சந்திரசேகர் ஏற்று நடத்தினார். வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி மாண்புமிகு திரு. P.D.ஆதிகேசவலு, ஸ்டண்ட் மாஸ்டர்கள் அன்புமணி-அறிவுமணி ஆகியோர் தென்னிந்திய திரைப்பட சண்டை இயக்குநர்கள் சங்கத்திலிருந்து சங்கத்தலைவர் திரு.சோமசுந்தரம் மற்றும் திரு. V.மணிகண்டன் ஆகியோரால், நீக்கப்பட்ட செயல் சட்டத்திற்கு புறம்பானது என்று தீர்ப்பளித்ததோடு, அவர்கள் நீக்கப்பட்ட செயலுக்கு தடை உத்தரவும் பிறப்பித்து தீர்ப்பளித்துள்ளார்.