நடிகர் ஆரி அவர்களின் நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம் போஸ்டர் வெளியீடு!

உலகிற்கே தாய்மொழி நம் தமிழ்மொழி. ஆனால் இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது – நடிகர் ஆரி

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல.. அது நம் அடையாளம் – நடிகர் ஆரி

ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன – நடிகர் ஆரி

எம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் – நடிகர் ஆரி

தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை – நடிகர் ஆரி

மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் அறங்காவலர் நடிகர் ஆரி “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” என்கிற தலைப்பினை சத்யபாமா பல்கலைக்கழகம் பெருமையுடன் வழங்க, நம் தாய்மொழியில் கையெழுத்திடுவது அவமானம் அல்ல அடையாளம் என உறுதிமொழி ஏற்று தனது அலுவலகம் சார்ந்த கையெழுத்து அனைத்தையும் தாய்மொழியான தமிழில் மாற்றி விட்டதாகவும், இதைத் தொடர்ந்து தமிழக மக்கள் அனைவரும் இனி தங்களது தாய்மொழி தமிழில் அலுவல் சார்ந்த கையொப்பத்தை மாற்ற வேண்டும் என்கிற விழிப்புணர்வு நிகழ்வினை துவங்க உள்ளேன் என தெரிவித்தார்.

ஆரி உரை

இந்த வருடம் 2018 ஜீன் மாதம் 30ம் நாள் வட அமெரிக்காவில் உள்ள டேலஸ் மாகாணத்தில் வட அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவையின், மெட்ரோபிலக்ஸ் தமிழ்ச்சஙகம் இணைந்து 31வது தமிழர் திருவிழாவில் உலகிற்கே தலைமொழியான தமிழில் கையெழுத்திடுவது எனும் முழக்கத்தை துவங்கி 1119 பேர் ஒன்றிணைந்து தமிழில் கையெழுத்திட்டு புதிய கின்னஸ் உலக சாதனை நிகழ்த்தப்பட்டது, இதை வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையுடன் இணைந்து மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை முன்னெடுத்ததில் பெருமை கொள்கிறது.

இந்த விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தி, ஆரியின் வேண்டுகோளுக்கு இணங்கி தம் கையெழுத்தையும் உலக சாதனைக்காக தமிழில் பதிவு செய்தார் என்பது குறிபிடத்தக்கது.

அதன் பிறகு தமிழகம் வந்தவுடன் ஆரி முதல் கடமையாக வங்கியில் தனது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழில் மாற்றி தாய்மொழியில் கையெழுத்திடுவோம் என்று தமிழகம் முழுக்க பரப்புரை செய்யும் முயற்சியாக மாணவர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த துவங்கினார்.

இதற்காக மாவட்டந்தோறும் ஒரு பொருப்பாளர் நியமித்து அவர்களுக்கு உதவியாக இரண்டு நபர்களும் பணியாற்ற உள்ளனர் அவர்கள் 8ம் வகுப்பு முதல் படிக்கும் மாணவர்களுக்கு தாய்மொழியில் கையொப்பமிடும் வழிமுறைகளையும் மற்றும் பிறமொழியை தாய்மொழியாக கொண்டவராக இருந்தாலும் அவர்களுக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்துவார்கள் என்றார்.

அடுத்த நகர்வாக வள்ளுவர் கோட்டத்தில் துவங்கி தமிழகம் முழுவதும் பிரசார பேரணி மூலம் செம்மொழியான தமிழின் பெருமையை உரக்க சொல்லி, 2019 ஜனவரி 15ம் நாள் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு குமரிமுனையில் உள்ள திருவள்ளுவர் சிலையின் முன்பு நிறைவடையும் என தெரிவித்தார்.

வருகிற அக்டோபர் 2ஆம் தேதி மக்கள் பாதை அமைப்பு நடத்தும் உலக சாதனை முயற்சி நிகழ்விற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக தெரிவித்தார் நடிகர் ஆரி.

