‘சுயசக்தி 2018’ விருதுகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் 2018ஆம் ஆண்டுக்கான விருதுகளை அறிமுகம் செய்தார்!

• கர்நாடக இசை பாடகர் சுதா ரகுநாதன் சுயசக்தி 2018 விருதுகள் அறிமுக விழாவில் பங்கேற்று சிறப்பித்தார்.
• வீட்டிலிருந்தே தொழில் செய்யும் / பகுதி நேர பணி புரியும் பெண்கள் 2018ஆம் ஆண்டுக்கான சுயசக்தி விருதுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.
• www.homepreneurawards.com / www.suyasakthi.com என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 6, 2018க்குள் விண்ணப்பிக்கலாம்.
• விருது வழங்கும் விழா, சென்னையில் ஆகஸ்ட் 5, 2018 அன்று இசை, மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்களுடன் நடைபெறும்.
• பல்வேறு தொழில் பிரிவுகளின் கீழ் 10 மகளிர் தொழில் முனைவோருக்கு விருதுகள்.
• தகுதியுள்ள தொழில்முனைவோருக்கு அவர்களின் தொழில் வளர்ச்சிக்கான ஆலோசனைகளும் நிதி உதவியும் வழங்கப்படும்.

சுயசக்தி விருதுகள் 2018 வழங்கும் விழா, 2வது ஆண்டாக சென்னையில் சிறப்பாக நடைப்பெறவுள்ளது. கடந்த ஆண்டில் முதன்முதலாக இவ்விருதுகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவ்விழா மிகப்பெரும் வெற்றியினை அடைந்ததன் தொடர்ச்சியாக தற்போது 2018ஆம் ஆண்டுக்கான விருதுகள் வழங்கப்படுகின்றன. 2018ஆம் ஆண்டின் “சுயசக்தி விருதுகளை” தமிழ்நாடு அரசின் தமிழ்வளர்ச்சி, பண்பாட்டுத் துறை அமைச்சர் திரு.க.பாண்டியராஜன் அறிமுகம் செய்தார்.
தெரிவு முறை:
தகுதியுள்ள பெண் தொழில் முனைவோர் www.homepreneurawards.com / www.suyasakthi.com என்ற இணையதளத்தின் மூலம் ஜூலை 6, 2018க்குள் விண்ணப்பிக்கலாம்.

விருது வழங்கும் அமைப்பாளர்கள் மற்றும் தகுதி சான்ற தெரிவு குழு உறுப்பினர்கள் இரண்டு கட்டங்களாக விண்ணப்பங்களை ஆய்வு செய்து தகுதி பெறுவோரை தெரிவு செய்வர். பல்வேறு மதிப்பீட்டு கூறுகளின் அடிப்படையில் சுயசக்தி விருதுகளை பெறுவோர் தெரிவு செய்யப்படுவர்.

பெண்களுக்கான அங்கீகாரம் அளிக்கும் தனித்துவமிக்க தளம்:
இந்தியாவிலேயே முதன்முறையாக வீட்டிலிருந்து தொழில் செய்யும் பெண்களின் திறமைகளைக் கண்டறிந்து அவற்றை ஊக்குவித்து பாராட்டும் நோக்கத்துடன், வணிக நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதார் (Brand Avatar – branding and event management company) “சுயசக்தி விருதுகளை” உருவாக்கி உள்ளது. முதன்மையாக 10 தொழில் தலைப்புகளில் அதாவது, வேளாண்மை, நலவாழ்வு, வீட்டு தேவை பொருட்களுக்கான சில்லறை விற்பனை, கலைப் பண்பாடு, விளையாட்டு மற்றும் உடற்கட்டு, உணவு மற்றும் பானங்கள், அழகும் உடல் ஓம்புதலும், கல்வி – இலக்கியம், ஊடகம் – பொழுதுபோக்கு, சமூக செயல்பாடு / மகளிர் தொண்டு நிறுவனம் / சுய உதவி குழுக்கள் / மாற்று திறனாளிகள் ஆகிய பிரிவுகளில் தகுதி பெறுவோர் தெரிவு செய்யப்படுவர். விருதுக்கு தகுதி பெறுவோரின் புதுமைக் கருத்துகள் மற்றும் அவர்களின் வணிகத்தின் மூலம் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் ஏற்பட்ட பயன்கள் போன்ற பல்வேறு கூறுகளை அடிப்படையாக வைத்து, நடுவர் குழு, விஞ்சி நிற்கும் தகுதியுடையோரை இவ்விருதுகளுக்கு தெரிவு செய்யும்.

