நடிகையர் திலகம் திரை விமர்சனம்

#நடிகையர்திலகம் #சாவித்ரி #NadigaiyarThilagam
சாவித்ரி என்றால் சட்டென நினைவுக்கு வருவது… மிஸ்சியம்மா மேரிதான்… அதே நேரத்தில் கடைசி காலத்தில் அவர் மதுவுக்கு அடிமையாகி கோமாவில் கிடந்த அந்த காலம்தான் எல்லோருக்கும் நினைவுக்கு வரும்…

ஆனால் நடிகையர் திலகம் திரைப்படம்… சிறு வயது முதல் அவரது அந்திமகாலம் வரை அலசுகின்றது..
சென்னைக்கு வந்து 50 பைசா குதிரை வண்டிக்கு பேரம் பேசி சென்ற சாவித்ரி குடும்பம் தமிழகத்தில் உச்ச நடிகர்கள் அவரது கால் ஷீட்டுக்காக காத்திருந்தது , திருமணமாகி குழந்தை உள்ள ஜெமினிகணேசனை காதலித்து பிரச்சனைகளை சந்தித்தது வரை உண்மைக்கு கொஞ்சமே கொஞ்சம் நெருக்கமாக பதிவு செய்து இருக்கின்றார்கள்.

பயோகிராபி திரைப்படங்கள் தமிழ் திரைப்படங்களில் மிக மிக குறைவு.. ஆனால் இப்படி சில ஆளுமைகளின் வாழ்க்கையை திரைப்படங்களாக எடுக்க வேண்டும் என்பது என் ஆசை.. அதனை இந்த திரைப்படம் ஓரளவுக்கு பூர்த்தி செய்து இருக்கின்றது என்றே எண்ணுகின்றேன்..

கீர்த்தி சுரேஷ் சான்சே இல்லை.. அவரது கேரியரில் இந்த ஒரு படம் எப்போதும் அவர் புகழ்பாடிக்கொண்டு இருக்கும் என்பதில் ஐயம் இல்லை. சின்ன வயதில் பாவடை சட்டை போட்டுக்கொண்டு தியேட்டரில் படம் பார்க்கும் போது போடும் குதியாட்ட துள்ளல், சாவித்ரியாக மாறி காட்சிக்கு காட்சி ஸ்கோர் செய்துக்கொண்டு இருக்கின்றார்…

துல்கருக்கு ஜெமினி வேடம் மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்.. ஜெமினியின் ஈகோதான் சாவித்ரியின் அதள பாதாள சரிவுக்கு காரணம் என்று இந்த படம் சித்தரிக்கின்றது… ஆனாலும் அவர்களுக்குள் இருந்த அந்த 20 வருட காதல் உண்மை… அந்த காதல் வாழ்க்கையே தனக்கு போதுமானது என்று சாவித்திரி ஒரு பேட்டியில் சொல்வது போல காட்சி அமைத்தது அழகு,
சமந்தா சான்சே இல்லை… அதுவும் அந்த கடைசி காட்சியில் அசத்தி இருக்கின்றார்…

விஜயதேவரகொண்ட அவரது பாத்திரத்தை மிக சிறப்பாக செய்து இருக்கின்றார்..

படத்தின் மிக சிறப்பான விஷயம் ஆர்ட் டைரக்டர் காஸ்ட்யூம்டிசைனர் கேமராமேன் எல்லோரும் மிக சிறப்பாக நடிகையர் திலகம் திரைப்படத்துக்கு பணி புரிந்து இருக்கின்றார்கள்…

மைனஸ் என்று பார்த்தால் லிப் சிங் சுத்தமாக இல்லை.

முழுக்க முழுக்க தெலுங்கு இண்டஸ்ட்ரி பக்கமே சாவித்திரியின் கதை சுத்திக்கொண்டு இருப்பது
என்று சொல்லிக்கொண்டு போகலாம்..

படம் முடியும் போது உங்கள் கண்களில் கண்ணீர் அல்லது மனம் முழுக்க இனம் புரியாத பாரம் உங்களை கண்டிப்பாக அழுத்தும் என்பது உண்மை

இந்த திரைப்படம் பார்த்தே தீரவேண்டிய திரைப்படம்.

Related posts