மேலும் நடிகர் ஆரி தனது பேட்டியில், என்றென்றும் தமிழ் வாழ வேண்டும் என்று எண்ணும் சில ஆர்வலர்களின் கையொப்பத்தில் கூட தமிழ் வாழ்வதில்லை. என்றும் தமிழ் மொழியை முன்னிறுத்தி பேசும் அரசியல்வாதிகளும் மற்றும் நடிகர்களும் இனி தங்களது அலுவலக கையெழுத்தை தமிழில் மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

உலகிற்கே தாய் மொழி நம் தமிழ் மொழி. இன்று அழியக்கூடிய மொழியிலும் தமிழே முதலாவதாக உள்ளது.

இதற்கு காரணம் நம் ஆங்கில கல்வி மோகம்தான்.

நம் பிள்ளைகளை டாட்டா பிர்லாவாக்க ஆங்கில பள்ளியில் சேர்த்து டாட்டா காண்பித்தோம். ஆனால் அவர்கள் நம் தாய்மொழி தமிழுக்கே டாட்டா காண்பித்து விட்டார்கள்.

ஆங்கிலம் எனும் வெறும் 26 எழுத்துக்கள் செம்மொழியான தமிழ் எனும் 247 எழுத்துக்களை தோற்கடித்துவிட்டன.

தாய் மொழியில் கையொப்பமிடுவது அவமானமல்ல, அது நம் அடையாளம் என்றவர் நாம் இந்த உலகில் எந்த மூலையில் சென்றாலும் நம்முடன் எப்போதும் வருவது நம் தாய் மொழியே என்றார்.

இதனை ஏற்றுக்கொண்ட பாடலாசிரியர் “ழ” புகழ் திரு. நீலகண்டன், மாணவர்கள், நடிகர்கள் சௌந்தரராஜன், பிளாக் பாண்டி, விஷ்ணுப்பிரியன், எழுத்தாளர் ஜெயபாலன், ஆகியோர் தங்களது கையெழுத்தை தமிழில் மாற்றுவதாக அறிவித்து கையொப்பமிட்டனர்.

வழக்கறிஞர் ராஜேஷ், ஆடிட்டர் பாலமுருகன், கனரா வங்கியின் மேலாளர் அசோகன், ஆரியுடன் இணைந்து கையொப்பத்தை மாற்றுவதால் ஏற்படும் அலுவல் சார்ந்த சந்தேகங்களுக்கு பத்திரிகையாளர்களுக்கு கேள்விகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது சிறப்பு.

இனி தமது அலுவல் சார்ந்த கையொப்பத்தை தமிழிலிட்டு signintamil@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்புகின்ற அனைவருக்கும் “மாறுவோம் மாற்றுவோம்” மற்றும் சத்யபாமா பல்கலைக்கழகத்துடன் இணைந்து வட அமெரிக்க தமிழ் சங்கங்கள், ஃபெட்னா, ஹுஸ்டன் தமிழ் இருக்கை, ட்ரெடிஷ்னல் இந்தியா US சான்றிதழ் வழங்கி பெருமைப்படுத்த உள்ளது.

நிகழ்ச்சியில் “நம் தாய்மொழியில் கையெழுத்திடுவோம்” போஸ்டரை ஆரம்பத்திலிருந்தே தமிழில் கையெழுத்து போட்டு நம் மொழியை பெருமைப்படுத்திய திருமதி. மீனாட்சி அவர்களின் கரங்களால் வெளியிடப்பட்டது.

எம்மொழி பேசுபவராயினும் உன் தாய்மொழியில் கையெழுத்திடுவது உன் அடையாளம் என்று கூறி உரை முடித்தார் நடிகர் ஆரி அவர்கள்.

இந்நிகழ்வில் பத்திரிக்கையாளர், ஊடக நண்பர்கள், திரைப் பிரபலங்கள், மாணவர்கள் இனி தாய்மொழி தமிழில் கையெழுத்திடுவோம் என உறுதி மொழி ஏற்றனர்.