தொழில் முனைவுக்கான அறிவுரை, வழிக்காட்டல் மற்றும் முன்னேற்றத்திற்கான ஆதரவு:
தகுதி உள்ளவரை தெரிவு செய்து விருதுகள் வழங்குவது மட்டுமின்றி, ஒரு சில விண்ணப்பதாரர்களுக்கு தொழில் முனைவு வழிகாட்டல் மற்றும் முன்னேற்ற பாதையில் அழைத்துச் செல்வதற்கான நிதி உதவி ஆகியவை டை-சென்னை (Tie-Chennai) போன்ற ஏஞ்சல் இன்வெஸ்டார்ஸ் (Angel Investors) மற்றும் பிற தொழில் நிபுணர்களிடமிருந்து பெற வாய்ப்புகள் அளிக்கப்படும். பிராண்ட் அவதார் நிறுவனம் விருது பெற்றவர்களுக்கு உரிய தொழில் மேம்பாட்டுக்கான முதலீடுகளை பெறுவதற்கான தொடர்புகளை ஏற்படுத்திக் கொடுக்கும். எனினும், முதலீடு அளிக்கும் நிறுவனங்களின் விருப்பத்தின் படியே அவர்களுக்கான நிதியுதவி / வழிகாட்டல் நெறிமுறை வழங்கப்படும். அதற்குரிய பல்வேறு மதிப்பீட்டு குறிகளின் அடிப்படையில் உரிய விண்ணப்பத்தாரர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

பெருமைமிகு நடுவர் குழு:
பல்வேறு தொழில் துறைகளில் புகழ்பெற்ற மகளிர் வல்லுநர்கள் ஒவ்வொரு துறைக்கான விருதுக்கு தகுதி பெறுவோரை தெரிவு செய்வர்.
• வீனா குமாரவேல் – நேச்சுரல்ஸ் அழகு நிலையத்தின் நிறுவனர்
• ரோகிணி மணியன் – முதன்மை நிர்வாக அலுவலர், குளோபல் அட்ஜஸ்ட்மென்ட்ஸ் சர்வீசஸ்
• அருணா சுப்ரமணியம் – பூமிகா அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் மேலாண்மை ஆலோசகர்
• டாக்டர் சௌந்தர்யா ராஜேஷ் – நிறுவனர்-தலைவர், அவதார் கேரியர் கிரியேட்டர்ஸ் மற்றும் ஃபளக்ஸி கேரியர்ஸ் இந்தியா
• ரிங்க்கு மேச்சேரி – சமூக தொழில் முனைவோர் மற்றும் சென்னை வாலண்டீயர்ஸ் அமைப்பின் நிறுவனர்
• லதா ராஜன் – நிறுவனர், மாஃபாய் ஸ்ட்ராட்டஜிக் கன்சல்டன்ட்ஸ்
• கீதா நாகு – மேலாண் இயக்குநர், வீ.என்.சி.டி வென்ச்சர்ஸ்
• நினா ரெட்டி – மேலாண் இயக்குநர், சவேரா ஓட்டல்
• புஷ்கர் காயத்ரி – தமிழ் திரைப்பட இயக்குநர்
• பூர்ணிமா ராமசாமி – ஆடை வடிவமைப்பு வல்லுநர் மற்றும் தொழில் முனைவர்
• சுசிலா ரவீந்தரநாத் – மூத்த பத்திரிக்கையாளர்

வணிக நிறுவனங்களுக்கான நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனமான பிராண்ட் அவதாரின் நிறுவனர் – முதன்மை செயல் அலுவலர் திரு.ஹேமச்சந்திரன் இது பற்றிக் கூறுகையில், “பெண்கள் சொந்தமாக தொழில் தொடங்கும்போது பல்வேறு காரணங்களை முன்னிட்டு நிறைய சவால்களுக்கும் போராட்டங்களுக்கும் உள்ளாகின்றனர். அவற்றை எதிர்கொண்டு தங்களின் மன உறுதியால் வெற்றி பெறும் இத்தகைய பெண்கள் ஒருபோதும் அங்கீகரிக்கபடுவதில்லை. அந்த நிலையை மாற்றும் நோக்கத்துடன் சுயசக்தி விருதுகள் அவர்களுக்கு வழங்கப்படுகின்றன. அவர்களுடைய கண்ணோட்டத்தை வளர்த்தெடுக்கவும் அவர்கள் தொழில் முயற்சிகளில் ஈடுபடுவதற்கான ஊக்கத்தினை மேலும் அவர்களுக்கு அளிப்பதற்கும் இந்த விருதுகள் பெரிதும் துணை நிற்கும். கடந்தாண்டு முதன்முதலாக இவ்விருதுகள் அறிமுகப்படுத்தப்பட்டு மிகப்பெரிய வெற்றியை கண்டது. மொத்தம் வர பெற்ற 4328 விண்ணப்பங்களில் 50 பேர் தெரிவு செய்யப்பட்டு சுயசக்தி விருதுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன. வீட்டிலிருந்தே தொழில் செய்யும் பெண்களுக்கு இது பெரும் தூண்டலாக அமைந்தது. இதை முன்மாதிரியாக கொண்டு புதிய தொழில் முயற்சிகளில் மகளிர் ஈடுபடுவதற்கு விருது பெற்றவர்களின் வெற்றிக் கதைகள் அடி உரமாய் அமைந்தன. அந்த வகையில் இந்த இரண்டாம் ஆண்டு விழா சென்ற ஆண்டை விட மேலும் ஒளி விடுவதாக அமையும். அதை நோக்கி நாங்கள் எங்கள் பணியைத் தொடர்ந்து செய்து வருகிறோம்” என்றுத் தெரிவித்தார்.

நேச்சுரல்ஸ் இணை நிறுவனராக திரு. சி.கே.குமாரவேல் தமது கருத்துகளை கூறுகையில், “ஒருவரின் சாதனைகளை அங்கீகரிப்பதன் அடையாளமாக விருதுகள் வழங்கப்படுகின்றன. அவர்கள் சார்ந்த துறையில் முன்னேறுவதற்கு மேலும் ஊக்கமளிப்பதாக இது அமையும். பெண்களின் தனித்திறன்களை ஊக்குவித்து அவர்களை நிதி சுதந்திரம் பெற்றவர்களாக ஆக்கி அவர்களுக்கு மேலும் வலுவூட்டும் நோக்கத்துடன் சுயசக்தி விருதுகள் உருவாக்கப்பட்டன. பெண்களுக்கு தேவைப்படும் ஊக்கத்தினை அளிப்பதற்கும் அவர்கள் தங்கள் கனவுகளை கைவிடாமல் இருப்பதற்கும் தக்கதோர் தளமாக இது அமைந்துள்ளது என்பதை நாங்கள் உறுதியாக நம்புகிறோம். 2ஆம் ஆண்டாக வழங்கப்படும் சுயசக்தி விருதுகள் அதன் தரத்திலும் செயலூக்கத்திலும் கூடுதல் சிறப்புமிக்கதாக அமையும்” என்று கூறினார்.

சுயசக்தி விருதுகள் 2017 – சிறப்புக் குறிப்புகள் மற்றும் ஆய்வு முடிவுகள்:
2017ஆம் ஆண்டுக்கான சுயசக்தி விருதுகளுக்காக மாநிலம் முழுவதிலிருந்தும் 4328 விண்ணப்பங்கள் பெறப்பட்டன. மகளிர் தொழில்முனைவோரிடையே புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட இவ்விருதுகள் பெரும் வரவேற்பு பெற்றன. இவ்விண்ணப்பங்களை ஆய்வு செய்து முதல் சுற்றில் 162 விண்ணப்பத்தாரர்கள் நடுவர் குழுவின் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு இறுதிச்சுற்றில் 14 வகைப்பாடுகளில், 50 பெண் தொழில் முனைவோர் சுயசக்தி விருதுகளுக்காக தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில், தொழில் தன்மை, சந்தித்த சவால்கள், வெற்றி மனபாங்கு, தலைமை பண்பு ஆகியவற்றின் அடிப்படையில் விருதாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். அவர்களில் 9 பேருக்கு சத்யபாமா பல்கலைக்கழகத்தின் நிதியுதவி வழங்கப்பட்டது. மேலும் இருவருக்கு தொழில் முன்னேற்ற ஆலோசனைகள் அளிக்கப்பட்டன.

விருதுகளுக்கு விண்ணப்பித்தோரின் கருத்துகளை அறிவதற்கான கள ஆய்வு நடத்தப்பட்டது. அதில் சுயசக்தி விருது நிகழ்ச்சியானது சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும். தனித்துவமிக்க ஒரு நிகழ்ச்சியென அவர்கள் தங்கள் கருத்தாய்வில் தெரிவித்தனர்.

இக்கள ஆய்வின் கருத்துகளில் பங்கேற்ற 75% பேர் வீட்டிலிருந்து தொழில் செய்வோர்க்கு ஒத்திசைவான சூழலும் அதற்கேற்ற அறிந்தேர்ப்பும் இல்லை எனத் தெரிவித்திருந்தனர். 82% பங்கேற்பாளர்கள் அவர்களுடைய வணிகத்தை வளர்த்தெடுப்பதற்கு நிதியுதவி, வழிக்காட்டல், முதலீடு ஆகியவை பெரிதும் உதவும் என்று கருத்து தெரிவித்திருந்தனர்.

ஊடகத் தொடர்பு: அமர்நாத், கேட்டலிஸ்ட் பி.ஆர். @ 98418 25081.

Related posts